Published : 16,Mar 2017 03:33 AM
சொந்த ஊரில் முத்துக்கிருஷ்ணன் உடல்: தலைவர்கள் அஞ்சலி

ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த திங்கள்கிழமை டெல்லியில் உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். இதன்பின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்திற்கு முத்துகிருஷ்ணன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சேலம் ஆட்சியர் சம்பத், முத்துக்கிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.