Published : 17,Apr 2018 12:13 PM

சென்னையில் கையும்களவுமாக சிக்கிய ‘சீரியல்’ திருடர்கள்!

Serial-Robbers

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ‘சீரியல்’ திருடர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்களை கோயில் திருவிழாக்களின் போது நகைகளை திருடியதற்காகவும்; வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய சென்னையின் பல பகுதிகளில் வீடு புகுந்து திருடியதற்காகவும் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தப் பகுதிகளில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களால், கொள்ளையர்களை விரைவில் பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகளால் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த வாரம் திங்கள்கிழமை வடபழனி அருகே ஒரு பெண்ணிடம் கத்தி முனையில் இந்த ‘சீரியல்’ திருடர்கள் நகைகளை பறித்துச்சென்றபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் திருடர்களை துரத்திச்சென்று கையும்களவுமாக பிடித்தனர்.

மேலும், கைதான திருடர்கள் அப்பு (32) மற்றும் சந்தோஷ் (19) ஆகிய இருவரும் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் போலீஸார் தனிப்படையிடம் ஒப்படைத்தனர். அதில் அப்பு மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே அவர் குண்டர் சட்டத்திலும் கைதானவர். விசாரணையின் போது அவர்கள் இருவரும் முதலில் வீடுகளில் பூட்டை உடைத்து திருடி வந்ததையும்; பின்னர் கோயில் திருவிழாக்களுக்கு வரும் பெண் பக்தர்களிடம் இருந்து நகைகளை திருடியதையும் கண்டறிந்தனர். 

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோயில் திருவிழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் நகைகளை பறித்து தப்பி ஓடிவிடுவர். மேலும், அவர்கள் போலீஸில் பிடிப்படாமல் தப்புவதற்காக சில தந்திரங்களை கையாண்டிருக்கின்றனர். அதாவது, அந்த திருடர்கள் கொள்ளையடிக்கும் நகைகளை இடைத்தரகர்கள் மூலம் அடகு கடைகளில் தங்க நாணயங்களாக மாற்றி, பின் அந்த நாணயங்களை சந்தையில் விற்றுவிடுவார்கள்’ என கூறினார்.       

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்