Published : 25,Apr 2018 06:36 AM
விசாரணைக்குமுன் எழுதப்படும் தீர்ப்புகள்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகளால் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் முதன்மையாக சொல்லப்பட்டிருந்தக் குற்றச்சாட்டு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பானதாகும். வழக்குகளை விசாரிக்கும் விஷயத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரம் உச்சநீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளுக்கு இருப்பது போன்றதுதான் என்றபோதிலும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் நிர்வாக அதிகாரம் அவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’என்று அவரை அழைக்கிறார்கள்.
தலைமை நீதிபதி ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ஆக இருந்தாலும் வழக்குகளைத் தனது மனம்போன போக்கில் ஒதுக்கீடு செய்ய முடியாது. அதற்கென்று நியதிகள் இருக்கின்றன. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மூத்த நீதிபதிகளைக்கொண்ட அமர்வுக்கு ஒதுக்கப்படுவதே மரபு. ஆனால் அந்த மரபுக்கு மாறாக தற்போதைய தலைமை நீதிபதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒருசில ஜூனியர் நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு ஒதுக்குகிறார் என்பதே நான்கு மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு. அது நீதிபதிகளின் சீனியாரிட்டி சம்பந்தப்பட்டதல்ல. குறிப்பிட்ட அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதன்மூலம் அவற்றின் தீர்ப்புகள் முன் தீர்மானிக்கப்பட்ட விதத்தில் பெறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை மூத்த நீதிபதிகள் கூறினார்கள். அதாவது ஆட்சியாளர்களுக்கு அனுகூலம் அளிக்கும் விதமாகத் தீர்ப்புகள் முன்னரே தீர்மானிக்கப்படுகின்றன, அவை குறிப்பிட்ட அமர்வுகளிலிருந்து பெறப்படுகின்றன என்பதே அந்தக் குற்றச்சாட்டின் சாரம்.
தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்கத் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்திருக்கும் மாநிலங்களவையின் சபாநாயகர் வெங்கய்ய நாயுடு, 2017 நவம்பர் மாதத்தில் காமினி ஜெய்ஸ்வால் எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டிவிட்டு,‘வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் விஷயம் என்பது நீதிமன்றத்தின் உள்விவகாரம். அதை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும்’எனக் கூறியிருக்கிறார்.
வெங்கய்ய நாயுடுவின் உத்தரவை ஆதரித்துக் கருத்து கூறியிருக்கும் சில மூத்த வழக்கறிஞர்களும்கூட ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ என்ற முறையில் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் தலைமை நீதிபதியின் அதிகாரத்தை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்கின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது அது சரிதானே என்ற எண்ணம் நமக்கும் வரக்கூடும். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்வதால் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நமக்கு இதில் தெளிவு பிறக்கும். அதற்கு மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் உச்சநீதிமன்றத்துக்கு எதிராகத் தாக்கல் செய்திருக்கும் வழக்கின் விவரங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இருக்கிறது என்றாலும் நிர்வாக நடவடிக்கைகள் எதுவானாலும் அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதுதான் என்பதால் இதுவும் ஆய்வுக்குட்பட்டதே எனத் தனது வழக்கின் பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கும் சாந்தி பூஷன், பல்வேறு நாடுகளில் இருப்பதுபோல மூத்த நீதிபதிகளைக் கலந்தாலோசித்தே வழக்குகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ என்பதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இரு நீதிபதிகள் கொண்ட அமர்வோ மூன்று பேர் கொண்ட அமர்வோ எந்தவொரு வழக்கையும் அது தனக்குத் தானே ஒதுக்கிக்கொள்ள முடியாது. அரசியலமைப்புச் சட்ட அமர்வை அமைக்கும் அதிகாரமும் அவற்றுக்குக் கிடையாது ”எனத் தெளிவுபடுத்தியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் சாந்தி பூஷன்‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’என்ற கோட்பாட்டை தலைமை நீதிபதியே சம்பந்தப்பட்டுள்ள ஒரு வழக்குக்கு பிரயோகிக்க முடியாது”என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற விதிகள் 2013, விதிகள் நடைமுறைகள் ஆகியவற்றுக்கான கையேடு 2017 முதலானவை வழக்குகளை ஒதுக்கீடு செய்யும்போது நீதிமன்றப் பதிவாளர் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து விவரித்துள்ளன. அவற்றையெல்லாம் விரிவாக எடுத்துக் காட்டியுள்ள வழக்கறிஞர் சாந்தி பூஷன் தற்போதைய தலைமை நீதிபதி பொறுப்பேற்றதற்குப் பிறகு எப்படி அவை மீறப்படுகின்றன என்பதையும் பட்டியலிட்டிருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி லஞ்ச வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என ‘கேம்பைன் ஃபார் ஜுடிஷியல் அக்கவுண்டபிலிட்டி அண்ட் ரிஃபார்ம்ஸ்’ எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் கோரப்பட்டது ( W.P (criminal) 169 / 2017 ). இந்த வழக்கு 08.11.2017 அன்று அவசர வழக்குகள் விசாரிக்கப்படும் கோர்ட் நம்பர் 2 ல் முறையிடப்பட்டது. அங்கிருந்த நீதிபதி செலமேஸ்வர் அதை 10.11.2017 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறினார். ஆனால் அன்று மதிய உணவு இடைவேளையின்போது அந்த வழக்கு வேறொரு அமர்வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக பதிவாளரிடமிருந்து தகவல் வந்தது. 10.11.2017 அன்று அந்த வழக்கு நீதிபதி சிக்ரியின் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அன்று மாலையே திடீரென அவ்வழக்கு தலைமை நீதிபதியின் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு அவசரமாக விசாரிக்கப்பட்டது. அடுத்து உடனடியா அந்த வழக்கு நீதிபதி அகர்வாலின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அங்கு 01.12.2017ல் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது மட்டுமின்றி உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் வழக்கு தொடுத்தவருக்கு 25 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் வழக்கும் அப்படித்தான் மாற்றப்பட்டது. முதலில் அந்த வழக்கு நீதிபதி செலமேஸ்வர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அடுத்து 18.07.2017 அன்று அது விரிவான அமர்வு ஒன்றுக்கு அன்றைய தலைமை நீதிபதி கேஹரால் மாற்றப்பட்டது. அந்த அமர்வில் நீதிபதிகள் செலமேஸ்வர், போப்டே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்த பின்னர் அதை விசாரிப்பதற்காக ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அந்த வழக்கு சென்றது. அந்த அமர்விலும் மேற்சொன்ன நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய தலைமை நீதிபதி வந்ததற்குப் பிறகு அந்த அமர்வு மாற்றியமைக்கப்பட்டது. அதிலிருந்து நீதிபதிகள் செலமேஸ்வர், போப்டே, நஸீர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இவற்றைப்போல பத்து வழக்குகளை சாந்தி பூஷன் தனது பிரமாண பத்திரத்தில் விரிவாக ஆதாரங்களோடு எடுத்துக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்திடம் சில கோரிக்கைகளை அவர் முன்வைத்திருக்கிறார்:
உச்சநீதிமன்றத் தலமை நீதிபதி என்பதற்கு நிர்வாக அளவில் ஐந்து மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலேஜியம் என்று பொருள் வழங்கப்படவேண்டும் ; வழக்குகளைப் பட்டியலிடும்போது பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மூத்த நீதிபதிகளின் கருத்தை அறியவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவேண்டும்; உச்சநீதிமன்ற விதிகள் 2013, விதிகள் நடைமுறைகளுக்கான கையேடு 2017 ஆகியவற்றுக்கு முரணாகத் தலைமை நீதிபதி உள்ளிட்ட எவரும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது என ஆக்கப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகள் சாந்தி பூஷனால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் சிறப்பு நீதி விசாரணை தேவையில்லையென தலைமை நீதிபதியின் அமர்வு சில நாட்களுக்கு முன் அளித்திருக்கும் உத்தரவை வைத்துப் பார்த்தால்தான் வழக்குகளை ஒதுக்கீடு செய்வது வெறும் நிர்வாக நடைமுறை சார்ந்தது அல்ல என்பது நமக்குப் புரியும். நீதிபதி சுமித்ரா சென் மீதான இம்பீச்மெண்ட் தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அதை ஆதரித்துப் பேசிய அருண் ஜெட்லி “சாதாரண மனிதர்கள் மற்றவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கிற புனிதமான கடமையை நீதித்துறை செய்கிறது. மற்றவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் புனிதக் கடமை ஒரு நீதிபதியிடம் அளிக்கப்படும்போது அவர் அதை உச்சபட்ச அறிவாற்றலோடும், பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி “நீதிபதியானவர் சீஸரின் மனைவியைப் போன்றவர், அவர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்” எனவும் ஆணித்தரமாகக் கூறினார்.
“ஒரு நீதிபதி டெக்னிக்கல் விஷயங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பார்க்கக்கூடாது” என்று ஜெட்லி அப்போது பேசியது நீதிபதி தீபக் மிஸ்ரா விஷயத்துக்கும் பொருத்தமாகவே உள்ளது. ஜெட்லி பேசி ஏழு வருடங்கள் ஆனபோதிலும் சட்டமும் நியாயமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும்தான் இப்போது நீதியின் எதிர்த்திசைக்குச் சென்றுவிட்டனர்.