காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..!

காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..!
காவிரி வழக்கு.. முடிவு அல்ல, ஆரம்பம்..!

’காவிரி மேலாண்மை ஆணையம்’ ( Cauvery Management Authority ) என்ற அமைப்பை உருவாக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதினான்கு பக்க வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் ஆட்சேபணையின் காரணமாக ‘இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் ‘ என்ற பகுதி வரைவுத் திட்டத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இந்த ஆணையத்தின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்ததை டெல்லியில் அமைக்கப்படும் என மாற்றியிருக்கிறார்கள். இந்தத் திருத்தங்களை நாம் வரவேற்கலாம். ஆனால் இந்த அமைப்பின் பெயர் ‘ காவிரி மேலாண்மை ஆணையம் ‘  என இருக்குமென்று மத்திய அரசின் வரைவுத் திட்டம் கூறியுள்ளது.

மத்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புக்கு ‘ காவிரி மேலாண்மை வாரியம்’ எனப் பெயரிடவேண்டும் எனத் தமிழகத் தரப்பு வற்புறுத்தியபோது அதைக் கர்நாடகாவோ, கேரளாவோ, புதுச்சேரியோ எதிர்க்கவில்லை. மத்திய அரசுத் தரப்பில் வாதாடிய தலைமை வழக்கறிஞரும்கூட தங்களுக்கு அதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை எனக் கூறினார். ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ எனப் பெயர் வைக்கப்போகிறார்கள். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத் தமிழக அமைச்சர்களும் பெருமைபட்டுக்கொண்டார்கள். ஆனால் மத்திய அரசு எந்தவொரு காரணமும் சொல்லாமல் இப்போது ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது.

மத்திய அரசால் உருவாக்கப்படும் இந்த அமைப்பு ஒரு சட்டமுறையான அமைப்பாகும் ( Stautory Body ). அத்தகைய அமைப்புகள் எல்லாமே பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி , விதிகளை உருவாக்கி அதற்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும். வாரியம், ஆணையம், கழகம் என சட்டமுறையான அமைப்புகள் பலவகைப்படும். அவை ஒவ்வொன்றுக்கும் அவற்றின் பெயருக்கேற்ப அதிகாரங்களும், கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. வாரியம் என்பதை ஆணையம் என மாற்றுவது வெறுமனே பெயர் மாற்றம் மட்டும் அல்ல, அது அதிகார மாற்றமும் ஆகும். இந்திய எஃகு ஆணையம், இந்திய விமான நிலைய ஆணையம் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பல ஆணையங்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசுக்குச் சொந்தமான சட்டமுறையான அமைப்புகளே தவிர சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்புகள் அல்ல. 
 
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது மட்டுமின்றி, அந்த அமைப்பு “ மத்திய அரசைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களையும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட சுதந்திரமான அதிகாரம்கொண்ட ( independent in character ) ஒரு அமைப்பாக இருக்கவேண்டும் “ எனவும் கூறியது (காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, தொகுதி 5, பக்கம் 223). அதனடிப்படையில் அது முன்வைத்ததுதான் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ ஆகும். தற்போது மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘ காவிரி மேலாண்மை ஆணையம்’ ஒரு சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்குமா அல்லது மத்திய அரசு சொல்வதை நிறைவேற்றுகிற ஒரு அமைப்பாக மட்டுமே இருக்குமா என்ற ஐயம் நமக்கு எழுகிறது. 

நடுவர் மன்றம் கூறியவற்றிலிருந்து பலவற்றை வரிக்குவரி அப்படியே எடுத்துப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் வரைவுத் திட்டம், அமைப்பின் தலைவர், முழுநேர உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு நடுவர் மன்றம் வரையறுத்த  தகுதியை மட்டும் ஏனோ குறைத்துவிட்டது. மேலாண்மை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் நீர்ப் பாசனத்துறையில் வல்லுனராகவும் தலைமைப் பொறியாளராகவும் 20 வருட அனுபவம் கொண்டவராகவும் இருக்கவேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது ( பக்கம் 224 ) . அவர் மூத்த, திறமைவாய்ந்த அதிகாரியாக இருக்கலாம் அல்லது செயலாளர், கூடுதல் செயலாளர் என்ற நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கலாம் என அந்தத் தகுதிகளை மத்திய அரசின் வரைவுத் திட்டம் தளர்த்தியிருக்கிறது.

மத்திய அரசால் நியமிக்கப்படும் இரண்டு முழுநேர உறுப்பினர்களில் ஒருவர் நீர்ப் பாசன பொறியாளராக 15 வருட அனுபவமும் தலைமைப் பொறியாளர் என்ற நிலைக்குக் குறையாத பணித் தகுதியும் பெற்றிருக்கவேண்டும் ; இன்னொருவர் 15 வருட கள அனுபவம் கொண்ட மதிப்புவாய்ந்த வேளாண் வல்லுனராக இருக்கவேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 225) அதை, ஒருவர் மத்திய நீர் பொறியியல் துறையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், இன்னொருவர் வேளாண் அமைச்சகத்தில் ஆணையர் பதவியில் இருப்பவர் என மத்திய அரசின் வரைவுத் திட்டம் மாற்றியமைத்திருக்கிறது. தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். தேவையெனில் அதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. முழுநேர உறுப்பினர்களுக்கு அதை அப்படியே வைத்துக்கொண்டுள்ள மத்திய அரசு தலைவரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் என மாற்றியுள்ளது. 

இந்த அமைப்புக்கான செயலாளர் இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களையும் சேராத ஒருவராக இருக்கவேண்டும் அவரை வாரியம்தான் நியமிக்கும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால் அவரை மத்திய அரசு நியமிக்கும் என வரைவுத்திட்டத்தில் மத்திய அரசு மாற்றியிருக்கிறது. 
இந்த மாற்றங்களின் மூலம் தகுதிக் குறைப்பு மட்டும் செய்யப்படவில்லை. இந்த அமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபணை ஏதும் தெரிவிக்கப்பட்டதா? என்பதைத் தமிழக அரசுதான் விளக்கவேண்டும்.

உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.75 டிஎம்சி யைக் குறைத்த பின்பு மீதியுள்ள 177.25 டிஎம்சியை நடுவர் மன்றம் குறிப்பிட்டிருக்கும் மாதாந்திர அளவில் விகிதாச்சாரப்படி குறைத்துக்கொள்ளவேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால் கர்நாடகத் தரப்பு வழக்கறிஞரோ ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்களின் கணக்கில் அதைக் குறைக்கப் போகிறோம் எனப் பேட்டியொன்றில் கூறியிருந்தார். அந்த நான்கு மாதங்களில்தான் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிடும். அப்போது தண்ணீர் தேவை அதிகம் இருக்காது. அந்த உண்மை தெரிந்துதான் நடுவர் மன்றம் கர்நாடகா நமக்குத் தரவேண்டிய மாதாந்திர தண்ணீர் அளவை நிர்ணையித்திருக்கிறது. மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபின் முதலில் எழும் பிரச்சனையாக இதுவே இருக்கும். எனவே உச்சநீதிமன்றமே மாதாந்திர அளவு இதுதான் எனக் கூறிவிட்டால் பிரச்சனை இருக்காது. இதைத் தமிழ்நாட்டுத் தரப்பில் நீதிமன்றத்தில்  வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ததாகத் தெரியவில்லை.


   
2018 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளுக்குப் பிறகு மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டுக்கு 5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்கவேண்டும். அதில் 4 டிஎம்சி பாக்கி உள்ளது என இரண்டு வாரங்களுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் வழக்கறிஞர் தெரிவித்தார். தலைமை நீதிபதியும் கோபமாக ’ உடனே 4 டிஎம்சி தண்ணீர் கொடுங்கள்’ என கர்நாடகாவுக்கு வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆனால் அடுத்த விசாரணையின்போது ’இப்படியான சின்னச்சின்ன விஷயங்களில் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்த முடியாது அதையெல்லாம் ‘ஸ்கீம்’ அமைத்ததும் அதில் பேசிக்கொள்ளுங்கள்’ என அவரே கைவிரித்துவிட்டார்.

உச்சநீதிமன்றம் இன்றோ ( 18.05.2018 ) நாளையோ இதில் தீர்ப்பு வழங்கிவிட்டால் அத்துடன் இந்த சிக்கல் தீர்ந்துவிடும், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என்பதுபோன்ற தவறான நம்பிக்கையைத் தமிழக அமைச்சர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்தச் சட்டம், 2002 பிரிவு 6(7)ன்படி இந்த அமைப்புக்கான திட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அங்கு ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டால் அவற்றையும் உள்ளடக்கி மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு சட்டமாக்கப்பட்டு அப்புறம்தான் நடைமுறைக்கு வரும். அந்த அமைப்புக்கான சட்டமும், விதிகளும் இயற்றப்பட்டு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாவரும் நியமிக்கப்பட்ட பிறகே காவிரி நதிநீர்ப்  பங்கீட்டில் அது கவனம் செலுத்தமுடியும். அதற்கு இன்னும் ஒரு ஆண்டுகூட ஆகலாம். அதற்குள் பாராளுமன்றத் தேர்தலேகூட வந்துவிடலாம். சுருக்கமாகச் சொன்னால் காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிகிறது, ஆனால் பாராளுமன்றத்தில் இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறது.   

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com