Published : 21,Apr 2018 01:47 PM

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு

Complaint-filed-against-SV-Shekher

பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிடப்பட்ட கருத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நண்பர் ஒருவர் எழுதிய பதிவை படிக்காமல் முகநூல் பக்கத்தில் பார்வேர்டு செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மற்றொரு நண்பர் அதனை படித்துவிட்டு தவறாக இருக்கிறது என தெரிவித்த உடனேயே அதனை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் விளக்கம் கொடுத்தார். இருப்பினும் எஸ்.வி.சேகருக்கு எதிராக நேற்று பத்திரிகையாளர்கள் பலரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.