Published : 27,May 2018 01:51 PM
பொருளாதார வளர்ச்சி தேவை; அதை விட முக்கியம் அமைதி, ஆரோக்கியம், நிம்மதி: விவேக்

தான் மனம் மிக சோர்ந்து போய் இருப்பதாகவும் தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள நாட்கள் ஆகலாம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைகளில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர்கள் பலரும் ஒன்றுகூடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசியிருந்தனர். இந்நிலையில் நடிகர் விவேக் தான் மனம் மிக சோர்ந்து போய் இருப்பதாகவும் தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள, நாட்கள் ஆகலாம் என கூறியுள்ளார்.
இதுபற்றி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள விவேக், ‘ஏன் tweet செய்வதில்லை என்று கேட்கிறார்கள். மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது . தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள நாட்கள் ஆகலாம். சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களைக் கீறி விட்டு விட்டனவே’ என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய இன்னொரு பதிவில் ‘தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கலாம்! நல்லதே. ஆனால் ஒன்றை நினைவில் கொள்க. காயங்கள் ஆறினும் தழும்புகள் இருக்கும். இனி எப்போதும் எங்கும் துயரம் வேண்டாம். பொருளாதார வளர்ச்சி தேவைதான். ஆனால் அதை விட முக்கியம் அமைதி ஆரோக்கியம் நிம்மதி’ என குறிப்பிட்டுள்ளார்.