Published : 19,Mar 2018 08:26 AM
மத்திய அரசை காப்பாற்ற அதிமுக போராடுகிறது: சமாஜ்வாதி குற்றச்சாட்டு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக எம்பிக்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் தினமும் போராடி வருகின்றனர்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை நாடாளுமன்ற அவைகளை செயல்பட விடமாட்டோம் என தெரிவித்தார். இந்நிலையில் தொடரும் போராட்டம் காரணமாக நாடாளுமன்ற அவைகள் இரண்டும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரிய விவகாரத்தில், எம்பிக்களின் தொடர் போராட்டத்தால், இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்தும் முன், விவாதம் நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிப்பது போல், எதிர்கட்சிகள் அனைவரும் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அதிமுகவை பயன்படுத்தி அவையை நடக்க விடாமல் மத்திய அரசு செயல்படுகிறது. அதிமுகவும் மத்திய அரசை காப்பாற்றும் நோக்கத்தோடு தினமும் நாடாளுமன்றத்தில் போராடி, அவையை நடக்க விடாமல் செய்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.