[X] Close

“உயிரோடு இருக்கும்போது இல்லாத கண்ணியம் தற்போது ஏன்?” -உயர்நீதிமன்றம்

Thoothukudi-issue--Chennai-High-Court--question-against-government

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்டால் அவர்களிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


Advertisement

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை வரும் 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அது வரை உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதனால் உடல்களை ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, உடல்கூறு செய்யப்பட்ட உடல்களை பாதுகாத்து வைப்பதால், உயிரிழந்தவர்களின் கண்ணியம் பாதிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. உறவினர்கள் கேட்டால், உடற்கூராய்வு செய்யப்பட்ட உடல்களை ஒப்படைக்க வேண்டும் என பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அதனையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, உயிரோடு இருக்கும் போது காக்கப்படாத கண்ணியத்தை தற்போது அரசு காக்க வேண்டும் எனக் கூறுவதாக தெரிவித்தார். மேலும், இதுவரை உடல்களை வாங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், அரசுக்கு வந்துள்ளதாக கூறப்படும் கடிதம் மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பட்டது. அதனையடுத்து, நேற்றைய உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம், மே 30ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. அன்றைய தினம் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கும், அரசின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்கவும் மனுதாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close