Published : 03,Apr 2018 02:32 AM

’ஜெட்லாக்’ வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் பரிதாபம்!

Jet-lagged-West-Indies-slump-to-massive-defeat

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று பரிதாபமாக தோற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பாதுகாப்புப் பிரச்னையை காரணம் காட்டி முன்னணி வீரர்கள் வெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இரண்டாம் கட்ட வீரர்கள் ஜேசன் முகமது தலைமையில் அங்கு சென்றுள்ளனர். கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது. 

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்குள் சுருட்டியது பாகிஸ்தான். டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் குறைந்தபட்ச ஸ்கோர் இது.  இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் நேற்று நடந்தது. ரசிகர்கள் கடும் சோதனைக்குப் பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 58 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். வெறும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஹூசைன் தலட் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 123 ரன்கள் எடுத்து பரிதாபமாகத் தோற்றது. அந்த அணியின் வால்டன் அதிகப்பட்சமாக 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டும், சதாப் கான், ஹூசைன் தலத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

ஜெட்லாக் காரணமா?

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பரிதாப தோல்விக்கு ’ஜெட்லாக்’கும் காரணம் என்று கூறப்படுகிறது.  பாகிஸ்தான் வருவதற்கு முன்னணி வீரர்கள் மறுத்துவிட்டதை அடுத்து, புதிய வீரர்களை கடந்த வெள்ளிக்கிழமை காலைதான் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்ததாம். இதையடுத்து அன்றே அவசர அவசரமாக வீரர்கள் பாகிஸ்தான் புறப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் விமான பயணம். இதனால் ஏற்பட்ட ’ஜெட்லாக்’ களைவதற்குள்ளாகவே திங்கள்கிழமை முதல் போட்டி நடந்தது. போதிய கால அவகாசம் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டதால்தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மோசமாக தோற்றார்கள் என்று கூறப்படுகிறது.
 

பாபர் அசாம் வருத்தம்

வெற்றிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், ’இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வெறும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டது வருத்தமானது. சில பந்துகளை அடிக்காமல் விட்டது இதற்கு காரணம். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதிலும் நான் சிறப்பாகத்தான் விளையாடினேன். ஆனாலும் எனது அணி வெற்றி பெறவில்லை’ என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்