Published : 29,Mar 2018 05:12 AM
அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி சேர்க்க உத்தரவு

அம்பேத்கரின் பெயரில் ராம்ஜி என்ற பெயரைச் சேர்க்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நேற்றிரவு அரசு பிறப்பித்துள்ளது.
அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான அம்பேத்கர், அரசியல் சாசனப் பக்கங்களில் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளதை உத்தரப் பிரதேச அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து துறைகள் மற்றும் லக்னோ, அலகாபாத் உயர் நீதிமன்றங்களுக்கு இதுதொடர்பாக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அனைத்து ஆவணங்களிலும் பீமாராவ் அம்பேத்கர் என்ற பெயருக்கு இடையில் ராம்ஜி சேர்த்து பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றும்படி அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாபா சாஹிப் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் மகாசபா என்ற பெயரில் கடந்த ஆண்டில் உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் தொடங்கிய இயக்கத்தின் சார்பில், பெயர் மாற்றப் பரிந்துரை பிரதமர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாக அந்த இயக்கத்தின் இயக்குனர் லால்ஜி பிரசாத் நிர்மல் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ர வழக்கப்படி, ஒருவர் தனது பெயரின் இடையில் தந்தையின் பெயரைச் சேர்ப்பது அவசியம் என்ற நிலையில், அம்பேத்கரின் பெயரிலும் அது சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தில் அம்பேத்கர் பெயருக்கான எழுத்துக்களில் மாற்றமில்லை என்ற போதிலும் ஹிந்தியில் முதலெழுத்தை நெடிலாக மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.