தூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு

தூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு
தூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படக்கூடாது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அப்பகுதி மக்களால் நடைபெற்று வரும் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியது. இதையொட்டி பெரிய அளவிலான போராட்டத்திற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்ல வில்லை. கடையடைப்பு போராட்‌டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி போராட்டக்களம் இறங்கிய மக்களில் ஒருபகுதியினர், மடத்தூர் கிராமத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடச்சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேநேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து ஏராளமானோர் கறுப்புக்கொடியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். சிறுஅளவில் போராட்டத்தை எதிர்பார்த்து 2 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள், பேரணியாக மா‌ட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். வரும் வழியில் சிலர் கல்வீச்சில் ஈடு‌பட்ட நிலையில், வன்முறை வெடித்தது. ஜீப்புகள், இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன.

பேரணியாக‌ வந்தவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் சென்ற நிலையில், அரசுத்துறை கட்டடங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரம் அதிகரித்ததையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மனிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச் சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஒட்டாபிடாரத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடந்த, மிதிவண்டி, இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கத்தி,கம்பு, கற்கள், அரசியல் ,சாதி கொடிக் கம்புகள், அபாயகரமான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com