Published : 04,May 2018 07:11 AM

போஸ்டர் முதல் டீசர் வரை அரசியல் அதகளத்துடன் காலா ?

Kaala-film-more-talk-about-the-politics--

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசமும், காலா படம் பேசும் அரசியலும், காலாவின் கருப்பு நிறம் காட்டும் குறியீடுகள். 'கருப்ப பூசிக்கிட்டு வந்தவரு கிரேட்டு' என்ற படலுடன் வரும் காலா, ரசிகர்களை தற்போதய அரசியல் சூழலில், அதிரடிகளுடன் காலா களம் காணப்போகுமோ ? காலா எந்தவகை அரசியலைப் பேசப்போகிறது என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே எழுந்துள்ளது.
அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என யூகங்கள் மட்டும் சுற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே ரஜினிகாந்தின் திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் பொறி பறக்கும். அப்படியிருக்கும்போது, கட்சியின் பெயரை விரைவில் அறிவித்து தீவிர அரசியல் களம் காணப்போகும் சூழலில், ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாக இருக்கிறது காலா. அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துவிட்ட நிலையிலேயே கதை விவாதம் தொடங்கி அனைத்தும் நடைபெற்றதால், நிச்சயம் இது அரசியல் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அது என்னவகை அரசியலைப் பேசப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்‌ மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது.

காலாவில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குச் சென்று அங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆன்மிக அரசியல்தான் தனது பாணி என அறிவித்துவிட்ட ரஜினி, தீவிர இந்துத்வா வகை அரசியலை கையிலெடுக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்தவே டைட்டில், போஸ்டர், டீசர் என எங்கும் கருப்பு நிறம் மிகுந்திருப்பதற்கு காரணம் என்கின்றனர். குறிப்பாய், டீசர் காட்சியில் காட்டப்படும் கருப்புப் பொடி தூவிக் கொண்டாடும் ஹோலிப் பண்டிகைக் காட்சி முக்கிய குறியீடாக கருதப்படுகிறது. ரஜினிகாந்தை இந்துத்வா அரசியலோடு இணைத்து எதிர்மறையாக பேசி வருபவர்களுக்கு பதிலளிக்கும் வகையில்தான் தலித்தியத்தை முன்னிலைப்படுத்தும் வகையில், காலா கதாபாத்திரத்தை இயக்குநர் பா.ரஞ்சித் வடிவமைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனை, சமீபத்தில் வெளியான முதல் தனிப் பாடலின் 'கருப்ப பூசிக்கிட்டு வந்தவரு கிரேட்டு' எனும் வரிகளும் கிட்டத்தட்ட உறுதி செய்கின்றன.

காலா திரைப்படத்தை அமெரிக்கா செல்வதற்கு முன் முழுவதும் பார்த்த ரஜினிக்கு பெரும் திருப்தி ஏற்பட்டிருந்தாலும், தனது ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை முன்னோட்டம் பார்க்கவே இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவில், அரசியல் பற்றிய அதிரடி அறிவிப்புகளும் வர வாய்ப்பிருக்கிறது. ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்களால் காலா திரைப்படத்திற்கு செலவில்லாமல் எக்கச்சக்க விளம்பரம் கிடைத்திருக்கிறது. அதோடு, விரைவிலேயே கபாலி போன்று பிரமாண்ட விளம்பர யுக்திகளை தயாரிப்பு நிறுவனமும் கையிலெடுக்க இருக்கிறது. அதனால், காலாவில் அரசியல், அதிரடி என அதகளம் நிச்சயம் என்கின்றனர் ரசிகர்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்