Published : 28,May 2018 11:46 AM

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியீடு

TN-government-issue-GO-to-close-Sterlite-Plant-Permnanetly

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆலை தொடர்ந்து செயல்பட்டால் தூத்துக்குடியில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்