கனிமொழியை காலி செய்ய பார்க்கிறார் ஸ்டாலின்: அதிமுக எம்பி தம்பிதுரை பகிரங்க குற்றச்சாட்டு

கனிமொழியை காலி செய்ய பார்க்கிறார் ஸ்டாலின்: அதிமுக எம்பி தம்பிதுரை பகிரங்க குற்றச்சாட்டு
கனிமொழியை காலி செய்ய பார்க்கிறார் ஸ்டாலின்: அதிமுக எம்பி தம்பிதுரை பகிரங்க குற்றச்சாட்டு

ஆந்திர மாநில கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் காவிரி விவகாரத்தில் எம்பிக்கள் அனைவரும் இராஜினாமா செய்யலாம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஸ்டாலின் இது போன்று தெரிவிப்பது கனிமொழி மீதான காழ்ப்புணர்ச்சி என குற்றம்சாட்டியுள்ளார் தம்பிதுரை.

அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஆந்திர மாநில கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமெனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் அனைவரும் இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் ஸ்டாலின் பேசியுள்ளதை கண்டு வேதனை அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்டாலின் கூறியுள்ள இந்த கருத்துகளின் பின்னால் தவறான எண்ணமும் , திமுகவின் உள்கட்சி சித்து விளியாட்டு இருப்பதால் பரிதாபம் ஏற்படுவதாகவும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏன் ஆதரிக்க அதிமுக மறுக்கிறது என விளக்கியுள்ள தம்பிதுரை, ஆந்திராவில் ஓராண்டுக்குள் தேர்தல் வர உள்ளதால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், தெலுங்கு தேசமும் வாக்கு வங்கியை குறி வைத்து இதனை நகர்த்துவதாகவும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அது தமிழகத்தை வெகுவாக பாதிக்கும் என கூறியுள்ளார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டிய போதும், செம்மரம் வெட்டியதாக கூறி எந்த மனிதாபிமானமும் இல்லாமல் 20 தமிழர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதையும் ஆந்திர அரசின் , தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திராவுக்கு துணை போக சொல்கிறாரா ஸ்டாலின் எனவும் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும், தமிழ் ஈழ விடுதலை போரில் பல இலட்சம் தமிழர்கள் வீடிழந்து , பிள்ளைகளை இழந்த போது தங்கள் பதவி சுகத்துக்காக அமைதி காத்த ஸ்டாலின், இப்போது இராஜினாமா செய்யலாம் என கூறுவதன் பின்னணி என்ன என கேள்வி எழுப்பியுள்ளார் தம்பிதுரை. முன்னதாக மத்திய அமைச்சராக முக அழகிரியும், தயாநிதி மாறனும் இருந்தபோது ஈழத்தமிழர் நலன் காக்க என பொய் பரப்புரை செய்து அவர்களது பதவியை ஸ்டாலின் காலி செய்தார் என்றும் தற்போது பல ஆண்டுகளாக திமுகவின் மாநிலங்களவை தலைவராக கனிமொழி செயல்படுவதை பொறுக்க முடியாமல் வாருங்கள் அனைவரும் இராஜினாமா செய்வோம் என சொல்கிறார் ஸ்டாலின் என தம்பிதுரை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘ எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வந்த அதிமுக தமிழர்களின் நலன் காக்க என்ன செய்ய வேண்டுமென வியூகம் அமைக்கும் என்றும், அது குறித்து ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை” என்றும் தம்பிதுரை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com