Published : 17,Mar 2018 05:03 AM

மோடியைக் கை கழுவிவிட்டதா மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்?  

Electronic-Voting-Machine-hand-washed--modi

உத்திர பிரதேச மாநிலத்தின் 2 மக்களவைத் தொகுதிகள் - கோராக்பூர் மற்றும் பூல்பூர் ஆகியவற்றுக்கு, அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி கண்டுள்ளது. இதை பாஜகவின் தோல்வி என்று சொல்வதைவிட... முலாயம் சிங் யாதவின் - சமாஜ்வாடி கட்சிக்கு கிடைத்த வெற்றி எனச் சொல்லலாம். பாஜக வெற்றி பெறுவதை விரும்பாத மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு இருந்ததால், சமாஜ்வாடி கட்சிக்கு இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.

இதேபோல, பிகார் மாநில இடைத்தேர்தல்களில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி -   கடந்த முறை லாலுவுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார், லாலுவுடன் முரண்பட்டு விலகிச் சென்றுவிட்ட நிலையிலும் நடந்துள்ளது. அதாவது, முந்தைய அரசியல் எதிரியான பாரதிய ஜனதா கட்சியுடன்  நிதிஷ் குமார் தற்போது கை கோர்த்துக் கொண்டுள்ள நிலையில்... அதனால் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் கூடுதல் அனுகூலத்தையும் தாண்டி லாலுவுக்கு வெற்றி கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

இந்த வெற்றி குறித்து அலசவும், ஆராயவும் பல காரணங்கள், பல கோணங்கள் உண்டு. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும், அசுர பலத்தை நோக்கி நகர்வதாக ஒரு தோற்றத்தை  சற்றுமுன் நடந்த வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின. அப்போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெற்ற வெற்றி, அது ஏற்படுத்திய ஈரம் உலர்வதற்கு முன்பே, இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் சேதப்பட்டிருக்கிறது.   

இதுகுறித்த பல திசை பார்வைகள்  விமர்சனங்கள்... கோணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க - 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மெல்ல மெல்ல வலுத்து வந்த பாரதிய ஜனதா கட்சியின் வீச்சில்... உண்மை புரியாமல்.... யதார்த்தத்தை உணராமல்.... பழி போட எதாவது ஒரு காரணத்தைத் தேடிய கட்சிகள் பல உண்டு. தங்களது தோல்விக்கு - எலெக்ட்ரானிக் வோட்டிங் மிஷன் (இவிஎம்) எனச் சொல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பயன்பாடுதான் காரணம் என, குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் பல உண்டு. 

மனோபாவ அடிப்படையில் மட்டுமின்றி, தொழில்நுட்ப ரீதியாகவும் மற்ற பல அரசியல் கட்சிகளை விட, முன்னிலை வகிக்கும் 'மோடி'யின் பாரதிய ஜனதா கட்சி, இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை  தங்களுக்கு சாதகமாக திருத்தி விட்டனர் என்பதுதான் அவர்களது குற்றச்சாட்டு. எந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாலும், அது பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கான வாக்காக பதிவாகும்படி செய்து விட்டார்கள் என பேட்டி அளித்தனர். பாரதிய ஜனதாவின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம் என அநியாயத்துக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதில் முன்னிலை வகித்தது - உ.பி.யின் சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால்... இப்படி ஒரு நீளமான பட்டியல். சொல்லிக் கொண்டே போகலாம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது பழி போடுவோர் பட்டியலில் - ஒரு நேரத்தில் அதிமுகவின் மறைந்த தலைவி ஜெயலலிதாவும் இருந்தார். ஆனால், இவர்கள் எல்லாருமே, மேற்கண்ட குற்றச்சாட்டை வைத்தது, இவர்கள் பரிதாபகரமாக தோற்றபோதுதான். ஆனால், அதே வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கொண்டு நடந்த தேர்தலில், இந்த ஒவ்வொருவருமே ஒரு கட்டத்தில் சிறப்பான வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை ஏனோ நினைவில் கொள்வதில்லை. 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை வேறு ஒரு கம்ப்யூட்டர் புரொகிராம் மூலம் வெளியில் இருந்தே மாற்றிவிட முடியும் என்றால்...., அதை பாரதிய ஜனதா கடந்த காலங்களில் செய்தது என்றால்.... இப்போது ஏன் அதைச் செய்யவில்லை. மற்ற எந்த நேரங்களில் இருந்ததைவிட, 4 வடகிழக்கு மாநிலத் தேர்தலுக்குப் பிறகுதான் பாஜக., நாட்டின் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாறியிருந்தது. அதனால், அவர்கள் எந்த மாதிரியான தில்லுமுல்லு செய்திருந்தாலும், அதன் மூலமாக - "பாஜகவுக்கான ஆதரவு அலை" என நம்ப, பொதுமக்கள் தயாராக இருந்த வேளைதான் இது. இந்த நேரத்தில் பாஜகவின் தோல்வி ஏன்...? மற்ற எதிர்கட்சிகளுக்கு வெற்றி கிடைத்தது எப்படி...? குறிப்பாக, பாஜகவுடன் நேரடியாக மல்லுக்கு நிற்கும் அகிலேஷ், மாயாவதி, லாலு போன்றவர்களின் கட்சிகள் தற்போது பெறும் வெற்றி சொல்லும் தகவல் என்ன?  

இந்திய தேர்தல் ஆணையம், "இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு செய்யலாம் என, தாங்களாக ஒரு பெட்டியை எடுத்துவந்து மீடியா முன் வைக்காமல், தேர்தல் ஆணையத்திடம் உள்ள எதாவது ஒரு எலெக்ட்ரானிக் வோட்டிங் மிஷினை தங்கள் விருப்பம் போல தேர்வு செய்து... அதில் தவறு செய்வது எப்படி என்பதைச் செய்து காட்ட வேண்டும்" எனக் கோரியது. அதை ஏற்க, இன்றுவரை யாரும் முன்வரவில்லை. வெளிநாட்டு நிபுணர்கள் என சொல்லிக் கொண்டவர்களில் தொடங்கி, உள்நாட்டு வித்தகர்கள் வரை இதுதான் நிலை. இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை, மோசடிக்காரர்கள் யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்பதே உண்மை. காரணம் - இந்திய தேர்தல் நடைமுறைகளை முழுவதுமாக ஆய்வு செய்த பின்புதான், அதன் பல்வேறு கூறுகளை.... தேவைகளைக் கருத்தில் கொண்டு, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய தேர்தல் கமிஷனுக்கு தேவைப்படும் அளவு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரித்துத் தந்ததும், இதை உருவாக்கி, வடிவமைத்து, சோதித்து, இறுதி வடிவம் தந்ததும் பெங்களூருவில் இருக்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் (BEL) - பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். இது நம்மில் பலர் அறிந்த செய்திதான். அதன் விஞ்ஞானிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ரங்கராஜன் தலைமையில்தான் (நம்ம அறிவியல் எழுத்தாளர் சுஜாதாதான்) ஆய்வுப் பணிகள் நடந்தன. அதனால், இந்த மெஷின் குறித்த அத்தனை அம்சங்களும் அவருக்கு அத்துபடி. பலமுறை இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்திலும், தேர்தல் கமிஷனிலும் அவர் சாட்சி சொல்லியிருக்கிறார். அதிர்ஷடவசமாக, அவரிடம் 6 ஆண்டுகள் - அன்றாடம் சில மணி நேரங்களாவது இருந்து பணி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த நேரங்களில் இந்த மின்னணு இயந்திரம் குறித்தும், அவரிடம் பலமுறை பேசியுள்ளேன். ஒருமுறை இதேபோல, தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு கும்மியடிக்க... அப்போது... அவர் சொன்ன விளக்கங்கள் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. அதனால், இந்த எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் மெஷினுடன் ஒப்பிடவோ, அவற்றில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் காட்டி, அது போலத்தான் இதுவும் என வாதிடுவது ஏற்புடையதல்ல. 

தற்போதைய மின்னணு இயந்திரம் - வாக்குப்பதிவு செய்யும் கருவி, வாக்கு எண்ணும் இயந்திரம் என இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று வாக்காளரின் முன் உள்ள வாக்குப்பதிவு கருவி. இதில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றும் ஒரு வேட்பாளருக்கானது. அதிகபட்சமாக 16 வேட்பாளர்கள் வரை என்றால், ஒரு சாதனம் போதும். கூடுதல் வேட்பாளர்கள் இருந்தால், அதற்கேற்ப மேலும் இரண்டு வாக்கு பதிவு பெட்டியை இணைத்து, மொத்தமாகப் பயன்படுத்தலாம். 

மின்னணு இயந்திரத்தின் இரண்டாவது பகுதி - பதிவாகும் வாக்குகளை தன்னுள் வரவு வைத்துக் கொண்டு, பின்னர் எண்ணிப் பார்த்துச் சொல்லும் பகுதி. தேர்தல் முடிந்த பிறகு, இதை மட்டும் வைத்துதான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இப்போது, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்பதைச் சொல்ல, ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர் தேவையில்லை. இந்த இயந்திரம் செயல்படும் லாஜிக் தெரிந்தால் போதும். இன்று வரையான குற்றச்சாட்டுகள் எல்லாமே இந்த லாஜிக்கை வைத்து பதில் சொல்லக் கூடியவைதான். அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை திருத்தி விடலாம் என ஆளாளுக்கு சொல்கிறார்களேயன்றி, எங்கே... எந்த நிலையில்.... என்ன செய்தால்.... இந்த இயந்திரத்தில் "மூளை சலவை" சாத்தியம் என, இன்றுவரை யாரும் சொல்லவும் இல்லை; செய்யவும் இல்லை. 

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் ஆங்கில எழுத்துகளின் அகர வரிசைப்படி எழுதப்பட்டு, அதன் அடிப்படையில் வரிசையாக்கப்பட்டு, அதுதான் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் முதல் இடத்தில் இருந்தால், மற்ற தொகுதிகளில் அந்த கட்சியின் வேட்பாளர் பெயருக்கு ஏற்ப, வாக்கு பதிவு இயந்திரத்தில் அவரது பெயர் எத்தனையாவது இடத்தில் இடம்பெறும் என்பதை முன்னதாகவே யாராலும் சொல்ல முடியாது. அதனால், எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்கு பதிவாகும்படி புரோகிராம் செய்வது என்பது சாத்தியமேயில்லை. காரணம், பாஜக வேட்பாளருக்கு எத்தனையாவது எண் என்பது எப்படி முன்னதாகத் தெரியும். அதோடு, இது தொகுதிக்கு தொகுதி மாறும் என்பதால், அதை எப்படி எப்போது புரோகிராம் செய்வது என்ற கேள்வி எழுகிறது. 

அது மட்டுமல்ல. ஒரு கட்சியின் வேட்பாளர் பெயரை மட்டும் சார்ந்ததல்ல, அவருக்கான வாக்குப் பதிவு இயந்திரத்தின் பட்டன் ஒதுக்கீடு. மற்ற கட்சிகளின் வேட்பாளர் பெயரென்ன...? சுயேச்சை வேட்பாளர்களின் பெயரென்ன? அவையனைத்தும் எந்த எழுத்தில் தொடங்குகிறது என்பதை மட்டுமின்றி... அந்த தொகுதியில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள்... என்பதையும் பொறுத்து இது மாறுபடும். ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடினாலோ.... குறைந்தாலோ.... அதற்கேற்பதான் வாக்குப் பதிவு இயந்திரப் பகுதியில் அவருக்கு எத்தனையாவது இடம் என்பதை முடிவுசெய்ய முடியும். இந்த விஷயம் முடிவாவது தேர்தலில் வாக்குப் பதிவு நடக்கும் நாளுக்கு 21 நாட்களுக்கு முன்புதான்; அதாவது இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவாகும் நாளில்தான் என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால், அதற்குமுன் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள்... யார் யார் வேட்பாளர்கள்.... அவர்கள் பெயரென்ன... அதனால், எந்த கட்சியின் வேட்பாளருக்கு எத்தனையாவது இடம் என்பதை எல்லாம் முடிவு செய்ய இயலாது. 

உதாரணத்துக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் 2016ம் ஆண்டு சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம். அங்கே அப்போது மொத்தம் 25 வேட்பாளர்கள். அதிமுக சார்பில் ஜேசிடி பிரபாகர், பாஜக சார்பில் கேடி ராகவன், பாமக சார்பில் கோபால், தேமுதிக சார்பில் மதிவாணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சேவியர் பிளிக்ஸ் போன்றவர்கள் தவிர, சில உதிரிகட்சிகள்... சுயேச்சைகள். இதில் பாஜகவின் கேடி ராகவனுக்கு அகர வரிசைப்படி எத்தனையாவது இடம் கிடைத்தது என்பதை தேர்தல் நாளுக்கு 21 நாட்களுக்கு முன்புதான் முடிவு செய்ய இயலும். இப்போது கேடி ராகவனுக்கு கிடைத்த அதே இடம்... வரிசை எண் மற்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளருக்கு கிடைக்குமா.... கேடி ராகவனுக்கு சாதகமாக புரோகிராம் செய்தது - மற்ற தொகுதிகளில் வேறு கட்சியின் வேட்பாளர்களுக்கோ... சுயேச்சை வேட்பாளர்களுக்கோ கூட சாதகமாக முடியலாம். எனவே, அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களையும் ஒரே மாதிரியாக, முன்னதாகவே புரோகிராம் செய்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது.    

அடுத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக புரோகிராம் செய்யப்படும் என்றால்.... அந்த தொகுதியில் பயன்படுத்தப்படும் எல்லா வாக்கு பதிவு இயந்திரத்திலும், இதை தனித்தனியாக, ஆனால் மிகச் சரியாக செய்து முடிக்க வேண்டும். ஒரு வாக்குச் சாவடிக்கு 2 அல்லது 3 வாக்குப் பதிவு சாதனம் பயன்படுத்தப்பட்டால், ஒரு தொகுதி முழுவதற்கும் எத்தனை இயந்திரம் எனக் கணக்கிட்டு, அத்தனை இயந்திரத்திலும் இதைச் சரியாகச் செய்ய வேண்டும். இங்கே, இன்னொரு பிரச்னை. கொளத்தூர் தொகுதிக்கு எந்தெந்த இயந்திரங்கள் செல்லப் போகிறது என்பதை நாம் முன்னதாக அறிந்து கொண்டு, அந்த இயந்திரங்களில் மாற்றி அமைத்தால்தான் கேடி ராகவனை வெற்றி பெறச் செய்ய முடியும். ஒருவேளை நாம் திருத்தி வைத்த இயந்திரங்கள் வேறு தொகுதிக்கு போனால், எல்லா காரியமும் அதோகதிதான். 

அடுத்தும் ஒரு சவால் இருக்கிறது. சரி... எந்த சட்டமன்ற தொகுதிக்கு எந்தெந்த வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த போகிறார்கள் என்பதை முன்னதாகவே முடிவு செய்ய முடியுமா என்றால், அதுவும் நடைமுறையில் சாத்தியமில்லை. மொத்தமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் எந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னதாகச் சொல்கிறாரோ... அவருக்கு முன்னால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் கிடைக்கும். அதனால், நாம் புரோகிராம் செய்து வைத்த வாக்குப் பதிவு பெட்டி மிகச் சரியாக அந்த தொகுதிக்கு செல்லவில்லை என்றால்... அதோடு, இதுபோன்ற திருத்தங்களை ஓரிரு இயந்திரத்தில் செய்து, ஒரு தொகுதி மொத்தத்தின் முடிவையும் மாற்றிவிட முடியாது. ஒட்டு மொத்தமாக ஒரு தொகுதியின் வாக்குப் பதிவு கருவிகளைத் திருத்துவதே அசாத்திய பணி. இதில் மாநிலம் முழுக்க.... நாடு முழுக்க.... இந்த வேலையை செய்வது என்பதெல்லாம் எப்படி சாத்தியப்படும். 

இதையெல்லாம் தாண்டி, இந்த மெஷின்களை எல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரிகளே அந்தந்த நாளில் திருத்தம் செய்துவிட முடியதா என்றால், அதுவும் இயலாதுதான். காரணம் - தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இந்த இயந்திரத்தை கையாள, அதற்கு முன்னால் வகுப்பு எடுத்து சொல்லித் தரப்பட்டுதான் தேர்தல் நடக்கிறது. அதனால், எல்லா வாக்குச் சாவடிகளிலும் உள்ள எல்லா தேர்தல் அதிகாரிகளும் புரோகிராம் செய்யும் அளவுக்கு நிபுணர்கள் இல்லை என்பதோடு, அவர்கள் எல்லாருமே ஒரே சிந்தனை... சார்பு கொண்ட மனிதர்களாகவும் இருக்க வாய்ப்பில்லை. எனவே எல்லாரும் கேடி ராகவனுக்கு சாதகமாக செயல்பட மாட்டார்கள் என்பது போலவே, ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் செயல்பட வாய்ப்பில்லை. 

இதைத் தாண்டி, நமது நாட்டில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் அடிப்படை புரோகிராம் ஒரு சிப்பில் பதிவு செய்யப்பட்டு, அது முற்றிலும் சீலிடப்பட்டு, அதில் கை வைத்தால், செயலிழக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுதான் தயாரிக்கப்படுகிறது. அதனால், அந்த புரோகிராமில் மாற்றங்கள் செய்வது என்பது அத்தனை எளிதல்ல என்பதுடன், ஒவ்வொரு தொகுதிக்கும்... ஒவ்வொரு வாக்குச் சவாடிக்கும்... இதை திட்டமிட்டு, படு ரகசியமாக 'கடத்திச் சென்று' இயந்திரங்களின் மூளையையே மாற்றிவிடுகிறார்கள் என்பது அத்தனை எளிதானதல்ல. 

தந்தை முலாயம் சிங் சொன்னதையே திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்த அகிலேஷ் யாதவ், தற்போது கிடைத்துள்ள இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின்னும், தன் கருத்தை திருத்திக் கொள்ளவில்லை. ஆனால், கொஞ்சம் மாற்றிக் கொண்டு, இறங்கி வந்திருப்பது போலத் தோன்றுகிறது. அதாவது, "இந்த இயந்திரங்களுக்கு பதில் வாக்குச் சீட்டு முறை இருந்திருந்தால், தற்போது வென்றுள்ள தங்களது கட்சியின் வேட்பாளர் பெற்ற வாக்கு வித்தியாசம் அதிகரித்து இருக்கும் என்றும், பல வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் சரியாகச் செயல்பட தாமதமானதால், வாக்குப் பதிவு வேகம் குறைந்துவிட்டது என்றும், அதனால், அதிக வாக்குகள் பதிவாகாமல் போனது எனவும் விளக்கம் தந்திருக்கிறார். ஆக, இப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் திருத்தம் செய்வது என்ற குற்றச்சாட்டின் உக்ரம் குறைந்துள்ளது. வாக்குப் பதிவு வேகமாக நடக்கவில்லை என்பதுதான் பிரச்னை என்பதுபோல குற்றம் சாட்டுகிறார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், எங்கெல்லாம் தாமதத்தால் வாக்குபதிவு சரியாக நடக்கவில்லையோ, அங்கெல்லாம் மறுவாக்குப் பதிவு கேட்க தேர்தல் விதிகளில் இடமும், அவ்வாறு நடந்ததற்கான முன்னுதாரணங்களும் உள்ளன. அதனால், உ.ண்மையிலேயே ஒரு சில சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களால் வாக்குப் பதிவு தாமதித்து இருந்தால், அதை உரிய நேரத்தில் கோரிக்கையாக வைத்து, சமாஜ்வாடி கட்சி தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டுமேயன்றி, இப்போது மின்னணு வாக்குப் பதிவை குறை சொல்லி பயனில்லை.

 

அதனால், வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பொறுத்தவரை - மோடியும், லாலுவும், முலாயம் சிங்கும், மாயாவதியும்.... மற்ற எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல... அதன் தொண்டர்களும் கூட ஒன்றுதான். தோல்வியை ஜீரணிக்காத முடியாத அரசியல் கட்சித் தலைவர்களுக்குத்தான் அவர்களது அரசியல் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்