[X] Close

ஏர்செல்: முடியாத சோகம்.. விழி பிதுங்கும் வாடிக்கையாளர்கள்..

Aircel-Customers-issue-was-Continued

தமிழகத்தில் 1 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களை கொண்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கிய நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏர்செல் நிறுவனம். வியாபார போட்டியில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஏர்செல் சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் சேவையை நிறுத்திக் கொண்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சேவை வழங்கி வந்த நிலையில், கடந்த மாதம் எந்த வித முன்னறிவிப்புமின்றி தமிழகத்தில் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் தனது நிறுவனத்தை திவாலான நிறுவனமாக அறிவிக்க கோரி மனுவும் செய்துள்ளது. 

இது ஒருபுறமிருக்க,  ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி ஒரு மாதம் முடியப்போகும் நிலையில், இந்நிறுவனத்தை நம்பியிருந்த வாடிக்கையாளர்கள் "போர்ட் அவுட் கோட்" (வேறு நிறுவனங்களுக்கு மாற தேவைப்படும் எண்) பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் மண்டல, மாவட்ட சேவை மையங்களில் "போர்ட் அவுட் கோட்" பெற பல நாட்களாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் இந்த போர்ட் அவுட் கோட் வழங்கும் பணியானது வரும் ஏப்ரல் மாதம் 15 அன்றுடன் முடியும் என்று சேவை மையங்களில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

தமிழ்நாட்டில் ஏர்செல் வாடிக்கையாளர்களை கவருவதில் ஏர்டெல், வோடோபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஏர்செல் அலுவலங்கள் முன்பு குடைகள் அமைத்து, அங்கு வரும் ஏர்செல் வாடிக்கையாளர்களை உடனடியாக தங்களது நிறுவனத்திற்கு மாற்றி வருகின்றனர். இதில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில், கடந்த வாரம் வரை சுமார் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்திற்கும், அதற்கு அடுத்து 10 லட்சம் பேர் வோடோபோன் நிறுவனத்திற்கும் மாறியுள்ளனர். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 3.3 லட்சம் பேர் மாறியுள்ள நிலையில், மேலும் 3.7 லட்சம் பேர் மாற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

போர்ட் அவுட் கோட் பெற வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் கூறுகையில்,  “நான் ஆட்டோ  ஒட்டி வருகிறேன். என் வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் எண்ணை தான் கொடுத்துள்ளேன். இதனால் என் சவாரி கெட்டுப்போய் விட்டது. வேறு வழி இல்லாமல் தான் இங்கு அலைகிறோம். அனைத்திற்கும் இந்த எண்னை தான் கொடுத்துள்ளேன். இல்லை என்றால் தூக்கி எறிந்து வீட்டு போய்விடுவேன். தற்போது போர்ட் கோட் கிடைத்தால் இதே எண்னை வேறு நிறுவனத்துக்கு மாற்றி பயன்படுத்திக் கொள்வேன்”, என்றார்.

 “கட்டிட வேலைகளுக்கு செல்லும் அன்றாட கூலி வேலை செய்து வரும் எனக்கு, கட்டிட மேஸ்திரி, இன்ஜினியர், வீட்டு முதலாளிகள் என அனைவரிடமும் இந்த எண்ணை தான் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனத்தை மூடியதால் எனக்கு கிடைக்கும் கூலி வேலையும் கிடைக்காமல் வருமானத்தை இழந்து தவிக்கிறேன். கடந்த நான்கு நாட்களாக  செல்போன் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை பெற வரிசையில் காத்திருக்கிறேன். ஆனால் முடியவில்லை; நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்று மீண்டும் வந்திருக்கிறேன்” என்றார். 

வரிசையில் காத்திருந்த குடும்பத்தலவி விஜயலக்ஷ்மி என்பவரிடம் பேசிய போது, புதிய யோசனையை ஏர்செல் நிறுவனத்துக்கு வைத்தார். அவர் கூறும் போது “ இந்த  செல்போன் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சிம் கார்டுகளை ஊருக்கு ஊர் குடைகள் அமைத்து இலவசமாகவோ, சொற்ப தொகைக்கோ மக்களை கவரும் வகையில் விற்று வந்தனர். தற்போது சேவையை சொல்லாமல் கொள்ளாமல் எவ்வித அறிவிப்புமின்றி மூடியாததால் உறவினர்களுக்கு கூட பேச முடியவில்லை. மூடி இவ்வளவு நாட்களாகி இன்று தான் போர்ட் கோடை பெற முடிந்தது. முன்பு சிம் கார்டு விற்றது போல ஒவ்வொரு ஊர்களுக்கும் முகாம் போல ஏற்பாடு செய்திருந்தால் இது போல அவதியுற தேவை ஏற்பட்டிருக்காது", என்றார்.

நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த போதிலும், தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை அளிக்கும் நோக்கில் ஜிடிஎல் இன்பரா, பார்தி இன்பராடெல், இன்டஸ் டவர்ஸ் மற்றும் ஏடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஏர்செல் சுமார் 40,000 டவர்களைக் குத்தகைக்கு எடுத்து தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்தது ஏர்செல். ஆனால் வேறு நிறுவனங்களுக்கு மாற, வாடிக்கையாளர்கள் மாற நினைப்பதால், அதனை எளிமைப்படுத்தி, நகரங்களில் உள்ளவர்களை தாண்டி கிராமங்களிலும் ஏர்செல் பயன்படுத்துவோருக்கு உதவ வேண்டும் என்பது வாடிக்கையாளார்களின் விருப்ப. செய்யுமா ஏர்செல் ?

கட்டுரை - சார்லஸ், புதிய தலைமுறை 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close