Published : 15,May 2018 08:30 AM

காங்கிரசுக்கு கர்நாடகா சொல்லும் பாடம் 

congress-verdict-Karnataka-Election

கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவுக்குப் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பல பாஜக முன்னிலை பெறும் எனக் கூறினாலும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே வித்தியாசம் இருக்கும் என்று கூறின. ஆனால், இப்போதோ இரண்டு கட்சிகளும் வென்றிருக்கும் இடங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே 50 தொகுதிகளுக்கும் மேல் இடைவெளி வந்துள்ளது. அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என சித்தாராமையா கூறிவந்தார். அதற்கு அவசியம் இல்லாத வகையில் கர்நாடக மக்கள் தீர்ப்பளித்துவிட்டனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகாவில் ஒரே கட்சி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்ததில்லை. அந்த நிலையை இம்முறை சித்தராமையா மாற்றுவார் என்று பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கர்நாடகா மாநில மக்கள் தங்களது வழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. காங்கிரசுக்கு அடுத்ததாக இம்முறை பா.ஜ.க.வுக்கு அவர்கள் வாய்ப்பளித்து இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக பல கவர்ச்சிவாதத் ( பாப்புலிச ) திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டியது. அதனால், அங்கே அக்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், கர்நாடக மக்கள் கவர்ச்சிவாதத் திட்டங்களுக்குப் பலியாகவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. 

கர்நாடக தேர்தல் களத்தைக் கணிப்பதிலும், கையாள்வதிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வும், அதிலிருந்து பிரிந்து போய் தனிக்கட்சி ஆரம்பித்த எடியூரப்பாவும் தனித்தனியே போட்டியிட்டார்கள். அதனால், அவர்களது வாக்கு வங்கி பிளவு பட்டு அதனிடையில் காங்கிரஸ் வெற்றியைப் பெற முடிந்தது. இதைப் புரிந்து கொண்ட பா.ஜ.க. தலைமை, எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது. அதன்மூலம் தான் இழந்த வாக்கு வங்கியை மீட்டுக் கொண்டது. அதனுடைய விளைவை 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலேயே பார்க்க முடிந்தது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 17 இடங்களை வென்றது. அப்போது பாஜக பெற்ற வாக்குகள் 43% ஆகும். அது காங்கிரஸ் பெற்ற வாக்குகளைவிட 2.2% கூடுதலாக இருந்தது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் பா.ஜ.க. 133 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆட்சி அமைத்து ஒரு ஆண்டுக்குள்ளாகவே பா.ஜ.க.விடம் தனது பெரும்பான்மையான தொகுதிகளை காங்கிரஸ் பறிகொடுத்தபோதே அது விழித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைமை சித்தராமையா சொன்னதையெல்லாம் அப்படியே நம்பி விட்டது என்றே தோன்றுகிறது. அதனால்தான், அதற்கு மாறாக வேறு எந்த முயற்சியையும் அது மேற்கொள்ளவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்க தயாராக இருந்தும்கூட காங்கிரஸ் அதில் ஆர்வம் காட்டவில்லை. 
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இது கர்நாடகா மாநிலத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, 2019ல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்று பலராலும் கணிக்கப்பட்டது. அதை பா.ஜ.க. ’சீரியஸாக’ எடுத்துக்கொண்டு அதற்கான உத்திகளை வகுத்தது. தேசிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் முகாமிட்டு மாதக்கணக்கில் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியோ வழக்கமான முறையிலேயே தேர்தலை அணுகியது. பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட அதிகமான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியது அதற்கொரு உதாரணம். 

2013 தேர்தலில் காங்கிரசோடு இணைந்து பணியாற்ற முன் வராத கட்சிகள்கூட இந்தத் தேர்தலில் காங்கிரசோடு இணைந்து பணியாற்ற தயாராக இருந்தார்கள். ஆனால், காங்கிரஸ் அதை கண்டுகொள்ளவில்லை. உதாரணமாக, மிகக் குறைந்த செல்வாக்கு இருந்தாலும், இடதுசாரி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டும். அது அவர்களுக்கு தார்மீக பலத்தை கொடுத்திருக்கும். பிரச்சார பலத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கும். அதைப்போலவே, முஸ்லிம் கட்சிகளும் காங்கிரசோடு சேர்ந்து செயல்படத் தயாராக இருந்தன. அதையும், காங்கிரஸ் பொருட்படுத்தவில்லை. இந்தக் கட்சிகளின் ஆதரவு இருந்திருந்தால் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்தக் கட்சிகளோடு சேர்ந்திருந்தால் இன்னு 20 இடங்களிலாவது காங்கிரஸ் வென்றிருக்கும். அப்படி வென்றிருந்தால் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியிருக்காது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி அங்கே அமைந்திருக்கும். 

தலித் மற்றும் மதச் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சித்தராமையா அக்கறை காட்டவில்லை. மாறாக பாஜகவின் மதவாத அணுகுமுறைகளையே அவர் காப்பியடிக்க முற்பட்டார். ராகுல் காந்தியை மடங்களுக்கும் கோயில்களுக்கும் இழுத்துக்கொண்டு அலைந்தார். வகுப்புவாத அரசியலில் பாஜகவோடு போட்டிபோட முனைந்த அவரது அணுகுமுறை இந்துத்துவ வாக்குகளை காங்கிரசுக்குக் கொண்டுவரவில்லை, மாறாக காங்கிரசின் மரபான வாக்குவங்கியான மதச்சார்பற்ற வாக்காளர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவதில் சென்று முடிந்தது. பா.ஜ.க. இங்கே அனைத்து வகையான தில்லுமுல்லுகளையும் கையாண்டது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆட்சி அதிகாரம் கையில் இருந்த போதிலும் அதை சரியான முறையில் எதிர்த்து முறியடிப்பதற்கான யுக்திகளை காங்கிரஸ் வகுக்கத் தவறி விட்டது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விஷயத்தில் பா.ஜ.க.வை அம்பலப்படுத்தவோ, அதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரசால் முடியவில்லை.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தைப்போல தனது வாக்கு வங்கியை காங்கிரஸ் தக்க வைத்துக்கொண்டிருந்தால் இன்று கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருக்காது. இதற்கு சித்தராமையா மட்டுமல்ல ராகுல் காந்தியும்தான் பொறுப்பு. காங்கிரஸ் தனது உறக்கத்தைக் கலைத்துக்கொண்டு இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சியை உடனே துவக்கவேண்டும். மாநிலக் கட்சிகளோடும் இடதுசாரி கட்சிகளோடும் இணக்கமான உறவை ஏற்படுத்தி மூன்றாவது அணி அமையாமல் தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் காங்கிரஸ் 2019 பொதுத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும்.