
முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியைத்தான் என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஸ்டாலின், கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்டோர் நேற்று மருத்துவமனை சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்தும் இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியை அனுமதித்தது யார்? தூத்துக்குடியில் தற்போது போலீசை குவிக்கும் அரசு முன்னரே ஏன் அனுப்பவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “முடக்கப்பட வேண்டியது இணையதளங்கள் அல்ல, மாநில அரசுதான். மாற்றப்பட்டிருக்க வேண்டியது ஆட்சியர், எஸ்.பி. அல்ல; அதிமுக ஆட்சியே” என்று அவர் கூறினார்.
இதனிடையே, “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். மக்களை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்காது” என்று அதிமுக எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான கூறியுள்ளார்.