Published : 25,Mar 2018 06:39 AM

மளிகைக் கடையில் இருந்து கிரிக்கெட்டுக்கு... இது ராதாவின் கதை!

Mumbai-Vegetable-Vendor-s-Daughter-Becomes-India-Cricketer

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மளிகைக் கடைக்காரர் ஒருவரின் மகள்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இப்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியது. அந்த தொடரின் டி20 போட்டியில் புதிதாக இடம்பிடித்திருந்தார் இளம் வீராங்கனை, ராதா யாதவ்! 17 வயதான ராதாவின் அப்பா சிறு மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார், மும்பை காந்திவிலியில்!

அங்கு வெறும் 225 சதுர அடி வீட்டில் வசிக்கும் ராதாவின் குடும்பம் கொஞ்சம் பெரிது. அப்பா, அம்மா, தங்கை, இரண்டு அண்ணன்கள், அண்ணி, அவர்களின் குழந்தைகள் என இந்த தம்மாத்துண்டு வீட்டில் நெருக்கடியாக வசித்தாலும் அதற்கு இடையிலும் போராடிப் பயிற்சி பெற்று இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கிறார் ராதா!

‘நேரம் போகலைன்னா, அப்பாவோட மளிகை கடையில உட்கார்ந்துக்குவேன். வியாபாரத்தைப் பார்ப்பேன். 2011- உலகக் கோப்பைக்கு முன்னால நான் கிரிக்கெட்டை பார்த்ததில்லை. அப்புறம்தான் எனக்கு கிரிக்கெட் ஆசை வந்தது. பக்கத்துல இருக்கிற கிரவுண்ட்ல போய் விளையாடுவேன். எனக்கு தனியா பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை காசு கொடுத்து வாங்க வழியில்ல.

அப்பா சம்பாதிக்கிற வருமானம், வீட்டுச் செலவுக்கே போதாது. அப்பதான், அங்க நடந்த ஒரு போட்டியில எல்லாரையும் என் சுழல் பந்துவீச்சால, அவுட்டாக்கிட்டேன். அப்ப பிரபுல் நாயக் அப்படிங்கற கோச் என்னை பார்த்தார். நல்ல விளையாடற, இந்த பொண்ணு யார்னு விசாரிச்சு, எங்க வீட்டுக்கு வந்தார். அப்பாகிட்ட பேசினார். அவர் வந்த பிறகுதான் என் கிரிக்கெட் கனவு நன வாச்சு. மற்றவங்க கிரிக்கெட் பேட்டை இரவல் வாங்கிதான் விளையாடிட்டு இருந்தேன். அவர்தான் எனக்கு பேட் வாங்கிக் கொடுத்தார். பயிற்சியில ஈடுபட்டேன். இப்ப இந்திய கிரிக்கெட் டீம்ல, நான் இருக்கேன்கிறதையே என்னால நம்ப முடியலை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரா முதல் போட்டியில பங்கேற்றேன். உண்மையிலேயே எனக்கு தன்னால கண்ணீர் வந்திடுச்சு’’ என்று எமோஷனலாகிறார் ராதா.

ஆரம்பத்தில் பெண்களுக்கு தனி கிரிக்கெட் டீம் இருப்பதே தெரியாதாம் ராதாவுக்கு. ‘ஆம்பளைங்க கூடதான் விளையா டணும்னு நினைச்சேன். போக போகத்தான் இது தனி டீம்னு புரிஞ்சுது’ என்கிற ராதா, இதுவரை இரண்டு சர்வதேச டி20 போட்டி களில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

முதல் தரப்போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் ராதா. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மேற்கு மண் டல அணிக்காக விளையாடிய ராதா, 35 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 138 ரன்களையும் எடுத்திருக்கிறார். 2016-17 மற்றும் 2017-18 -ல் நடந்த 11 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.  இதையடுத்து இந்திய ஏ அணியில் இடம் கிடைத்தது அவருக்கு. 

கடந்த வாரம் ஏ அணியில் இடம் பெற்றிருந்த அவர்,  இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங் கேற்றிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை, ராஜேஷ்வரி காயம் அடைந்துவிட, அவருக்கு பதிலாகச் சேர்க்கப்பட்டார் ராதா.
‘ராதா சிறப்பாக விளையாடுகிறார். உலகக் கோப்பையில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்கிறார் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் துஷார்.

‘நிறைய சாதிக்கணும்னு ஆசை இருக்கு. அதுக்கு முன்னால அணியில நிரந்தரமா ஒரு இடத்தைப் பிடிக்கணும்’ என்கிறார் ராதா!

நீ கலக்குவ தாயீ!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்