[X] Close

“காவிரியை பாலைவனம் ஆக்குவதுதான் அரசின் திட்டம்” : அபாயமணி அடிக்கும் இயற்கை ஆர்வலர்கள்

cauvery-is-an-burning-issue-of-Tamilnadu

ஸ்கீம் (SCHEME) என்ற ஆங்கில வார்த்தைக்கு திட்டம் என்பதுதான் அர்த்தம்; ஆனால், இப்போது அதற்கு ‘சதி’ என்ற புதிய ஓர் அர்த்தத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன மத்திய அரசும் கர்நாடக மாநிலமும். காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு கொடுத்திருந்த தண்ணீர் அளவை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் குறைத்துவிட்டார்கள் என்று ஏற்கெனவே டெல்டா விவசாயிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தக் குறைந்த அளவு தண்ணீரை உத்தரவாதமாகப் பெற வழிசெய்யும் காவிரி மேலாண்மை வாரியம்கூட அமைக்காமல், ‘ஸ்கீம்’ என்றால் என்னவென்று கேட்டு, கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு காரணம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்தான் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அது மட்டுமே காரணமல்ல என்று உறுதியாக சொல்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.  நீண்ட காலமாக இப்பிரச்சினைகளுக்காக போராடி வரும், அதனாலே சிறையில் வாடும் முகிலனுடன் வழக்கறிஞர்கள் மூலமாக சில கேள்விகளை முன்வைத்தோம்.


Advertisement

“மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதற்குப் பின்னால் நீண்டகாலத் திட்டம் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கடியில் உள்ள 300 லட்சம் கோடி மதிப்புள்ள நிலக்கரியையும், மீத்தேன், ஷேல், ஹைட்ரோகார்பன் போன்றவற்றையும் எடுப்பதற்குதான் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை காரணம் காட்டி, காவிரியை நமக்கு மறுக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடந்த 30 ஆண்டுகளாக இந்த நோக்கத்துடன்தான் கர்நாடகாவின் அடாவடித்தனத்தை மத்திய அரசு தூண்டிவிட்டு வருகிறது. 

இந்த வஞ்சகத்தை தமிழக அரசாவது வலுவாக எதிர்க்கிறதா என்றால் அதுவும் இல்லை. காரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் காவிரி நதியும் அதன் துணை நதிகளும் வாரியத்தின் கண்காணிப்பில் வந்துவிடும். இதனால், இந்த ஆறுகளில் நடக்கும் பல லட்சம் கோடி மதிப்புள்ள ஆற்று மணல் கொள்ளை தடைபடும். எனவேதான், தமிழக ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஆக்கப்பூர்வமான எந்தப் போராட்டத்தையும் செய்யாமல் கண் துடைப்பு நாடகங்களை மட்டுமே அரங்கேற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக ஒருவேளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கட்டாயம் எழுந்தால், 1991 மற்றும் 2016-இல் நடந்ததைப் போல் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டுவார்கள் என்ற அச்சம் எனக்கு உள்ளது. பிறகு அதனைக் காரணம் காட்டியே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தள்ளிப்போடுவார்கள்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் தமிழகத்திற்கு முறையாக கிடைத்துவிட்டால், டெல்டாவை பாலைவனமாக்கி அதன் வளங்களை கொள்ளையடிக்கும் மத்திய அரசின் கனவு பொய்த்துப்போகும். எனவே, கர்நாடகாவை மறைமுகமாக தூண்டிவிட்டு. ஒற்றைத் தீர்ப்பாயம் அமைத்து, மேகதாது அணைகட்ட உதவி செய்து... என்று அடுத்தடுத்து எதையேனும் செய்து காவிரி நீரை இல்லாமல் செய்து, தமிழகத்தை சூறையாடவே மத்திய அரசு முயற்சிக்கும். நமது அரசியல்வாதிகளும் மணல் கொள்ளைக்காகவே அதனை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்” என்கிறார் கோபத்துடன்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுடன் பேசினோம்: “காவிரியின் மொத்தத் தண்ணீரையும் எடுத்துக்கொள்ள நினைப்பது கர்நாடகத்தின்  பேராசை. ஆனால், அதற்கு நீதி வழங்க மறுக்கும் மத்திய அரசின் செயல்தான் அதிர்ச்சியளிக்கிறது. பொதுவாக தமிழ் மண் மீது, மொழி மீது மத்திய அரசுக்கு எப்போதும் பகையுணர்வு உண்டு. அந்தப் போக்குதான் காவிரி பிரச்சினையிலும் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும் மத்திய அரசை நிற்கச் செய்கிறது. இரண்டாவது காரணம், காவிரிப் படுகையின் ஏராளமான இயற்கை வளங்கள். அதனை தடையின்றி கைப்பற்ற வேண்டுமானால் இங்குள்ள மக்கள் எல்லாம் வெளியேற்றப்பட வேண்டும். அவ்வாறு வெளியேற்றப்படவேண்டும் என்றால் காவிரி பொய்த்துப் போகவேண்டும். காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனால்தான் இப்பகுதி விவசாயிகள் இந்த நிலத்தைவிட்டு வெளியேறுவார்கள். 

வாழ வழியில்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல், எல்லாவற்றையையும் இழந்து இந்த மண்ணைவிட்டு மக்களை வெளியேற்றினால்தான், கனிமவளத்தை வேட்டையாட முடியும். இதனால்தான் உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் இவர்கள் காவிரியை வழங்க மறுக்கிறார்கள். 
தமிழகத்தில் மக்கள்தொகை விரைவில் 9 கோடியாக மாறும். எனவே, அதற்கான உணவு உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். எனவே, நம் எதிர்காலம் முழுக்கவும் காவிரி டெல்டாவை நம்பியே இருக்கிறது. ஆனால், அதனை வளர்க்க மத்திய அரசு விரும்பவில்லை.கடலூர், நாகையில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்துள்ளனர். அதன்மூலமாக இதனை சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறும். அதுபோல நரிமணத்தில் இப்போது ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்துகொண்டு உள்ளனர். இது 600 ஏக்கரில் செயல்படுகிறது. இப்போது மேலும் 650 ஏக்கர் நிலத்தை தமிழக முதல்வரிடம் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுள்ளார். இந்த நிலத்தில் 10 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்குத் தேவையான கச்சா எண்ணெயை டெல்டா முழுவதும் இன்னும் பல இடங்களில் இருந்து எடுக்கவே திட்டமிட்டுள்ளனர்.மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு எதிர்த்ததால் அது காலாவதியாகிவிட்டது என்று அறிவித்தது மத்திய அரசு. ஆனால், கைவிடப்பட்டதாக சொல்லப்பட்ட மீத்தேன் திட்டத்துக்குதான் 23-3-2017 அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, கடும் மக்கள் போராட்டத்திற்குப் பிறகும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு 27-3-17 அன்று ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது ஷேல் மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளனர். மத்திய அரசு அவர்கள் திட்டத்தில் தெளிவாக உள்ளனர். நம்மிடையே நடிக்கிறார்கள்” என்கிறார் வேதனையுடன் ஜெயராமன்.

“இப்போதே முறைப்படி காவிரி நீர் வராததால் பல மடங்கு விவசாயப் பரப்பு குறைந்துவிட்டது.நிலத்தடி நீரை நம்பி உள்ள 20 சதவீத நிலங்களில் மட்டுமே தொடர்ச்சியான விவசாயம் நடக்கிறது.மற்றது எல்லாம் ஆற்றுப் பாசனத்தை நம்பி தரிசாகவே கிடக்கிறது. இப்படியே தொடர்ச்சியாக விவசாயம் பொய்த்துப்போனதால், விவசாயிகள்,வேறு வழியின்றி நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு வேறு எங்காவது பிழைப்பைத் தேடித்தான் செல்வார்கள். ஏற்கெனவே இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் திருப்பூர், சென்னை, கோவை போன்ற மாவட்டங்களுக்கு அகதிகளாக சென்றுவிட்டனர். சோமாலியா போன்ற நாடுகளின் வரலாற்றைப் படித்தால் இப்படித்தான் நடந்துள்ளது எனத் தெரியும்.பாஜக எம்பி இல.கணேசன் ‘ஒரு மாநிலத்துக்காக ஓர் ஊரை தியாகம் செய்யலாம், ஓர் ஊருக்காக ஒரு மனிதன் தியாகம் செய்யலாம்’ என்று சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் மத்திய அரசின் உண்மையான குரல். அதாவது, இந்தியாவின் நலனுக்காக காவிரி டெல்டாவை தியாகம் செய்யுங்கள் என்கிறார்கள்” என்று பதட்டத்துடன் எச்சரிக்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் மருத்துவர் பாரதிச்செல்வன்.

தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமனுடன் பேசினோம்: “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெளிவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில்தான் நீரினை கணக்கிட்டு, ஆய்வுசெய்து, திறந்துவிடும் அதிகாரம் இருக்கவேண்டும். கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, தமிழகத்தின் மேட்டூர், பவானி, அமராவதி, கேரளாவின் பாணாசாகர் ஆகிய எட்டு அணைகளின் கட்டுப்பாடும் இந்த வாரியத்திடம் இருக்கவேண்டும் என்று அது சொல்கிறது. இவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயத்தை ‘ஸ்கீம்’ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இதனை தீர்ப்பு வந்த நாளில் இருந்தே நாங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டே வருகிறோம். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணத்துக்கு ஏற்பவே இதுபோன்ற ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதோ என்ற சந்தேகம் இப்போது வலுவாகியுள்ளது.

நடுவர்மன்றத் தீர்ப்பில் எல்லா விவரங்களும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தத் தீர்ப்பு காகிதமாக இல்லாமல் செயல்முறைக்குவர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்; அதற்கு எது போன்ற அதிகாரிகளை நியமிக்கவேண்டும்; அவர்களுக்கான தகுதி என்ன என்பதையெல்லாம் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்ட தண்ணீரின் அளவை குறைப்பதைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் அப்படியே நடைமுறைக்கு வரும் என்று சொன்ன இறுதித் தீர்ப்பு, இப்போது ஸ்கீம் என்ற வார்த்தை விளையாட்டில் குழம்பி வருகிறது.மத்திய அரசின் உண்மையான நோக்கம் இப்போதுதான் வெளிப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்ற மத்திய அரசின் நோக்கத்திற்காகத்தான் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். இப்போது நீதிமன்றமே ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று சொல்கிறது. இதுதான் அவர்களின் உண்மையான முகம்” என்கிறார்.

“உச்ச நீதிமன்றம், இறுதித் தீர்ப்பில், ஹெல்சிங்கி கோட்பாட்டின் அடிப்படையில் பாரம்பரிய பாசன உரிமையை நிலைநாட்டாமல், 2002-ஆம் ஆண்டின் இந்திய தேசிய நதிநீர்க் கொள்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாக சொல்கிறது. இந்தக் கொள்கையே அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதாவது, மாநிலங்களிடம் உள்ள தண்ணீர் உரிமையை பறித்து மத்திய அரசின் கைக்கு கொண்டுசெல்வதே இந்திய தேசிய நதிநீர்க் கொள்கையின் நோக்கம். எந்த நிமிடத்தில் தண்ணீர் இந்தியாவின் கைக்குப் போகிறதோ அதற்கு அடுத்த நிமிடமே அது கார்ப்பரேட்டுகளின் கைக்குச் செல்லும். இதனை உணராமல் அல்லது உணர்ந்தும் தெரியாததுபோல் மாநில அரசுகள் உள்ளன.‘நதிகள் என்பது எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை; அது மத்திய அரசின் சொத்து’ என்று உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் சொல்வதன் மூலமாக, மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தில் உள்ள ஆறு, நீர், அணை ஆகியவற்றை மத்திய அரசின் கரங்களுக்கு கொண்டுசெல்ல முயற்சிப்பது உணர்த்தப்படுகிறது. இது முழுக்க முழுக்க இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டத்தின் வழி நின்றுதான் தீர்ப்பு வழங்கு வேண்டுமே ஒழிய, அரசியல் அமைப்புச் சட்டத்தையே ஒரு தீர்ப்பின் மூலமாக வளைக்க முடியாது. எனவே, இந்தத் தீர்ப்பை ஐந்து அல்லது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

முல்லைப்பெரியாறு விஷயத்தில் இதுதான் நடந்தது. அதாவது, கேரளா தனது மாநிலத்தில் உள்ள அத்தனை அணைகளும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று சட்டம் இயற்றியது. இதனால், நமது கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு உரிமையை கேரளா சொந்தம் கொண்டாடியது. பின்னர் இவ்வழக்கு அரசியல் அமைப்பு ஆயத்துக்குச் சென்றுதான் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. அதனால், காவிரியின் இறுதித் தீர்ப்பையும் அரசியல் அமைப்பு ஆயத்துக்கு கொண்டுசெல்லும் சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும்” என்கிறார் கி. வெங்கட்ராமன்.

இதன் ஆபத்துகளை சொல்கிறார் பேராசிரியர் ஜெயராமன்: “உலக அளவில் ஆறுகள் அனைத்தும் பாரம்பரியமாக யார் அனுபவித்து வருகிறார்களோ அவர்களுக்குதான் சொந்தம் என்று சர்வதேச ஹெல்சிங்கி கோட்பாடு சொல்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பில், ‘ஆறுகள் யாருக்கும் சொந்தம் இல்லை, அது தேசிய சொத்து’ என்கிறது. மத்திய அரசின் கைகளுக்கு ஆறுகள் போகுமேயானால் அது அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு சொந்தமாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஏற்கெனவே மத்திய அரசு வைத்திருக்கிறது. இந்த இணைக்கும் கால்வாய்களை பெருமுதலாளிகள் தங்கள் செலவில் வெட்டுவார்கள். பின்னர், அந்த செலவினத்தை ஈடுகட்ட பயனாளிகளிடம் பணத்தை வசூல் செய்துகொள்ளும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும். அதாவது, எப்படி சுங்கச் சாவடிகளில் பணம் கட்டி சாலைகளில் பயணம் செய்கின்றோமோ, அதேபோல ஆறுகளை இணைக்க முதலீடு செய்த முதலாளிகளிடம் பணம் கட்டி, நாம் பயன்படுத்த தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி நதிகள் கார்ப்பரேட் கம்பெனிகள் கைகளுக்கு சென்ற பின்னர், அவர்கள் தங்கள் நீர்த்தேவையை பிரச்சினை இல்லாமல் நிறைவு செய்வார்கள். 

எதிர்காலத்தில் பெரிய ஆறுகள் என்று இல்லை, சிறு சிறு ஆறுகளைக்கூட பராமரிப்பு என்ற பெயரில் பெருமுதலாளிகளிடம் குறிப்பிட்ட தூரத்துக்கு கொடுத்து விடுவார்கள். அந்தக் குறிப்பிட்ட தூரத்தில் யார் அந்த ஆறினை பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த பெருமுதலாளிகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். நீங்கள் குளிக்க, துணி துவைக்க, பாசனம் செய்ய, மாடு குளிப்பாட்டக்கூட கட்டணம் செலுத்திதான் பயன்படுத்த முடியும். இதையெல்லாம் நான் கற்பனையாக கூறவில்லை, சட்டீஸ்கரில் சியோனாத் என்ற ஆறினை ஏற்கெனவே முதலாளிகளுக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுத்து விட்டனர். அந்த ஆறினை இப்போது மக்கள் இலவசமாக பயன்படுத்த முடியாது; மீன்பிடிக்க முடியாது. இதுதான் இங்கும் நடக்கப்போகிறது.மாநில அரசுகளும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் இதன் பேராபத்தை உணராமல் உள்ளனர் அல்லது மணல் கொள்ளை அவர்கள் கண்ணை மறைக்கிறது.இதனைத்தான் ‘ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற என் புத்தகத்தில் விரிவாக சொல்லியுள்ளேன். அதற்காக என் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டார்கள்.” 

இதனைப் பற்றி கி. வெங்கட்ராமனிடம் கேட்டோம்: ‘1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது’ என்று இறுதித் தீர்ப்பில் சொல்லியுள்ளனர். இது மிகப்பெரிய அநீதியாகும்.நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் இப்போது ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலீடாக இந்த நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது 1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாக சொல்லிவிட்டு, இப்போது வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பானது இன்னும் 15 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று சொல்கின்றனர். அப்படியானால் இன்னும் 15 ஆண்டுகள் கழித்து என்ன நிலைமை?1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று அறிவிக்காமல் இருந்திருந்தால், இன்னும் 15 ஆண்டுகள் கழித்து இந்தத் தீர்ப்பு உயிரற்றுப் போகும்போது, 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீண்டும் உயிர்பெறும். எனவே, தந்திரமாக 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதியாகிவிட்டது, இறுதித் தீர்ப்பும் 15 ஆண்டுகளில் முடிந்துபோகும் என்று சொல்லியுள்ளார்கள். 15 ஆண்டுகள் கழித்து ஒன்றுமே இல்லாமல் நிற்கப் போகிறோம்” என்கிறார்.

பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “காவிரி மேலாண்மை வாரியம் என்றால் என்ன? மேற்பார்வை வாரியம் என்றால் என்ன? நீர்தானே முக்கியம், பெயரா முக்கியம்?” என்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பும் வெங்கட்ராமன், “பெயர் முக்கியம் இல்லை என்றால், இவர்கள் ஏன் மேலாண்மை வாரியம் என்ற பெயரைக் கண்டு அஞ்சுகின்றனர். பெயரை மட்டும் இவர்கள் மாற்றவில்லை, உள்ளே உள்ள அம்சங்களையும் நீர்த்துப்போக செய்யவே இந்தப் பெயர் மாற்று வேலை” என்கிறார்.பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி, “உங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேளுங்கள், காவிரி வேண்டும் என்று ஏன் கேட்கிறீர்கள்? நான் கடலில் இருந்து தண்ணீர் எடுத்துத் தருகிறேன்” என்கிறார். தமிழிசை சௌந்தரராஜன், காவிரி மேலாண்மை வாரியத்தை மற என்கிறார் என்றால், சுப்ரமணியசாமியோ காவிரியையே மற என்கிறார். “நமக்கு காவிரி இல்லை என்பதனைத்தான் பாஜகவினர் சூசகமாக இப்படி சொல்கின்றனர்.காவிரிக்காக போராடும் மக்களையெல்லாம் பயங்கரவாதிகள் என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்கின்றார். மற்ற மாநில பாஜகவினர் எல்லாம் அந்த மாநிலப் பிரச்சினைகள் என்று வரும்போது தங்கள் மாநிலத்திற்காகவே குரல் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் தேசியக் கட்சிகள் எப்போதும் மாநிலத்தின் சார்பாக குரல் கொடுக்காமல் தேசியத் தலைமைக்காகவே குரல் கொடுப்பார்கள். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடக்கம்” என்று ஆவேசமாக கூறுகிறார் வெங்கட்ராமன்.

“காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தற்போது தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. ஆனால், கர்நாடக அரசியல் கட்சிகள்போல் ஒன்றிணைந்து போராடாமல் இப்படி தனித்தனியே போராடுவது தீர்வுக்கு வழிவகுக்குமா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரம் இந்த அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் பெரிய நன்மைகள் கிடைத்துவிடாது” என அதிர்ச்சியூட்டுகிறார் முகிலன்.“லட்சம் உறுப்பினர்களை தன்னகத்தே வைத்திருந்தும், தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுத்து நிலைமைகளை மாற்றிவிடவில்லை. ஒவ்வொரு முறை பிரச்சினை எழும்போதும் அடையாள ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஒருநாள் போராட்டம் என நடத்தி தங்கள் இருப்பை மட்டும் காட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.கடந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்கூட அனைத்து அரசியல் கட்சிகளும் அடையாளப் போராட்டம் மட்டுமே நடத்தின. பின்னர் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்காமல் அமைதியாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது. இதோ, இந்த ஆண்டு வழக்கம்போல நீட் வந்துவிட்டது. அதுபோல, பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்தும் அனைத்துக் கட்சிகளும் சில அடையாளப் போராட்டங்களை மட்டுமே நடத்தி அமைதியாகின. 

அரசியல் கட்சிகளை நம்பாமல், மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராடியதால்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றிபெற்றது.நெடுவாசல், கெயில் திட்டங்களை தடுத்தேனும் வைத்திருக்கிறோம். அரசியல் கட்சிகளை நம்பியிருந்தால் இந்நேரம் இவையும் பறிபோயிருக்கும். எனவே, இனிமேல் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ என எந்தப் போராட்டமாக இருந்தாலும், அரசியல் கட்சிகளை நம்பாமல், மக்கள் திரள் போராட்டங்களை நடத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்கிறார் முகிலன்.

கட்டுரையாளர் :சு. வீரமணி

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close