[X] Close

ஏலத்துக்கு வந்த ஏர் இந்தியா.... இதில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்!

Up-and-down-for-Air-india-comes-auction

பொதுவாக ஒரு சொத்து ஏலத்துக்கு வந்தால், அதனுடன் தொடர்புள்ளவர்கள் வருத்தப்படுவார்கள். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட "ஏர் இந்தியா" ஏலத்துக்கு வந்துள்ள நேரத்தில் - இதுகுறித்து வருத்தப்பட யாரும் இல்லை. இன்னொரு பக்கம், "இத... இதைத்தான் எதிர்பார்த்தேன்!" என, வரவேற்காத கதியில் சந்தோஷப்படும் கூட்டம்தான் அதிகம். இதற்கு காரணம் - ஏர் இந்தியா, ஒரு பொதுத்துறை நிறுவனம். 

"சோஷிலிச கொள்கையுள்ள நாடு" என, அரசியல்சட்டத்தின் அறிமுகத்திலேயே சொல்லிக் கொண்டாலும், நமக்கு பொதுச் சொத்தை கையாள்வது குறித்து தெரியவில்லை என்பதற்கு ஏர் இந்தியா இன்னொரு உதாரணம். இப்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பின்படி, எல்லாம் சரியாக நடந்தால், 2018ம் ஆண்டு இறுதிக்குள், ஏர் இந்தியா இன்னொரு தனியார் நிறுவனமாக மாறிவிடும். ஆனால், அதற்கு "பொறுப்பேற்று நடத்தப் போவது யார்...?" அல்லது, "எந்த நிறுவனம், ஏர் இந்தியாவை வாங்கப் போகிறது?" என்பதுதான் இப்போதையக் கேள்வி!


Advertisement

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விதை போட்டது ஜேஆர்டி டாடா என்பது, பலருக்கும் தெரிந்த தகவல்தான். 1930களில் அவர் தொடங்கி வைத்த இந்திய விமான சரித்திரம் - அதன் பயணத்தில், இத்தனை முரட்டு ஏர் பாக்கெட்களை (Rough Air Pockets) - வேறுபட்ட காற்றழுத்தங்களைச் சந்தித்து, ஒருவகையான திண்டாட்டத்துடனேதான் காலவெளியைக் கடக்க வேண்டியிருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜேஆர்டி டாடா காலத்திலேயே ஏராளமாக நடந்துவிட்டன. அதன்பிறகு நடந்ததெல்லாம், அதைவிட அபத்தங்கள். 

ஜேஆர்டி டாடா பிறந்து..... வளர்ந்ததெல்லாம் பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரத்தில்! அவர் சிறுவனாக இருந்த நேரத்தில், அண்டை வீட்டில் இருந்தவர் லூயிஸ் பிளிரோட் என்ற, அந்நாட்டு விமானப்படை அதிகாரி; இங்கிலீஷ் கால்வாயை, முதலில் விமானத்தில் பறந்து கடந்த சாதனையைச் செய்தவரும் இவரே. அதேபோல, முதல் உலகப் போரின்போது விமானங்களை இயக்கிய அடோல்ஃப் பெகோடு என்ற மற்றொரு விமானியும் ஜேஆர்டியின் ஆதர்ஷ புருஷர்கள். இவர்களை முன்னுதாரணமாக கொண்ட, ஜேஆர்டி டாடாவுக்கும், அப்போதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை. பின்னர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தாலும் விமானியாகும் ஆர்வத்தை விடாமல், அதற்கு பயிற்சி எடுத்தார். "இண்டோ பர்மா ஏரோ கிளப்" மூலம், தி ராயல் ஏரோ கிளப்-பிடமிருந்து - 1929ம் ஆண்டு, இந்தியாவில் வழங்கப்பட்ட முதல் விமானி லைசன்ஸை ஜேஆர்டி டாடா பெற்றார்.  

பிரிட்டிஷார், ஃபிரஞ்சுக்காரர், டச்சுக்காரர் என பலரும் - அந்நாளில் இந்தியாவின் பல பகுதிகளை ஆண்டதால், மேற்கத்திய நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் அப்போதே கடிதப் போக்குவரத்து அதிகம். ஆனால், அவை வந்துசேர பல நாட்கள் ஆகும். அந்நாளில், கராச்சியில் ஒரு விமான நிலையம் இருந்தது. அதனால், ஐரோப்பாவில் இருந்து வரும் கடிதங்கள் விமானம் மூலம் கராச்சி வந்து, அதன்பிறகு ரயில் மூலம்தான் வர வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு, விமானம் மூலம் கொண்டு சென்றால் என்ற யோசனை இருந்தது. இதற்கான ஒப்பந்தம், ராயல் விமானப்படையின் நெவில் வின்ட்சென்ட் என்ற விமானிக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் ஜேஆர்டி டாடாவைத் தொடர்பு கொண்டார். கராச்சிக்கு வந்த கடிதங்களை, மறுநாளே இந்தியாவுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று அதற்காக இருவருமாகச் சேர்ந்து 'டாடா ஏர்மெயில்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய - "புஸ் மோத்" வகையில் 2 சிறு விமானங்களை வாங்கினர். 2 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீடு. 

கடிதங்களைக் கொண்டுவரும் விமான சேவையை, விரைந்து தொடங்க நினைத்த நேரத்தில், பம்பாயில் பெய்த கடும் மழையால், விமானம் இறங்க திட்டமிடப்பட்ட பகுதியில் நீர் தேங்கி சேரும் சகதியுமானது. அந்த ஈரம் காய்ந்து... விமானம் இறங்கும் அளவு சூழல் மாற வேண்டும் என்பதால், ஒருமாத காலம் வெள்ளோட்டம் தடைபட்டது. பின்னர் 1932ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, 25 கிலோ எடை கொண்ட கடிதங்களைச் சுமந்து கொண்டு கராச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தை, அகஹமதாபாத் வழியாக, பம்பாய்க்கு ஓட்டி வந்தது - ஜேஆர்டி டாடாதான். அப்போது பம்பாயின் ஜூஹூவில் அதிக வசதி இல்லை என்பதால், ஒரு ஓலைக்குடிசைதான் அலுவலகமாகச் செயல்பட்டது. அடுத்து, சென்னைக்கு வரவேண்டிய கடிதங்களை ஏற்றிக் கொண்டு, பம்பாயில் இருந்து புறப்பட்ட விமானத்தை டாடாவின் பங்குதாரர் நெவில் வின்ட்சென்ட் ஓட்டி வந்தார். இடையில் பெல்லாரியில் தரையிறக்கி, இரவைக் கழித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தனர். இப்படியாக, ஒவ்வொரு திங்கட் கிழமையும் கராச்சியில் இருந்து, சென்னை வரையான தூரத்தை - 28 மணி நேரத்தில் கடந்தன கடிதங்கள். அந்த ஆண்டே, பம்பாய் திருவனந்தபுரம் இடையே 6 பயணிகள் செல்லும் வசதியுடன் மற்றொரு விமானமும் இயக்கப்பட்டது. இதனால், முதலாண்டு இறுதியில் 2,57,495 கிலோ மீட்டர் தூரம் பறந்து, 10 டன் கடிதங்களையும்,155 பயணிகளையும் சுமந்து சென்ற விமான சேவையால் 60,000 ரூபாய் லாபமீட்டியிருந்தது புதிய விமான நிறுவனம். 

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த விமான சேவை இந்தூர், போபால், குவாலியர் வழியாக டெல்லிக்கு நீண்டது. வெகுவிரைவில், ஹைதராபாத், கோவா, கொழும்பு போன்ற நகரங்களுக்கும் டாடா ஏர்மெயில் விமானங்கள் பறந்தன. எனினும், 1938ல் 'டாடா ஏர்மெயில்' தனது பெயரை மாற்றிக் கொண்டு, 'டாடா ஏர்லைன்ஸ்' என்ற புதிய பெயருடன் செயல்படத் தொடங்கியது.

பின்னர், இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால், நாடு..., மக்கள்...., என எல்லாரது கவனமும் திசை திரும்பியது. ஆனால், போர் முடிவுக்கு வந்த 1945க்குப் பிறகு, விமான சேவைக்கு புதிதாகவும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகியிருப்பதை உணர்ந்தார் டாடா. அதனால், நவீன விமானங்களை வாங்கி, மிகப் பெரிய அளவில் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய நினைத்தார். அதற்கு தேவைப்பட்ட நிதியை பங்கு விற்பனை மூலம் பெற நினைத்தார். அதற்குமுன், தனது நிறுவனத்தின் பெயரை பொதுவானதாக மாற்றியமைத்தார். இது டாடாவின் நிறுவனம் என்ற தோற்றத்தை மாற்றி, இந்தியாவுக்கான...., இந்தியர்களின் விமான நிறுவனம் என்ற அடையாளத்தைத் தர முயன்றார். அப்போதுதான் "ஏர் இந்தியா" உதயமாகிறது. பின்னர், ஏர் இந்தியா பங்குகளை பொதுவெளியீடு மூலம் விற்று நிதி திரட்டினார். அதைக்கொண்டு, அந்த நாட்களில் இருந்ததிலேயே சிறந்தது என கருதப்பட்ட, 40 இருக்கைகள் கொண்ட 'லாக்ஹீட் கன்ஸ்டலேஷன்' விமானங்களை வாங்கினர். அவற்றுக்கு 'மலபார் இளவரசி' என பெயரிட்டு, நீண்ட தூர வெளிநாட்டு பயண சேவையைத் தொடங்கினர். 1948, ஜூன் 8ம் தேதி, பம்பாயின் சான்டா குருஸ் விமான நிலையத்தில் இருந்து, லண்டன் நகருக்கு விமானம் பறந்தது. இடையில், கெய்ரோ, ஜெனிவா என இரு இடங்களில், அது தரையிறங்கி செல்லும் என்ற நிலையில் - அந்த பயணத்துக்கான கட்டணமாக 1,720 ரூபாய் பெறப்பட்டது. அந்த முதல் பயணத்தில் அன்றைய முன்னணி தொழிலதிபர்கள் பலர் இடம்பெற, லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குச் சென்ற 2 இந்திய சைக்கிள் வீரர்களும், லண்டனுக்கான இந்திய தூதர் கிருஷ்ண மேனன் என மொத்தம் 35 பேர் பயணித்தனர்.

அதன் பிறகான நாட்கள் - ஏர் இந்தியா வரலாற்றில் பொற்காலம் என சொல்லலாம். தொடர்ந்து சேவையில் முன்னேற்றமும், விரிவாக்கமும் காட்டி வந்ததோடு, நேரந்தவறாமை - ஏர் இந்தியாவின் இன்னொரு சிறப்பம்சமாக மாறியிருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் தனிப்பட்ட முறையில்... நுட்பமாக அணுகி...., தீவிர ஈடுபாட்டுடன் இயங்கியதால், ஏர் இந்தியாவை விட அளவிலும், எண்ணிக்கையிலும் வலுவான மற்ற நாட்டு விமான நிறுவனங்களை விட, பலரும் ஏர் இந்தியா பயணத்தை விரும்பினர். நாளாக... நாளாக... இந்த கருத்து வலுப்பெற்றது. இந்த நாட்களில் டாடா குழுமத்தில் டாடா ஸ்டீல் உள்ளிட்ட, இன்னபிற நிறுவனங்கள் தொடங்கி செயல்பட்டு வந்தாலும், ஜேஆர்டி டாடா பெரும்பாலான தனது நேரத்தை செலவிட்டது ஏர் இந்தியாவில்தான். அதனால்தான், சர்வதேச அளவில், அதற்கான மரியாதையை தக்க வைக்கவும், குறைந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள முடிந்தது. 

"இதுவும் கடந்துபோகும்" என சொல்லப்படுவது, கஷ்ட காலத்துக்கு மட்டுமல்லவே! ஏர் இந்தியாவும், இதில் தப்பவில்லை. சோஷிலிச கோஷம் ஓங்கி ஒலித்ததையொட்டி வந்த விவாதத்தால், 1953ல் அப்போதைய பிரதமர் நேரு, ஏர் இந்தியாவை திடீரென நாட்டுடமையாக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து, ஜேஆர்டி டாடாவிடம் அவர் எந்த கருத்தையும் கேட்கவில்லை. மறுபுறம், ஆரம்பம் முதல் ஒரு தனிநபரின் முயற்சி, உழைப்பில் உருவான நிறுவனம் குறித்த, மிக முக்கியமான முடிவைக் கூட, கலந்து ஆலோசிக்காமல் அரசே தன்னிச்சையாக எடுத்தது பலருக்கு அதிர்ச்சி தந்தது. டாடாவுக்கும்தான். எனவே, இதுகுறித்து நேரடியாக பிரதமர் நேருவுக்கே கடிதம் மூலம் தனது மனக்குமுறலை ஜேஆர்டி கொட்டியிருக்கிறார். இதை உணர்ந்த நேரு, ஏர் இந்தியா நாட்டுடமையாக்கப்பட்டாலும், அதன் தலைவராக ஜேஆர்டி டாடாவே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது மட்டுமல்ல. இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தொடர்பாக ஜேஆர்டி டாடா சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் பிரதமர் நேரு ஏற்றுக் கொண்டார். ஒருகட்டத்தில் உள்ளுர் விமான சேவைப் பணிகளையும், வெளிநாட்டு விமான சேவைப் பணிகளையும் தனித்தனியாக பிரித்துவிடலாம் என ஜேஆர்டி டாடா சொன்னபோது உருவானதுதான் - ஏர் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட - இந்தியன் ஏர்லைன்ஸ்! இது மட்டுமின்றி, நிர்வாக முடிவுகளில் ஜேஆர்டி டாடாவுக்கு கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலும் முழு அதிகாரம் இருந்தது என்றே சொல்லப்படுகிறது. அதனால், டாடாவும், தனது தொடர்ந்த ஈடுபட்டால், ஏர் இந்தியாவை ஒரு லாபகரமான நிறுவனமாகவே நடத்திக் காட்டினார். 

ஒரு கட்டத்தில் நவீன சிங்கப்பூரை கட்டமைத்து வந்த அந்நாட்டின் சிற்பி லீ குவான் யூ, சீர்திருத்தங்களுக்குப் பின், தனது நாட்டின் உயரிய நிலையை - மற்ற நாடுகளில் விளம்பரப்படுத்த, எளிதான வழியைத் தேடினார். அப்போது, பல நாடுகளுக்கும் சென்று பயணிகளை இறக்கிவிட்டு... பின்னர் அங்கிருந்து ஏற்றி வரும் விமானம் போல சிறந்த.. சிக்கன விளம்பர சாதனம் வேறு இல்லை என முடிவு எடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸை சிங்கப்பூருக்கான விளம்பர சாதனமாக கருதி, அதில் கவனம் செலுத்த முடிவு செய்தாராம். அதனால், இருப்பதிலேயே சிறந்தது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸை நிலைநிறுத்த யாரிடம், ஆலோசனை, பயிற்சி பெறுவது என ஆராய்ந்தபோது, மற்ற பல நாடுகளின் விமான சேவையைவிட ஏர் இந்தியாதான் இதற்கு பொறுத்தமானது என இறுதிமுடிவு எடுக்கப்பட்டதாம். அந்த அளவுக்கு எல்லா அம்சங்களிலும் உன்னத நிலையில் இருந்த நிறுவனம், இன்று எட்டியுள்ள நிலையை அடையக் காரணங்கள், அதன்பிறகுதான் தொடங்குகின்றன.

ஏர் இந்தியா Vs ஜேஆர்டி டாடா உறவில் அடுத்த கீறல் விழுந்தது 1978ல். அதற்குமுன் இந்தியாவில் அமலில் இருந்த எமர்ஜென்ஸி முடிவுக்கு வந்தபின் நடந்த 1977 தேர்தலில், இந்திரா காந்தி பெருந்தோல்வி கண்டார். ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பு வகித்த நேரம். பிப்ரவரி 13ம் நாள். ஏர் இந்தியாவின் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு கடிதத்துடன், இந்திய விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற ஏர் சீப் மார்ஷல் பி சி லால் என்பவர் ஜேஆர்டி டாடாவை அணுகி, தான் ஏர் இந்தியாவின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அன்றைய செய்தித்தாள்களும் அதை உறுதிப்படுத்தின. இது, தனக்கு செய்யப்பட்ட மாபெரும் அநீதி என ஜேஆர்டி டாடா கருதினார். அதனால், பிரதமர் தேசாய்க்கு எழுதிய கடிதத்தில், "சில தினங்களுக்கு முன்புதான் தங்களை நேரில் சந்தித்தேன். மிகச்சரியாகச் சொல்வதானால், ஜனவரி 24ம் தேதி. 10 நாட்களுக்கு முன்புதான். அப்போது, உங்கள் மனதில் இப்படியொரு யோசனை இருந்திருக்கும் என்பதற்கான அடையாளத்தைக் கூட உணர முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தாராம். அதோடு,  "எது எப்படியானாலும், இதுவரையான, ஏர் இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவு வெற்றிகரமான... லாபகரமான ஆண்டாக 1977-78 இருந்தது என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, ஏர் இந்தியா நிறுவனம் அதிகபட்ச லாபத்தில் இருக்கும் காலம் இது என்பதை பதிவு செய்திருக்கிறார். மொரார்ஜி தேசாய் மிகவும் நேர்மையானவர் எனச் சொல்லப்பட்டாலும், அவர் ஜேஆர்டி டாடாவை நடத்திய விதம், பதவியைப் பறித்த முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மறுபுறம், அவ்வாறு மொரார்ஜி நடந்து கொண்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவதுதான் இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது. 

"ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் மது பானங்களை உடனடியாக, முற்றிலுமாக நிறுத்த வேண்டும்" என பிரதமர் மொரார்ஜி தேசாய் கூறியிருக்கிறார். ஆனால், ஜேஆர்டி டாடா இதற்கு உடன்படவில்லை. குறிப்பாக, "பன்னாட்டு விமான சேவையில் இது அவசியமானதும், தவிர்க்க முடியாததும்" என டாடா கருத்து தெரிவித்துள்ளார். இதை ஏற்க விரும்பாத தேசாய், அதற்கு பதிலாகத்தான், ஜேஆர்டி டாடாவை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் என்கின்றன தகவல்கள். எனினும், 1980ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அவர், ஜேஆர்டி டாடாவை அழைத்து, மீண்டும் ஏர்இந்தியாவின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினர் ஆக்கினார். ஆனால், அப்போதே ஏர் இந்தியாவின் ஆளுமையிலும், வலிமையிலும் விரிசல்கள் விழத் தொடங்கிவிட்டிருந்தன.

அதன்பின் வந்த ராஜீவ் காந்தி... வி பி சிங்..., ஐகே குஜ்ரால்..., நரசிம்மராவ்...., வாஜ்பாய்..., மன்மோகன் சிங் என அடுத்தடுத்து பிரதமர்களின் காலங்களில், ஏர் இந்தியாவின் விரிசல்களுக்கு காரணங்களைத் தேடாமல், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையை - தங்களுக்கு நெருங்கியவர்களுக்கும், தேவையானவர்களுக்கும் கவுரவப் பதவி அளிக்க ஏற்படுத்தப்பட்டது போல மாற்றிவிட்டனர். அதனால்தான் இனி மீட்கவே இயலாது என்ற - இன்றைய கதிக்கு தள்ளப்பட்டு இப்போது ஏலத்துக்கே வந்துவிட்டது என்கிறார், விமானப் போக்குவரத்து துறையின் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி, ஓய்வுபெற்றுவிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி பத்திரிகையாளர் ஒருவர். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close