Published : 01,Apr 2018 12:36 PM
வகுப்புவாத மோதல்: மத்திய இணையமைச்சர் மகன் கைது!

பீகாரில் நிகழ்ந்த வகுப்புவாத மோதல் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேயின் மகன் அர்ஜித் ஷாஸ்வத் கைது செய்யப்பட்டார்.
பீகாரின் பகல்பூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அர்ஜித் ஷாஸ்வத் தலைமையில் நடைபெற்ற மதரீதியிலான பேரணியில் அதிக சத்ததுடன் இசை ஒலிக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மோதல் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அர்ஜித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய கடந்த 24ஆம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அர்ஜித் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், சில மணி நேரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார். பாட்னா சந்திப்பின் அருகேயுள்ள அனுமன் ஆலயப் பகுதியில் இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தான் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுவதை மறுத்த அர்ஜித், 'பாரத மாதா வாழ்க', 'ஸ்ரீராம் வாழ்க' என்று முழக்கமிடுவது குற்றமெனில், தன்னை கிரிமினல் என்றழைக்கலாம் என்று கூறியுள்ளார்.