Published : 10,Apr 2018 09:41 AM

தீபிகா படுகோனே சுவிட்சர்லாந்தில் ரகசிய திருமணம்? :ரன்வீர்சிங் வெளியிட்ட உண்மை என்ன?

Ranveer-Singh-responds-to-rumours-about-his-wedding-with-Deepika-Padukone

பாலிவுட் உலகை சமீபகாலமாக தலையை சுற்ற வைக்கும் வதந்தி தீபிகா படுகோனே காதல் விவகாரம். ‘பத்மாவத்’ பட வெளியீட்டின் போதே ரன்வீர் மற்றும் தீபிகா இருவரும் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது. ரன்வீர் தனது கைகளை தீபிகாவுடன் கோர்த்துக் கொண்டு பொது நிகழ்ச்சி மேடைகளை பகிர்ந்து கொண்டார். பாஜி ராவ், சமஸ்தானி போன்ற படங்களில் இருந்து இந்த ஜோடிக்குள் ஆன் ஸ்கிரின் கெமிஸ்ட்ரியை தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதாகக் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் இதை வழக்கமான நட்சத்திரங்கள் இடையே எழுதப்படும் வதந்தியைப் போலவே கடந்து போய்விட்டனர். அந்த மெளனமே இருவருக்குள்ளும் ஒரு இனம்புரியாத அன்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது. இந்தக் கிசுக்கிசு ‘பத்மாவத்’ பட விவகாரத்திற்கு பின் மீண்டும் பூதாகரமானது. அப்போதும் தீபிகா மெளனமாகவே இருந்தார். 

இந்த நிலையில்தான் தீபிகாவிற்கும் ரன்வீருக்கும் சுவிட்சர்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் தீ போல் பரவத்தொடங்கி இருக்கிறது. இந்த ஜோடிக்கு இந்த வருட இறுதியில் செப்டம்பர் அல்லது டிசம்பர் மாதங்கள் இடையில் திருணம் நடக்கலாம் என சமூக வலைத்தளத்தில் வண்டி வண்டியாக எழுதி வருகிறார்கள். இதற்காக இந்த இரண்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தேதியை இந்த ஜோடி உறுதி செய்ய உள்ளதாக பாலிவுட் பட்சிகள் கூறுகிறார்கள். அது ஏன் சுவிட்சர்லாந்து? அந்த நாட்டிற்கான இந்திய சுற்றுலா தூதுவராக ரன்வீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அங்கிருந்து இந்த ஜோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று அவர்கள் அங்கே செல்லலாம் என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது.

இந்த வதந்தி வேகமாக பரவி வருவதை அறிந்த ரன்வீர் முதன்முறையாக மெளனத்தை உடைத்திருக்கிறார். அவரிடம் இந்தச் செய்தி குறித்து கேட்டதற்கு அவர் என் வாழ்க்கையில் ‘ஸ்பெஷல்’ என்று கூறியிருக்கிறார். அப்ப கல்யாணம் உறுதியா எனக் கேள்வி எழும்பும் இல்லையா? அதற்கு ரன்வீர் தந்திருக்கும் பதில் தலையைச் சுற்ற வைக்கிறது.

“தீபிகா என் வாழ்க்கையில் மிக ஸ்பெஷலான நபர். அவரைக் கண்டு நான் அதிகப்படியா வியக்கிறேன். அவர் ஒரு புத்திசாலி நடிகை. அவரது திறமைகளை காக்டெய்ல் பார்ட்டிக்குப் பிறகுதான் கண்டுப்பிடித்தேன். ஏனென்றால் அவர் கமர்ஷியலான வெற்றியை தந்தவர். ஆனால் நான் அதை முன் கூட்டியே அடையாளம் கண்டு கொண்டிருக்கிறேன். இப்போது அவரது பெர்ஃபாமென்ஸ்  அட்வான்ஸ்டு லெவலில் சரியாக உள்ளது. கோலியான் கி ரஸ்லீலா ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் அதில் பார்க்க முடியும். அதை நம்ப முடியும். அந்த பாதையில் அவரது வேலை இருந்தது” எனக் கூறும் ரன்வீர் சுற்றி வளைத்து காதல், கல்யாணம் பற்றிய மையத்திற்கு வராமலே மழுப்பிக் கொண்டிருந்தார். இறுதியில்தான் அவர் விஷயத்திற்கு வந்தார். அப்போது நேரடியாகவே சில விளக்கங்களை தந்தார். அவர் தந்த விளக்கம் என்ன?

“இன்றைக்கு இரண்டு ஷிப்ட்டில் மும்முரமாக இருக்கும் ஒரு நடிகையை பற்றி நான் நினைக்க முடியாது. நான் மறுபடியும் ராம் லீலா படப்பிடிப்பை நினைத்துக் கொள்கிறேன். நான் தீவிரமாக அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார். ஆக, ஒரு பக்க ஈர்ப்பு உறுதியாகிவிட்டது. மேலும் தீபிகா புத்திஸ்ட்டை போல அமைதியானவர் என்றும் கூறியிருக்கிறார். “அவர் இதமான நபர், உண்மையானவர். மிகமிக தன்மையானவர். அவரது அழகு அகமும், புறமும் ஒன்றுபோலவே இருக்கும்” என புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ரன்வீர். 

இதையும் தாண்டி இன்னும் ஆழமாக சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் இப்போதே கூற முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவருமே இப்போது படங்களில் மும்முரமாக இருக்கிறோம். அவர் இப்போது கொஞ்சம் ஓய்வில் இருக்கிறார். ஆகவே திசைத் திருப்ப வேண்டாம். ஒருவேளை எதிர்காலத்தில் ஏதாவது அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றால் நீங்கள் எல்லோரும் கேட்கும்படி வீட்டு மொட்டைமாடியில் ஏறி நான் சத்தமாக கத்திச் சொல்வேன். அந்த நேரம் வரும்போது எனக்குத் தெரியும். அந்தச் சூழல் முக்கியம். எல்லா  பெண்களின் கனவு இது. இப்போதைக்கு நான் எனது தொழிலை பற்றி நினைத்து கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காதல், மற்றும் ரகசிய திருமணம் சம்பந்தமாக ரன்வீர் இந்தளவுக்கு வெளிப்படையாக சொல்ல முன்வந்திருப்பதே அவர்களின் காதலை உறுதி செய்துள்ளது. அதற்கான தருணம் இப்போதைக்கு இல்லை என்பதால் கொஞ்சம் சுற்றி வளைத்து ரன்வீர் பேசியுள்ளார் என பாலிவுட் வட்டாரம் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறது. பொதுவாக திரை நட்சத்திரங்கள் தங்களின் காதலை மூடி மறைத்தே பேசுவார்கள். மூச்சுவிடாமலே இருப்பார்கள். இது சினிமாவில் வழக்கம். அதாவது கலாச்சாரம். விராட் கோலியும், அனுஷ்காவும் தங்களின் காதலை கடைசி வரை கவனமாக பொத்தி பாதுகாத்துதான் வந்தார்கள். இறுதியில் அதிரடியாக கல்யாணம் நடைபெற்றது. ஆக, விரைவில் பாலிவுட்டில் ஒரு பந்தக் கால் நட இருக்கிறார்கள். அது மட்டும் உறுதி.  

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்