Published : 24,Apr 2018 03:15 PM

தெற்கு தேய்கிறது... சரி, வடக்காவது வாழ்ந்ததா?

South-India-States-gone-town-and-North-India-States-Raised-up-in-Everything

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் இப்போது வரை எதிரொலிக்கிறது. தென் மாநிலங்கள் தரும் பணத்தில் வடக்கு மாநிலங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என தென் மாநில நிதியமைச்சர்கள் சில நாட்கள் முன்பு ஒருமித்த குரல் எழுப்பியிருந்தனர். நிதிப்பகிர்வில் காட்டப்பட்ட பாரபட்சம் அல்லது நிதிப்பகிர்வு அளவீடுகள் இதனை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இதனை பயன்படுத்தி வட மாநிலங்கள் வளர்ந்தவனா என்றால் அது நடக்கவில்லை என்பதே உண்மை. 

ஜாமியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த். அவர் பேசிய விஷயம் அனைவரையும் வளார்ச்சி என்று மார்தட்டிக் கொண்டிருந்தவர்களை கொஞ்சம் தொட்டுப் பார்த்திருக்கிறது. அதாவது இந்தியாவின் வளர்ச்சியை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் பின்னோக்கி தள்ளுகின்றன என்றார் அவர். இவையெல்லாம் வடக்கு மாநிலங்கள் என்று சொன்னால் ஏதேனும் பிரச்னை வருமோ என்று லாவகமாக அதனை கிழக்கு மாநிலங்கள் என பிரித்தும் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அதிக பங்கை 5 தென்னிந்திய மாநிலங்கள் தருகிறது என்ற விஷயம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இத்தகைய வளர்ச்சியை அடைய தென்னிந்திய மாநிலங்கள் எடுத்த நடவடிக்கை, அதற்கான முயற்சிகள் என்னவென்றல்லாம் மறைத்தாலும் கூட, வளர்ச்சியில் மூலப்பங்கே இவர்கள்தான் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், வளர்ச்சியில் பங்கெடுத்ததற்காக மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைப்பதன் மூலம், முந்தைய வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மாநிலங்கள் இன்னும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், வளரவில்லை அல்லது அதனை சட்டை கூட செய்யாத மாநிலங்கள் தொடர்ந்து இன்னும் இன்னும் அதிகமான பணத்தை பெற்று செழிப்படைகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. 

விழாவில் பேசிய அமிதாப் கந்த் மேலும் சில விஷயங்களை தெரிவித்தார். அது தேசிய அளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது ‘ தொழில் தொடங்க உகந்த நாடாக அல்லது மாநிலமாக நம்மை நாம் வளர்த்திருக்கிறோம், ஆனால் மனிதவள குறியீட்டில் தொடர்ந்து பின் தங்குகிறோம் என்றார். ஆக இந்த வளர்ச்சி யாருக்கானது , எது நம்மை தொடர்ந்து பின்னோக்கி தள்ளுகிறது ? தொழில் தொடங்க நமது நாட்டை தாரை வார்த்து விட்டு, நம்மை முன்னேற்றாமல் இருப்பதால் கிடைக்கும் பயன் என்ன என்ற கேள்வியும் பின்னே எழுந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. 

சவால்களை கடந்து இந்தியாவை மாற்றூவதில் தென் மாநிலங்களும் மேற்கத்திய மாநிலங்களும் நல்ல போட்டியை கொடுக்கின்றன. அதற்காக தங்களை அவர்கள் தகவமைத்து கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பார்வை அப்படி இருக்கிறது என்றார். அதாவது தொழில் வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு மக்களின் வளார்ச்சியும் முக்கியம். சமூக காரணிகளின் அக்கறை செலுத்துவது மட்டுமே அதை நோக்கி நம்மை நகர்த்தும். அமிதாப் கந்த் சொல்ல வருவதை இப்படி புரிந்து கொள்ளலாம். அறிவுக்கும் திறனுக்குமான வேறுபாடு. சமீபத்திய ஆய்வு முடிவுகள் படி 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் 2-ம் வகுப்பு கணக்கை செய்ய முடியவில்லை , அடிப்படையான கூட்டல் கழித்தலில் மாணவர்கள் தோற்கின்றனர். அதே மாணவனால் தனது தாய்மொழியில் உள்ள பாடத்தை பிழையின்றி சரளமாக படிக்க முடியவில்லை. இது வளர்ச்சியா என்றால் இல்லை. 

ஆக, தொழில் தொடங்க உகந்த மாநிலங்களாக , நாடாக நம்மை மாற்றிக் கொள்வது பொருளாதார ரீதியில் சரியான ஒன்று. ஆனால் சமூக காரணிகளை கண்டறிந்து அவற்றில் மக்களை முன்னேற்றா விட்டால், அந்த வளர்ச்சி வீக்கமாக இருக்குமே தவிர வளர்ச்சியாக இருக்காது. இத்தகைய சமூக காரணிகளில் தென்னிந்திய மாநிலங்கள் கவனம் செலுத்தியதால்தான், வளர்ச்சியில் பங்கெடுக்க முடிகிறது. இதை நிதி ஆயோக் சி.இ.ஓ.வின் பேச்சு உறுதி செய்கிறது. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்