Published : 24,Mar 2018 11:44 AM
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம்

5-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் லலுங்கான் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 12. அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் பெற்றோர்கள் வெளியில் சென்றுவிட்ட நேரத்தில் சுதா மட்டும் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சுதாவின் வீட்டிற்கு வந்த 3 நபர்கள் சிறுமி சுதாவை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க சுதா எவ்வளோ முயற்சித்திருக்கிறார். ஆனால் முடியவில்லை. பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் அந்தக் கும்பல், சுதாவை உயிரோடு கொளுத்தியிருக்கிறது. வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து சுதா மீது ஊற்றிய கும்பல் சிறுமி சுதாவை கொளுத்திவிட்டு சென்றுள்ளது.
பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சுதாவை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றது 3 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது. அதில் இருவர் சிறுமியின் உடன் படிக்கும் மாணவர்கள். மைனர்களான அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய மூன்றாவது நபரை தேடி வருகின்றனர். 5ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.