Published : 28,Apr 2018 03:36 AM

தெறிக்கவிடலாமா? சிஎஸ்கே- மும்பை இன்று மீண்டும் மோதல்

Mumbai-run-into-table-toppers-with-time-running-out

அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டது, சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பையை சந்தித்த சிஎஸ்கே, பிராவோவின் அதிரடியால் முதல் வெற்றியை பெற்றது. அது த்ரில்லிங் வெற்றிதான். ஆட்டம் கைவிட்டுபோன நிலையில் சிஎஸ்கேவை காப்பாற்றினார் பிராவோ!

அதிலிருந்து வெற்றிகளைக் குவித்து வரும் சிஎஸ்கே (6 போட்டி, பஞ்சாப்புடன் ஒரு தோல்வி) புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கிறது. ஆனால் நடப்புச் சாம்பியன் மும்பை, கடைசியில் இருக்கிறது (6 போட்டி, 5 தோல்வி). டாப்பில் இருக்கும் அணியும் கடைசியில் இருக்கும் அணியும் இன்று சந்திக்கின்றன மீண்டும்.

சென்னை அணியில் யாராவது ஒரு வீரர், நின்று மிரட்டி விடுகிறார். முதல் போட்டியில் பிராவோ, அடுத்து சாம் பில்லிங்ஸ், வாட்ஷன் என மிரட்டுகிறார்கள். ராயுடு அனைத்துப் போட்டிகளிலும் அசத்துகிறார், அதிரடியால். விளாசல் மன்னன் ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே-வின் செல்லப் பிள்ளை. அதோடு கேப்டன் தோனி, கடந்த சில போட்டிகளில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கிலி ஏற்படுத்தும் கில்லியாகி இருக்கிறார். அவர் தொட்டால் எல்லை தாண்டுகிறது பந்து. அதனால் பேட்டிங்கில் ஸ்ட்ராங்காக இருக்கிறது சிஎஸ்கே.

பந்துவீச்சில் தாகூர் கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ் என்றாலும்  விக்கெட் வீழ்த்துகிறார். அவரோடு தீபக் சாஹரும் சரியாக வீசுகிறார். சுழலில் இம்ரான் தாஹிர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் வீழ்த்தி அணிக்கு வலு சேர்க்கிறார். தமிழ் சிங் ஆகிப்போன ஹர்பஜன் சிங் அனுபவ வீரர்தான். ஆனால் இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பது டவுட். அவர் இல்லை என்றால் கரண் சர்மா களமிறங்குவார்.

ஷேன் வாட்சன், பிராவோ பந்துவீச்சிலும் கலக்குகிறார்கள். ’சிஎஸ்கே-வின் அணி கலவை அருமையாக இருக்கிறது, அதனால்தான் அவர்களால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது’ என்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விவியன் ரிச்சர்ட்ஸ்.

மும்பை அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். லெவிஸ், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா போன்ற அதிரடி வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி 94 ரன்கள் குவித்தார். ஆனால் அடுத்தடுத்தப் போட்டிகளில் சொதப்பி வருகிறார். ஐதராபாத் அணியை 118 ரன்களுக்குள் சுருட்டியும் அந்த இலக்கை கூட எட்ட முடியாமல் 87 ரன்னில் உருண்டு சாதனை படைத்தது மும்பை. பந்துவீச்சில் அந்த அணி, மார்கண்டேயும் குணால் பாண்ட்யாவையுமே நம்பி இருக்கிறது. இன்றைய போட்டியில் பொல்லார்ட் உட்கார வைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வேறொருவரை களமிறக்குவார்கள் என்று தெரிகிறது. 

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது மும்பை. இதனால் இன்றைய போட்டியிலும் பரபரப்பு, விறுவிறுப்பு, த்ரில்லிங் என அனைத்தையும் எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில் தோற்றதற்கு பழி வாங்கும் நோக்கில் மும்பை களமிறங்கும் என்பதால், போட்டி களைகட்டும். புனேவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது ஆட்டம்.

ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை-சென்னை அணிகள் இதுவரை 23 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 12 முறையும், சென்னை அணி 11 தடவையும் வெற்றி பெற்றுள்ளன.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்