
காவிரி விவகாரத்தில் பதவி விலகவா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தோம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர் “ திமுக எம்எல்ஏக்களை முதலில் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். பின் நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அவர்களது ராஜினாமாவை ஏற்ற பின் ஏதேனும் முடிவு ஏற்படுகிறதா என பார்ப்போம். இல்லையென்றால் நாங்கள் ராஜினாமா செய்கிறோம்.முதலில் அவர்கள் தான் ராஜினாமா செய்வோம் என்றார்கள். அவர்கள் செய்யட்டும். நாங்கள் ராஜினாமா செய்வோம் என கூறவில்லையே. இதற்காகவா மக்களை சந்தித்து வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தோம்’ எனக் கூறினார்.
முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ஆம் தேதி சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதல்வர் தெரிவித்ததாகக் கூறினார். மேலும் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கூண்டோடு தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், இன்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் தெரிகிறது. மத்திய அரசின் காலதாமதத்தால் தமிழகத்தில் டெல்டா விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.