Published : 17,Apr 2018 01:01 PM
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்

பேராசிரியை நிர்மலா தேவியை பார்த்ததே இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நிர்மலா தேவியின் முகத்தைக் கூட இதுவரை பார்த்ததில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். மாணவிகளை, பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்றது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “பல்கலைக்கழக துணை வேந்தரும் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கவில்லை. என்னைக் கேட்காமல் பல்கலைக் கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் தாமதப்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும். பேராசிரியை விவகாரத்தில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும். சட்டவிதிகளின் படியே சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழு உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை” என்று கூறினார்.