[X] Close

துப்பாக்கிச்சூட்டை திசை திருப்பவே ஜெ. ஆடியோ வெளியீடு - மு.க.ஸ்டாலின் 

Stalin-talk-about-Jayalalitha-audio-issue

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசை திருப்பவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மூலம் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக திமுக செயல்தவைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா அடுத்த சில நாள்களில், அதாவது செப்டம்பர் 27ம் தேதி பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடும் மூச்சுத்திணறலுக்கு மத்தியிலும், தான் பேசுவதை ஜெயலலிதா பதிவு செய்யச் சொன்னதாகக் கூறி, அதை பதிவு செய்ததாக விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் கூறியிருந்தார். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தவைவர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசை திருப்பவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மூலம் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவை கூடி முடிவு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close