Published : 29,May 2018 07:12 AM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இதில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைப்பெற்றது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச்சம்பவத்தில் 13பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கை தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நேற்று வெளியானநிலையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறைத் தலைவர் டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.