Published : 13,Apr 2018 07:48 AM

கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமை... என்ன சொன்னார் பிரதமர் மோடி..?

What-PM-Narendra-Modi-Said-About-the-Kathua-and-Unnao-Rapes

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பாலியல் வன்கொடுமை குறித்து பிரதமர் மோடி என்ன சொன்னார் என தெரிந்துகொள்ள வேண்டுமா..?

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார்‌ அளித்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 8ம் தேதி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் சிறுமியின் தந்தையான பப்பு சிங் என்பவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது, புகாருக்குள்ளான பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர்களுடன், மாணவியின் தந்தையை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயிரிழந்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம், விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இன்று அதிகாலை கைது செய்தனர்.

மற்றொரு அதிர்ச்சி சம்பவம்... ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தை சேர்ந்த 8 ‌வயது சிறுமி ஆசிஃபா. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒருவாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் உடந்தை.

இந்த இரண்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கும் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே‌ எதிரானவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தகைய குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சாமானியர்கள் மூலம் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் அனைத்து தரப்பு மக்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். ட்விட்டரில் ஜெட் வேகத்தில் ஆக்டிவாக செயல்படும் பிரதமர், அதில்கூட தனது கண்டனத்தை பதிவு செய்யவில்லை. நாட்டையே உலுக்கிய இந்த இரு சம்பவங்கள் குறித்து பிரதமர் ஒருவேளை மௌனம் கலைத்தால் அதனை நாங்கள் இங்கே பதிவு செய்கிறோம்..

Courtesy: The Quint Website

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்