Published : 22,Apr 2018 07:30 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வகுப்புவாத பேராபத்தும்

Marxist-Communist-Party-and-communism

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது தேசிய மாநாடு ஹைதராபாத்தில் இப்போது நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 18 அன்று துவங்கிய மாநாடு இன்று நிறைவடைய இருக்கிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றவிருக்கும் அரசியல் தீர்மானத்தின் வரைவைப் பொதுமக்களின் பார்வைக்காகவும் விமர்சனத்துக்காகவும் சில மாதங்களுக்கு முன் அக்கட்சி வெளியிட்டது. 53 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்மானங்களில் 21 பக்கங்கள் சர்வதேச சூழ்நிலையைப் பற்றியும் மீதமுள்ளவை இந்திய சூழல் குறித்தும் பேசுகின்றன.
 
2008 ஆம் ஆண்டு துவங்கிய சர்வதேசப் பொருளாதார சரிவு இப்போதும் நீடிப்பதாகவும் அதனால் உலக முதலாளியம் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும் சிபிஐ எம் கட்சியின் வரைவுத் தீர்மானம், சோஷலிச நாடான சீனாவின் பலமும் செல்வாக்கும் கூடியிருப்பதைப் பெருமையோடு சுட்டிக்காட்டியுள்ளது. வட கொரியாவையும் சோஷலிச நாடுகளில் ஒன்றாக அங்கீகரித்திருக்கும் அந்தத் தீர்மானம் வியட்நாம், கியூபா ஆகிய சோஷலிச நாடுகளின் பொருளாதாரங்கள் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைந்துவருவதாகவும் தெரிவிக்கிறது. 

சர்வதேச சூழல் குறித்த நிலைபாட்டில் அக்கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஆனால் இந்திய அரசியல் சூழலைக் கணிப்பதிலும் அதற்கேற்ப இங்கே அரசியல் அணிசேர்க்கையை உருவாக்குவதிலும் தான் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. காங்கிரஸ் கட்சியின்  நவ தாராளமயப் பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் அதே வேளையில் இந்திய ஜனநாயகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஆர்எஸ்எஸ்,பாஜகவின் வகுப்புவாதத்தை முறியடிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகிறார். அதற்கேற்ப மதச்சார்பற்ற சக்திகளோடு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். ஆனால் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தோ காங்கிரஸோடு கூட்டணி மட்டுமல்ல தொகுதி உடன்பாடு உள்ளிட்ட எவ்வித உறவும் கூடாது எனக் கறாராகப் பேசுகிறார். 

சிபிஐ எம் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த இரண்டுவிதமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டதில் பிரகாஷ் காரத்தின் நிலைபாட்டுக்கே அதிக ஆதரவு கிடைத்தது.55 உறுப்பினர்கள் அவரை ஆதரித்தனர்.யெச்சூரிக்கு 31 உறுப்பினர்களின் ஆதரவே கிடைத்தது. இந்நிலையில் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியல் தீர்மானம் இப்போது நடைபெறும் மாநாட்டிலேயே இறுதி செய்யப்படவுள்ளது.கடந்த நான்கு நாட்களாக மாநாட்டில் நடைபெற்றுவரும் விவாதங்கள் யெச்சூரிக்கும் காரத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்திருப்பதையே காட்டுகின்றன. மேற்கு வங்கம் உள்ளிட்ட 16 மாநில குழுக்கள் யெச்சூரியை ஆதரிப்பதாகவும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலக் குழுக்கள் காரத்தின் நிலைபாட்டை ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கேட்கும் அளவுக்கு கருத்து மோதல் தீவிரம் அடைந்திருக்கிறது.  

சீத்தாராம் யெச்சூரிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்கக்கூடாது என்பதிலும் பிரகாஷ் காரத் ஆதரவாளர்கள் முனைப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யெச்சூரியின் நிலைபாட்டை எதிர்ப்பதற்காக ’இந்தியாவில் வகுப்புவாத அபாயம் அவ்வளவாக இல்லை’ என்று பேசுமளவுக்கு காரத்தின் ஆதரவாளர்கள் சென்றுள்ளனர். 

சிபிஐ எம் கட்சியில் நடப்பது அக்கட்சியின் உட்கட்சி பிரச்சனை என ஜனநாயக சக்திகள் ஒதுங்க முடியாது. ஏனெனில் இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தை எதிர்த்து முறியடிப்பதில் சிபிஐ எம் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. மதச்சார்பற்ற சக்திகளை அவர்கள் ஒருங்கிணைக்க முன்முயற்சி எடுத்திருந்தால் இப்போது இருக்கும் அளவுக்கு பாஜக வலுப்பெற்றிருக்காது. 


உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகள் ஒருகாலத்தில் செல்வாக்கோடு இருந்தன. இப்போது அந்த நிலை இல்லை என்றாலும் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறக்கூடாது என நினைத்திருந்தால் அதற்கான முன் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர்கள் அங்கே தனியாக அணி அமைத்துப் போட்டியிட்டார்கள். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஃபார்வர்டு ப்ளாக் 6 தொகுதிகளிலும், சிபிஐ 68 தொகுதிகளிலும், சிபிஐ எம் 26 தொகுதிகளிலும் சிபிஐ எம்.எல் 29 தொகுதிகளிலும் ஆக மொத்தம் 129 தொகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் போட்டியிட்டன. அவற்றில் ஒட்டுமொத்தமாக அவர்கள் பெற்ற வாக்குகள் இரண்டு லட்சத்து நான்காயிரம் மட்டும்தான். அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 0.24% வாக்குகளைத்தான் இடதுசாரிக் கட்சிகள் பெற்றுள்ளன. இந்த வாக்குகள் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணியோடு சேர்ந்திருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்கும் என எவரும் சொல்லமாட்டார்கள். ஆனால் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபடவேண்டும் என இடதுசாரிகள் முன்முயற்சி எடுத்திருந்தால் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகளையும் சிதறாமல் காப்பாற்றியிருக்க முடியும். உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைய இடதுசாரிகள் நேரடி காரணம் எனக் கூற முடியாது. ஆனால் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைய இடதுசாரிகளே பெரிதும் காரணம் என்று சொல்லலாம். அங்கு அவர்கள் பாஜகவையும் காங்கிரஸையும் சமமாக பாவித்து எடுத்த தேர்தல் நிலைபாடு பாஜகவின் செல்வாக்கு பெருக காரணமாகிவிட்டது. மணிப்பூரில் இரண்டுமுறை காங்கிரஸோடு கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் தனித்து நின்று வாக்குகளைப் பிரித்ததால்தான் பாஜக இன்று அங்கே ஆட்சியமைக்க முடிந்திருக்கிறது. 

தேர்தல் களத்தில் வாக்குகளின் அடிப்படையில் இடதுசாரிகள் பலவீனமாக இருக்கலாம்.ஆனால் தார்மீக அடிப்படையில் அவர்களுக்கென்று ஒரு பலம் இருக்கவே செய்கிறது. இந்த தார்மீக பலத்தை ’அரசியல் மூலதனம்’ என்று நாம் குறிப்பிடலாம். அந்த ’அரசியல் மூலதனத்தை’ வகுப்புவாத எதிர்ப்புக்கு அவர்கள் பயன்படுத்தவேண்டும். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் எழுந்த வகுப்புவாதப் பேரலையைத் தடுத்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றிய பெருமை இடதுசாரிகளையே சாரும். அதைவிடவும் அபாயகரமான வகுப்புவாத அபாயத்தை இந்தியா இப்போது எதிர்கொண்டிருக்கிறது. நீதி அமைப்பும்கூட ஆளும் கட்சியின் பிடிக்குள் சென்றுவிட்டது எனப் புகார் கூறும் அளவுக்கு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இன்றைய நிலையில் வகுப்புவாத அபாயத்தை இடதுசாரிகள் மட்டும் தனித்து நின்று முறியடிக்க முடியாது. அதற்கான அரசியல் பலம் அவர்களுக்கு இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இடதுசாரிகள் மட்டுமின்றி இடதும் வலதும் அல்லாத மையநிலைக் கட்சிகளும் (Centrist Forces) ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய வரலாற்றுக் கடமை இப்போது எழுந்திருக்கிறது. 

அதைத்தான் சீத்தாரம் யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார்.இன்று முடிவடைய உள்ள மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரியின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு வேறு ஒருவர் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சிபிஐ எம் கட்சியை மட்டுமல்ல இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகளையும் பலவீனப்படுத்திவிடும். வகுப்புவாதத்துக்கு வலுசேர்க்கும் அந்தத் தவறை சிபிஐ எம் செய்யாது என நம்புவோம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்