[X] Close

பணத் தகராறு பஞ்சாயத்து செய்தவர் குத்திக் கொலை

Pollachi-Murder-accuquest-absconded

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு காரணமாக மரக்கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்‌ளார். ஒ‌ருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் பிரதீப் - முகமது அசார். இருவர்களும் நண்பர்கள் எனத் தெரிகிறது. பிரதீப்பிடம் அவரது நண்பர் முகமது அசார் ல‌ட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பிரதீப் பணத்தை திரும்பக் கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதேபகுதியில் மரக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரை அழைத்துக்கொண்டு முகமது அசாரை சந்திக்க சென்றுள்ளனர். பணத்தை திரும்பி கேட்டதால் பிரதீப்புக்கும் முகமது அசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முகமது அசாருடன் அவரது நண்பர் இப்ராஹிம் உடனிருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இப்ராஹிம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணன் மற்றும் பிரதீப்பை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் இருவரும் நிலைக்குலைந்தனர். இத்தாக்குதலில் கண்ணன் நிகழ் விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பிரதீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கண்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இப்ராஹிம் மற்றும் முகமது அசாரை தேடி வருகின்றனர்.


Advertisement


 


Advertisement

Advertisement
[X] Close