
முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய மனைவி முயன்ற சம்பவம் தேனி வட்டாரத்தில் நடந்துள்ளது. தகாத தொடர்பில் இருந்த காவலர், கூலிப்படையை ஏவியது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தேனி அருகேயுள்ள குள்ளக்கவுண்டபட்டியை சேர்ந்த சாமியும் அதே பகுதியை சேர்ந்த சுகந்தியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரெடிமெட் ஆடை விற்பனையகத்தை நடத்தி வந்த இவர்களின் வாழ்க்கை சந்தோஷகமாகத்தான் சென்றது. ஆனால் தகாத உறவுக்கு ஆசைப்பட்ட சுகந்தி காவலருடன் இணைந்து கணவரை தீர்த்துக் கட்ட முயற்சி செய்திருக்கிறார். கணவர் சாமி காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
கடந்த சில தினங்களுக்கு முன் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் சாமி. அதில் மற்றொரு ஆணுடன் சேர்ந்து கொண்டு தனக்கே தெரியாமல் தன்னை கொலை செய்ய மனைவி சுகந்தி திட்டமிட்டிருக்கிறார் என தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதில், ராமநாதபுரத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றிய சுதாகர் என்பவருக்கும், சுகந்திக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவந்தது. தேனியை பூர்விமாகக் கொண்ட சுதாகர், ராமநாதபுரத்திற்கு பணிமாறுதலாகி சென்றபின்னரும், இருவரும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் சுகந்தியின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த சாமி, அவரது நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். ஒருநாள் சுகந்திக்கு தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து பார்த்தபோது, காவலர் சுதாகரை பற்றிய தகவல்கள் சாமிக்கு தெரியவந்துள்ளது. இருவரது உரையாடல்களை ஆராய்ந்தபோது தம்மை கொல்ல திட்டமிட்டிருக்கும் செய்தியை அறிந்த சாமி அதிர்ச்சியடைந்துள்ளார். கூலிப்படையை ஏவிய காவலர் சுதாகர், சாமியை கொலை செய்வதற்கு சரியான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருந்துள்ளார் என்கின்றனர் காவல்துறையினர். கொலைக்கு திட்டமிட்ட சுகந்தி, காவலர் சுதாகர், சுதாகரின் நண்பர் மணிகண்டன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.