Published : 04,Apr 2018 01:30 AM
முன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்: இன்று இறுதிச்சடங்கு

தமிழக முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 4 மணியளவில் மாதவன் உயிரிழந்தார். திருப்பத்தூர் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு தனலெட்சுமி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
1990 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் மாதவன் பதவி வகித்துள்ளார். செ.மாதவனின் இறுதிச்சடங்கு இன்று மாலை சிங்கம்புணரியில் நடைபெறவுள்ளது. மாதவன் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாதவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிங்கம்புணரி பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.