‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..!

‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..!
‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..!

‘காலாவதியான காலா’ என்கிற ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரில் ரஜினியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. தனிக்கட்சி தொடங்கி, வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என ஆண்டுக்கணக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினியின் அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ரஜினி மக்கள் மன்றம் மூலமும் உறுப்பினர்கள் சேர்க்கை படுஜோராக நடந்துவந்தது, வருகிறது.

இதனிடைய சமீபத்தில் இமயமலை சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரஜினி செய்தியாளர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் தான் நினைத்தை மட்டுமே பேசிவந்தார். அவரிடம் அரசியல் குறித்து செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பெரிய அளவில் பதில் இருக்காது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். இந்த நேரத்தில்தான் காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்தில் பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் 6 வாரக் கால அவகாசம் விடுத்தும் மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தின் பல கட்சிகளும் போராடின. சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம், கடையடைப்பு என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் கடந்த 8ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கிளம்பும் முன் போயஸ்கார்டனில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை. தாமதித்து மட்டுமே வருகிறது என்றார். போராட்டத்திலும் பங்கெடுத்தார்.

இந்தச் சம்பவத்திற்கு பின் கடந்த 10ம் தேதி சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அன்றைய தினம் மாலை 4 மணியளவில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராடினார்கள். கூட்டத்தை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். போலீசாரும் சில இடங்களில் தாக்கப்பட்டனர். அதேநேரத்தில் எதிர்ப்பையும் மீறி அன்றைய தினம் சென்னையில் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் மைதானத்திற்கு உள்ளேயே நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் காலணியை வீசியனர். 

இந்தச் சம்பவத்திற்கு அடுத்தநாள் அதாவது ஏப்ரல் 11ம் தேதி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராடுபவர்கள் போலீசாரை தாக்குவது போல் இருந்தது. மேலும் அந்த ட்விட்டர் பதிவில், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ரஜினி இப்போது மட்டும் போலீசாருக்கு ஏதுவாக வரிந்து கட்டிக்கொண்டு வருவது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே நாட்டையே உலுக்கிய இரண்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. இதில் ஒரு வன்கொடுமை சம்பவத்தில் போலீசாரும் உடந்தை. இந்தச் சம்பவத்திற்கு நாட்டில் உள்ள அனைத்துதரப்பு மக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில் ரஜினி இன்னும் வாய்த்திறக்கவில்லை. ஒருவேளை போலீசார் உடந்தை என்பதால் மெளனமாக இருக்கிறாரோ என்னவோ..? இதனிடையே கட்சி தொடங்கும் பணியை ரஜினி தள்ளிவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த ரஜினியின் செயல்பாடுகள் அதிருப்தியடைந்த நெட்டிசன்கள் ரஜினியை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘காலா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே ரஜினியின் மேல் உள்ள அதிருப்தியால் #காலாவதியான_காலா என்கிற ஹேஷ்டேக்கில் ரஜினி மீதான தங்களது எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். கூடிய விரைவில் கட்சி ஆரம்பிப்போம் என ரஜினி 2030ம் ஆண்டும் சொல்வது போல் மீம்ஸ்களை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

சிலரோ, 1996ம் ஆண்டே விரைவில் கட்சி ஆரம்பிப்பேன் என கூறினார். 2021ம் ஆண்டும் அதனைத்தான் கூறுவார் என கலாய்த்துள்ளனர். ‘காலா’ டீஸரில் இடம்பெற்ற ‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்’ என்ற வசனத்தையும் வைத்து விமர்சித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் ரஜினிக்கு எதிராக #காலாவதியான_காலா என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com