[X] Close

“என் உயரத்திற்கு கதாநாயகி கிடைக்கவில்லை” தினேஷ் மாஸ்டர் ஃபீலிக்

dance-master-dinesh-interview

‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ். பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது 'ஒரு குப்பைக் கதை' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.  இதில் கதாநாயகியாக ‘வழக்கு எண்’ நாயகி மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார். 


Advertisement

நாளை மே-25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து தினேஷ் மாஸ்டர் பகிர்ந்து கொண்டார். “சின்ன வயதிலேயே எனக்குள் இருந்த நடனத்திறமையை கண்டுபிடித்தது என் சகோதரர்கள்தான். என் அப்பாவும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல இயக்குனர்களிடம் வாய்ப்புக் கேட்க அலைந்தவர். என் சகோதரர்களின் நண்பர்கள் மூலமாக எனக்கு பிரபுதேவா மாஸ்டரின் தம்பியான நாகேந்திர பிரசாத்தின் நட்பு கிடைத்தது. அது படிப்படியாக வளர்ந்து ராஜூ சுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களின் அறிமுகம் அளவுக்கு போனது. 


Advertisement

அப்படியே கூட்டத்தில் ஒருவனாக ஆடிக்கொண்டிருந்த என்னை ஒருகட்டத்தில் ‘மனதை திருடிவிட்டாய்’ மூலம் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார் பிரபுதேவா. அதன்பின் விஜய்யின் ‘ஆள் தோட்ட பூபதி’ பாடல் என் வாழ்வில் விளக்கேற்றியது. இறைவன் அருளால் நடன இயக்குனராக இத்தனை வருடம் சீராகப்போய்க் கொண்டிருக்கும் எனது பயணத்தில் இப்போது நடிகராக ஒரு புது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.  

ஒருமுறை இயக்குனர் அமீரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது அங்கே இயக்குனரும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் தயாரிப்பாளருமான அஸ்லம் வந்திருந்தார். அவர்தான் இந்தக்கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என கூறினார். இத்தனைக்கும் அது இயக்குனர் அமீருக்கு சொல்லப்பட்டு அவர் நடிக்க மறுத்தக் கதை.. அதனால் ஆரம்பத்தில் தயங்கினாலும் பின் என் மனைவியின் ஆலோசனைப்படி இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். அதுவும் கூட, இது வழக்கமான ஹீரோ படம் என்றால் நடிக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி வைத்திருப்பேன். ஆனால் இந்தக் கதை என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது.  


Advertisement

இந்தப்படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். குப்பை வண்டிகள் கடந்து சென்றால் மூக்கை பொத்திக் கொள்வார்கள். நான் அப்படி செய்வதில்லை. பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப்படத்தில் நடித்தேன். என் உயரத்திற்கு கதாநாயகி கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படியே  வந்தாலும் கதாநாயகியின் கேரக்டரை கேட்டுவிட்டு, அதில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஒரு வழியாக ‘வழக்கு எண்’ மனிஷா எனக்கு ஜோடியாக கிடைத்தார். அவரும் என்னைவிட இரண்டு இன்ச்தான் அதிகம். 

நடிகனாக ஆகிவிட்டதால் நடனத்தை குறைத்துக்கொண்டு விடுவீர்களா என கேட்கிறார்கள். எப்போதும் பழசை மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன்நான்” என்கிறார் தினேஷ். 
 


Advertisement

Advertisement
[X] Close