Published : 16,May 2018 11:35 AM

கர்நாடக களேபரம் - காங்கிரசின் ஆயுதத்தை தீர்மானித்த பாஜக 

Karnataka-election-results-2018--BJP-offered-JD-S--MLAs-Rs-100-crore--claims-Kumaraswamy

நாடே எதிர்பார்த்த கர்நாடகத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. ஆரம்பம் முதலே பாஜகவும் காங்கிரஸும் மாறிமாறி முன்னிலை வகித்தாலும் ஒரு கட்டத்தில் பாஜக கை ஓங்கியது. கிட்டத்தட்ட பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு வென்று விட்டது என்றே பலரும் நினைத்தார்கள். ஏன் ஸ்டாலின் முதல் மம்தா வரை பாஜவிற்கு வாழ்த்தும் சொல்லிவிட்டார்கள். பாஜக பெரும்பான்மை பெரும் நிலையில் இருந்ததால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை அது தன் பக்கம் இழுக்க முயற்சிக்காது என்றும் குதிரை பேர பேச்சுகளில் ஈடுபடாது என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.  

                                               

ஆனால் பிற்பகலுக்கு பின் தேர்தல் களம் வேறுவிதமாக சூடுபிடிக்கத் தொடங்கியது. பாஜக மெல்ல மெல்ல குறைந்து 100 சீட்டிற்கே திணறியது. கங்கிராஸ் மெல்ல உயர்ந்து 70 சீட்டுக்கு மேல் வந்தது. அரசியல் ஆட்டத்தில் அனல் பற்றிக்கொண்டது. ஒருசில மணி நேரங்களில் பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிய வர, அடுத்து என்ன நடக்கும் என பலரும் பதறினார்கள். அந்த நேரத்தில்தான் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது. மஜத கட்சிக்கு காங்கிரஸ் முழு ஆதரவை தரும் என்றார் காங்கிரஸ் மாநிலத்தலைவர் பரமேஸ்வரர். இதைதான் ஆகச்சிறந்த பழிவாங்கல் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். மணிப்பூர், கோவாவில் தங்களை ஆட்சியமைக்கவிடாமல் சதிசெய்த பாஜகவை கர்நாடகாவில் ஆட்சியமைக்கவிடாமல் காங்கிரஸ் தடுத்ததுள்ளது. குமாரசாமியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி காங்கிரசில் இணைந்து முதல்வர் ஆன சித்தராமய்யா, இன்று அதே குமாரசாமியை முதல்வராக்க ஆளுநரை சந்தித்து ஆதரவு கோரினார். இதுதான் அரசியல் வட்டத்தில் நடந்த ஹைலைட் திருப்பம்.

ஆட்சி அமைக்கும் அளவுக்கு யாருக்கும் சீட்டுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூடுதல் எம்எல்ஏக்களை கொண்டுள்ள கட்சியாக பாஜக உள்ளதால் நம்மைதான் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என்று அக்கட்சி கனவில் இருந்தபோது காங்கிரஸின் இறுதிகட்ட ‘மூவ்’ அவர்களின் கனவைக் கலைத்தது. பாஜக சொல்லிக் கொடுத்த பாடம் அவர்களுக்கு எதிராகவே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்றார்கள் நடுநிலையாளர்கள். கடந்தாண்டு நடந்த மணிப்பூர் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 21, காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தன. ஆனால் அங்கு அதிக எம்எல்ஏக்களை வைத்திருந்த காங்கிரசை வரவிடாமல் பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி அமைத்து. அதே போலதான் கோவாவும். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க தேவை 21. ஆனால் அங்கும் பெரும்பான்மை இல்லாத பாஜகதான் ஆட்சி அமைத்தது.

            

இதைதான் நேற்று காங்கிரசும் கையில் எடுத்தது. இறுதி நிலவரப்படி பாஜக 104 இடங்களும், காங்கிரஸ் 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இதனையடுத்து, பாஜகவும், காங்கிரஸ்-மஜதவும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆளுநர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்த கூட்டணிக்கு 115 உறுப்பினர்களின் ஆதரவு இருந்த போதிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லை. தேர்தலுக்கு முந்தையக் கூட்டணி இருந்திருந்தால் பெரும்பான்மை உள்ள அந்தக் கூட்டணியைதான் ஆளுநர் கட்டாயம் ஆட்சியமைக்க அழைத்திருப்பார். அவ்வாறு இல்லாமல் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி இது என்பதால் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது ஆளுநரின் விருப்பத்திற்கே உட்பட்டது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே தனிப்பெரும் கட்சியா அல்லது பெரும்பான்மை உள்ள கூட்டணியா என்ற முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் எடியூரப்பாவையே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

                                       

அப்படி ஒருவேளை எடியூரப்பாவையே அழைத்து ஆட்சி அமைக்க சொன்னால் கூட, இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூப்பிக்க வேண்டிய கட்டாயம் எடியூரப்பாவிற்கு ஏற்படலாம். இப்போதைக்கு பெரும்பான்மை எண்ணான 112 எட்ட முடியுமா? அப்படியே ஒருவேளை அரசியல் விளையாட்டுக்கள் மூலம் அந்த மேஜிக் எண்ணை எட்டினாலும் கூட அதை எவ்வளவு நாட்கள் தக்க வைக்க முடியும் என்பது சந்தேகம். ஒருவேளை அதில் பெருபான்மை நிரூபிக்க எடியூரப்பா தவறும் பட்சத்தில் அடுத்த வாய்ப்பாக காங்கிரஸ் ஆதரிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம். ஆனால் அதிலும் இப்போது சிக்கல் எழுந்து இருக்கிறது. காங்கிரஸ் கூட்டிய சட்ட மன்ற  உறுப்பினர்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டிய சட்ட மன்ற  உறுப்பினர்கள் கூட்டத்தில் 2 பேர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் கட்சியை உடைப்பதற்கு பாஜக‌ தொடர்ந்து முயற்சித்து வருகிறது, 100 கோடி ரூபாய் தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என எம்எல்ஏக்களுக்கு பாஜக ஆசை காட்டுவதாக குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

எது நடக்க கூடாது என சில பத்திரிகையாளர்களும், நடுநிலையாளர்களும் விரும்பினார்களே, அந்தப் பேரம் திரைமறைவில் நடக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுக்கள் இதை நிரூபிக்கிறது. ஆனால் என்ன இருந்தாலும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் இவ்வளவு தூரம் இறங்கியிருக்க வேண்டியதில்லை என்கிறனர் நெட்டிசன்கள். கோவாவிலும், மணிப்பூரிலும் இப்படியான விளையாட்டை விளையாடி அங்கு தனது சாமர்த்தியத்தால் ஆட்சியை பிடித்தது பாஜக. ஆனால் கர்நாடகாவில் பாஜகவின் சூத்திரத்தையே காங்கிரஸ் கையில் எடுத்தாலும் இங்கு அந்தக் கட்சி ஆட்சியமைக்கவில்லை. வேறு கட்சிக்கு அது ஆட்சியை தாரைவார்த்திருக்கிறது, அதுவும் எந்த நிபந்தனையும்யின்றி. ஒருவேளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் குமாரசாமி ஆட்சியமைக்கலாம். 

ஒருவேளை சில மாதங்களில் (கெஜ்ரிவாலுக்கு கொடுத்த ஆதரவை விலக்கியதுபோல்) காங்கிரஸ் குமாரசாமிக்கு தரும் ஆதரவை விலக்கினால் குமாரசாமி மீண்டும் பாஜக கூட்டணிக்கு போய் ஆட்சியை தொடரக்கூட செய்வார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு சமீபத்திய உதாரணம். மொத்தத்தில் கர்நாடக அரசியல் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு அரசியல் கட்சியின் தந்திரம் என்பது தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைப்பது மட்டுமோ, வெற்றி பெறுவது மட்டுமே அல்ல; தேர்தலுக்கு பின் நடக்கும் அரசியல் ஆட்டங்களில் தன்னை எவ்வாறு முன்னிறுத்தி ஆதிகாரத்தை சுவைக்க முயற்சிக்கிறது என்பதில்தான் உள்ளது. அதை கர்நாடகாவில் ராகுல் செய்வாரா...? அல்லது மோடி செய்வாரா...? அந்த அரசியல் சூத்திரதாரியை தேடிக் கொண்டிருக்கிறது கர்நாடக அரசியல் களம். 
 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்