Published : 16,Apr 2018 06:55 AM
நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருட்டு!

சென்னையில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
’புதிய பாதை’ படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். தொடர்ந்து, பொண்டாட்டி தேவை, ஹவுஸ்புல், குடைக்குள் மழை, இவன் உட்பட பல படங்களை இயக்கி நடித்துள்ள இவர், திருவான்மியூரில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில்தான் இவரது மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் நடிகர் பார்த்திபன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், வீட்டில் பீரோவில் இருந்த தங்கக் கட்டிகளைக் காணவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் உள்ள வேலையாட்கள் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.