Published : 27,Apr 2018 03:04 AM
11 எம்.எல்.ஏக்களின் பதவி தப்புமா?

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவி தப்புமா? அல்லது அவர்கள் பதவி இழக்க நேரிடுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.அவர்களைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களில் நான்கு பேர் தனியே அதே கோரிக்கையை முன்வைத்து வழக்கு தொடுத்திருந்தனர்.
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரஹோட்கி, சி.வைத்யநாதன், கபில் சிபல், அபிஷேக் சிங்வி முதலான இந்தியாவின் சட்ட வல்லுனர்கள் இந்த வழக்கில் ஆஜராகி முக்கியத்துவம் வாய்ந்த வாதங்களை முன்வைத்தார்கள். எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அவர்களை கேட்டுக்கொண்டது. அப்படி சமர்ப்பிக்கப்பட்டபின் கடந்த 2018 மார்ச் 8-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அந்தத் தீர்ப்புதான் இன்று வழங்கப்படவிருக்கிறது.
இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்தன. ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன. புதிதாக டிடிவி தினகரன் அணி முளைத்தது. தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் சட்டத்தின்கீழ் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதைஎதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். இதனிடையே குட்கா விவகாரத்தை சட்டசபையில் எழுப்பியதை சாக்காக வைத்து திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்வதற்கு அரசு முயற்சித்தது. உரிமைக்குழு மூலமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு திமுக உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரித்து வாக்களித்த 18 எம்.எல்.ஏக்களை கட்சி தாவல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யும்போது அப்போது உண்மையிலேயே எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை எனக் கேட்டுத்தான் திமுகவும், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் நீதிமன்றம் சென்றனர். வழக்கு தொடுப்பதற்கு முன்பு முறைப்படி அவர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தனர். அவர் நடவடிக்கை எதுவும் எடுக்காததாலேயே நீதிமன்றம் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.
தங்களுக்கு இல்லாத பெரும்பான்மையை சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் அடைந்துவிடலாம் என்பதே தற்போதைய ஆட்சியாளர்களின் கனவாக இருக்கிறது. அதற்கு சபாநாயகரின் அதிகாரம் அவர்களுக்குக் கை கொடுக்கிறது. அப்படித்தான் இதுவரை இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கிற இந்த வழக்கில் விசாரணை முடிந்து மூன்று மாதங்கள் ஆனபின்பும் நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் இருந்தது மக்களிடையே வியப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அதைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ இப்போது தீர்ப்பு வழங்க நீதிமன்றம் முன்வந்திருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் உள்ள கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் “ ஒரு உறுப்பினர் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின்மீது கட்சியின் முன் அனுமதி பெறாமல் தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிராக வாக்களித்தால் அல்லது வாக்களிக்காமல் விலகியிருந்தால் அப்படியான அவரது செயலை வாக்கெடுப்பு நடந்து 15 நாட்களுக்குள் அக்கட்சி மன்னிக்கவில்லையென்றால் அவரைத் தகுதி நீக்கம் செய்யலாம்” எனக் கூறுகிறது.
ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்கள் விஷயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் எதிராக வாக்களித்ததை மன்னித்துவிட்டதாக அதிமுக தலைமை ஒருபோதும் கூறவில்லை. எனவே அவர்களது நடவடிக்கை தெளிவாக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது. அதற்கான நடவடிக்கையை ஆளும்கட்சி எடுக்கவில்லை என்பதாலேயே அந்த குற்றம் நிகழவில்லை என்று பொருளாகாது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோருவதற்கு எந்தவொரு உறுப்பினருக்கும் உரிமை இருக்கிறது. அதனடிப்படையில்தான் திமுகவும், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களும் புகார் கொடுத்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி எனத் தெரிந்ததனால்தான் அவசரம் அவசரமாக செம்மலை மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.
ஒரு உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்யுங்கள் என சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட முடியுமா..? என்ற கேள்வி தெலுங்கானா சட்டமன்றத்தில் நடந்த கட்சித்தாவல் சம்பவம் தொடர்பான எஸ்.ஏ.சம்பத்குமார், எதிர் காலே யாதையா மற்றும் பிறர் ( S.A. Sampath Kumar Vs. Kale Yadaiah And Ors ) என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2016 நவம்பரில் அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கவேண்டும் என செம்மலை கோரிக்கை வைத்தார். அதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கவேண்டும் எனவும் அவர் கோரினார். ஆனால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதை ஏற்கவில்லை, விசாரணைக்குத் தடை விதிக்கவுமில்லை. மாறாக ‘ தகுதி நீக்கம் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனக் கேட்கக்கூடாது’ என்ற நிபந்தனையோடு விசாரணையைத் தொடர அனுமதித்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக திமுக தனது மனுவில் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பித்தது. தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்கு உத்தரவிடவேண்டும் என்பதற்குப் பதிலாக கட்சித்தாவலில் ஈடுபட்ட 11 பேரையும் நீதிமன்றமே தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனத் தனது கோரிக்கையை மாற்றிக்கொண்டது.
விசாரணைக்குத் தடை ஆணை பெறும் முயற்சி தோல்வி அடைந்ததால் ‘ நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு எங்களுக்குக் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 122 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும்தான் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே நாங்கள் எதிர்த்து வாக்களித்தது கட்சித் தாவல் ஆகாது “ என ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தை மாற்றியது. ஆனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் அப்படி எந்த விதிவிலக்கும் வழங்கப்படவில்லை.
கொறடா உத்தரவு என்பது ஒட்டுமொத்த கட்சிக்கும்தானே தவிர அதில் ஒரு பகுதிக்கு மட்டும் அல்ல. ஒருவர் ஒரு கட்சியால் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அக்கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவார். எனவே அக்கட்சியின் உத்தரவுகள் அனைத்தும் அவரைக் கட்டுப்படுத்தும். அரசியலமைப்புச் சட்ட 91 ஆவது திருத்தத்தின்படி கட்சியில் பிளவு ஏற்பட்டால் பிளவுபட்ட கட்சியின் உறுப்பினரை அது கட்டுப்படுத்தாது. ஆனால் கட்சியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனிப் பிரிவாக செயல்படவேண்டும். ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்களுக்கு இந்த விதியும் பொருந்தாது. அவர்கள் மொத்தமே 11 பேர்தான். எதிர்த் தரப்போ 122 பேர்.
மனசாட்சிப்படி பார்த்தாலும் சட்டங்களின் அடிப்படையில் பார்த்தாலும் சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்களை கட்சித்தாவல் சட்டத்தின் பிரிவுகளின்படி பதவி நீக்கம் செய்வதே சரியாக இருக்கும். சபாநாயகரின் அதிகாரம் என்பதைக் காரணமாகக் காட்டியோ உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கும் வழக்கைக் காரணம் காட்டியோ அதைத் தவிர்க்க முடியாது.
ஒரு உறுப்பினரின் தகுதி நீக்கத்தை முடிவு செய்யும் சபாநாயகரின் அதிகாரம் ’ அரை நீதித்துறை’ அதிகாரமாகக் கருதத்தக்கது. அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், நாகாலந்து சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பாக தொடரப்பட்ட கிஹோட்டோ ஹொல்லொஹான் எதிர் ஸஷில்ஹு மற்றும் பிறர் ( Kihoto Hollohan vs Zachillhu And Others ) என்ற வழக்கில் 1992 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள் வெங்கடாசலையா, ஜெயச்சந்திர ரெட்டி, வர்மா உள்ளிட்ட ஆறு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச்சட்ட அமர்வு அதற்கான விளக்கங்களை அளித்துவிட்டது.
அந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி வெங்கடாசலையா “ நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் என்பது ஜனநாயகம்தான். சட்டத்தின் ஆட்சியும், சுதந்திரமான தேர்தல் முறையும் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள். தேர்தல் தொடர்பான வழக்குகளையும் தகுதிநீக்கம் தொடர்பான புகார்களையும் விரைவிலேயே தீர்த்து வைப்பது சுதந்திரமான தேர்தல் முறையின் முக்கியமானதொரு கூறு ஆகும். அத்தகைய வழக்குகளை விரைவாகத் தீர்த்துவைப்பதன்மூலமே ஜனநாயகத்துக்கு அவசியமான சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும்” என்று தெளிவுபடுத்தினார்.
சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தகுதிநீக்க வழக்குகளில் முடிவெடுக்காமல் காலம் கடத்தினால் அதில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ” உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் எப்படி அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 124 (4) ன் மூலமாக நீதித்துறைக்கு அப்பால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ அதே கொள்கையின் அடிப்படையில்தான் ஒரு உறுப்பினரின் தகுதி நீக்கம் தொடர்பான பிரச்சனையை முடிவுசெய்யும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்ட உறுப்புகள் 103,192ன் மூலமாக சட்டமன்ற / பாராளுமன்றத்துக்கு வெளியே வழங்கப்பட்டிருக்கிறது” என அதை அந்தத் தீர்ப்பில் விளக்கியுள்ளனர்.
மீண்டும் இப்போது இந்தப் பிரச்சனை விரிவான அமர்வு ஒன்றுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் இப்போதைய வழக்கில் தீர்ப்பளிக்க அது எவ்விதத்திலும் தடையாகாது. ஓபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியே வந்து வாதாடிப் பார்த்தார். ஆனால் அதனால் எந்தப் பயனும் வரப்போவதில்லை. ஏனெனில் ஒரு வழக்கில் வெற்றிபெற வழக்கறிஞரின் திறமை மட்டும் போதாது அவர் வாதாடுவதற்கு ஏற்ப அந்தத் தரப்பில் கொஞ்சமாவது நியாயம் இருக்கவேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொருத்தமட்டில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக ஒரேயொரு நியாயம்கூட இல்லை.
இந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கும் என்பதால் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, சபாநாயகரின் அதிகாரம் ஜனநாயகத்தைக் காப்பதற்கானதா அல்லது மாய்ப்பதற்கானதா என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் என்ன முடிவுசெய்கிறது என்பதை அறிந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையும் ஆவலோடு காத்திருக்கிறது.