
தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அரசாணையை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தூத்துகுடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மக்களின் உணர்வை மதித்து ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஆலையை மூட உத்தரவிட முடியுமா என்ற கேள்விக்கு, ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்தவிதமான தடையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை. வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.