[X] Close

ஃபேஸ்புக் பிரம்மாவின் பிறந்த நாள் : மார்க் என்ற சகாப்தம்!

Facebook-founder-Mark-Zuckerberg-Birthday-on-Tomorrow

தற்போதைய காலக்கட்டத்தில் உலக முழுவதும் உள்ள மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருப்பது ஃபேஸ்புக். தமிழில் முகநூல். தற்போதைய தலைமுறை இளைஞர்கள் உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் போல, ஆனால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்கமாட்டார்கள் என்று கூறலாம். ஏனெனில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவரை அனைவரையும் ஃபேஸ்புக் கட்டிப்போட்டுவிட்டது. சிலர் விடுமுறை தினங்களில் வெளியே செல்வது, டிவி பார்ப்பது போன்ற எந்த பொழுதுபோக்கையும் மேற்கொள்ளமால், நாள் முழுவதும் கணினி அல்லது செல்போன் முன் உட்கார்ந்து கொண்டு நேரத்தை போக்க முடியும் என்றால் அதற்குக் காரணம் ஃபேஸ்புக். 

நண்பர்கள், உறவினர்கள், புதிய தகவல்கள், செய்திகள், ஸ்வாரஸ்ய வீடியோக்கள், கதைகள், கட்டுரைகள், மருத்துவம், தத்துவங்கள், கேம்ஸ் என ஃபேஸ்புக்கில் இல்லாத பொழுதுபோக்கே இல்லை. நேரம் போவதே தெரியாமல் சட்டென ஓடிவிடும். வெளியே சென்றாலும், ஏதேனும் நிகழ்ச்சிகள் என்றாலும் அதை உடனே பலரும் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டுவிடுகின்றனர். சினிமா முதல் கல்யாணம் வரை அனைத்தும் ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. வேலை கிடைத்துவிட்டால், வேலையை விட்டுவிட்டால், காதல் மலர்ந்து விட்டால், காதல் முடிந்துவிட்டால் இவ்வாறு சோகம், மகிழ்ச்சி என அனைத்தையும் ஃபேஸ்புக்கில் பார்க்க முடியும். 


Advertisement

இன்றைய இளைஞர்களுக்கு பல தகவல்களை ஃபேஸ்புக் வழங்குகின்றது. இதில் பல குற்றங்கள், இளைஞர்களை சீரழிக்கும் செயல்களும் உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை. ஃபேஸ்புக் காதல் மூலம் தற்கொலை செய்தவர்களே ஏராளமானோர். ஃபேஸ்புக் அல்ல இணையதளம் என்றாலே நல்லது, கேட்டது என கலந்து தான் இருக்கும். அதில் நாம் தான் பயனுடையவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த அளவிற்கு மக்களின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி அன்று மார்க் ஜூக்கர்பெர்க் என்பவரால் நிறுவப்பட்டது. இவரே ஃபேஸ்புக்கின் பிரம்மா. மார்க் 1984ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸில் பிறந்தார். இவர் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே தனித்தளங்களை தொடங்குவதில் ஆர்வம் கொண்டு திகழ்ந்துள்ளார். இவர் படித்து முடித்த பிறகு மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் வேலைக்கு அழைத்தன. ஆனால் மார்க் ஹார்வெர்டு பல்கலை கழகத்தில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். 

படிக்கும் போது அவருக்கு ஃபேஸ்புக் தளத்தை தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அங்கிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் நினைவுப் புகைப்படங்களை ஆண்டின் முடிவில் பகிர்ந்துக்கொள்வதற்கு நினைவுப் புத்தகம் ஒன்றை கடைபிடித்து வந்துள்ளனர். அதுவே ஃபேஸ்புக் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஹார்வர்டில் பயிலும் போது தனது நண்பர்களுடன் இணைந்து தான் தொடங்கிய தளத்திற்கு ஃபேஸ்புக் என மார்க் பெயரிட்டார். 

பின்னர் மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதை அவர் பரப்பினார். இதையடுத்து கலிபோர்னியாவிற்கு இடம்பெயர்ந்த அவர், அங்கு ஃபேஸ்புக்கிற்காக சிறிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஃபேஸ்புக் அவரை, 2008ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கொண்டு சேர்த்தது. 2009ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கை 350 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தினர். ஃபேஸ்புக்கினால் அபார வளர்ச்சி அடைந்த இவர் மிக விரைவில் வளர்ந்து உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவரானார். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க தேர்தலுக்காக மக்களின் தகவல்களை ஃபேஸ்புக் தனியார் நிறுவங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்புக் மற்றும் மார்க்கிற்கு ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். 

இந்தியத் தேர்தலிலும் இது அரங்கேற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விளக்கங்களை அளித்த மார்க், மன்னிப்பும் கோரினார். தடைகளும், குறைகளும் இருந்த போதிலும், இந்த இளம் வயதில் உலகில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு உதாரணமாய் வளர்ச்சி அடைந்துள்ளவர் என்றால் அது மார்க் தான். பிறந்த நாள் என்றாலே ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவிப்பதும், பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஃபேஸ்புக்கில் பகிர்வதும் வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஃபேஸ்புக்கில் பிறந்த நாளை கொண்டாட வைத்த, ஃபேஸ்புக் பிரம்மாவிற்கு நாளை பிறந்த நாள் என்பதால், அதை ஃபேஸ்புக்கே கொண்டாடும்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close