Published : 30,Mar 2018 07:10 AM
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் ஓய்வுப்பெற்ற காவலர் முருகேசன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்யும்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அதில், முருகன், சந்திரன் என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 60 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்ட இருளப்பன் என்ற தொழிலாளி, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலையில் எரிந்த தீயை இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அணைத்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாகனங்கள் எரிந்து நாசமாகின.