Published : 23,May 2018 06:39 AM

தூத்துக்குடி கலவரம்: காயமடைந்தவர்களுக்கு கமல் நேரில் ஆறுதல்

Kamal-Hassan-visited-the-injured-people-who-in-the-shooting-of-Tuticorin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைப்பெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு  உள்ளிட்டவ நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச்சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில், தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்