Published : 15,Mar 2018 05:52 PM

பெரியார் சிலையை மீண்டும் ஏன் சீண்டுகிறார்கள்?

Saffron-dress-for-Periyar--Anna-and-MGR-statue-in-Namakkal

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மர்ம நபர்கள் காவித் துணி அணிவித்த சம்பவம் மீண்டும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

நாமக்கல் நகரில் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் மீதுதான் இப்படியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்ததாக பார்க்க முடியவில்லை.  நாமக்கலின் பிரதான சாலையில் அதிமுக சார்பில் 1984-ம் ஆண்டு முதன்முதலில் வைக்கப்பட்டது பெரியார் சிலைதான். பின்னர்தான், 1993-ல் எம்.ஜி.ஆர் சிலையும், 1994-ம் ஆண்டு அண்ணா சிலையும் அருகருகில் இணைந்தார் போல் அமைக்கப்பட்டது. மூன்று சிலைகளும் மார்பளவில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் மீது போர்த்தப்பட்டிருந்த காவித் துணிகள் நீக்கப்பட்டது. விசாரணை நடத்தி காவித் துணி அணிவித்தவர்கள் யார் என கண்டுபிடிக்கப்படும் என காவல்துறையினர் கூறியிருந்தாலும், நிச்சயம் அது நடக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது போன்ற எண்ணத்தையே வரவழைக்கிறது. 

       

திரிபுராவில் லெனின் சிலைகள் இடித்து தள்ளப்பட்டதை தொடர்ந்து அதேபோல், தமிழகத்திலும் ‘சாதிவெறியர் பெரியார்’ சிலைகள் உடைக்கப்படும் என்று ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களில் இருந்து தமிழகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஹெச்.ராஜாவிற்கு எதிரான போராட்டங்களால் தமிழகமே அதிர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு முழுவீச்சில் போராட்டங்கள் நடைபெற்றன. பெரியார் குறித்த பதிவு என்னுடைய அனுமதி இல்லாமல் அட்மின் போட்டுவிட்டார் என ஹெச்.ராஜாவையும் சொல்ல வைத்தது. ஹெச்.ராஜா இதுபோல பல கருத்துக்களை கூறி இருந்தாலும், அப்பொழுதெல்லாம் அவரது கட்சியில் யாரும் மறுப்போ, எதிர்ப்போ தெரிவித்தது இல்லை. ஆனால், இந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் மிகவும் காட்டமாகவே கருத்து தெரிவித்தார். பாஜகவின் மத்திய தலைமையும் சிலைகள் குறித்த விஷயங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. 

          

பெரியார் சிலை குறித்த விவாதங்கள் ஒரு வழியாக முடிந்து சில நாட்களாக அமைதியாக இருந்தது. ஆனால், தற்போது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவித் துணி அணிவித்து மீண்டும் சர்ச்சை கிளப்படுகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகள் உடன் இருந்தாலும், காவி உடைக்கு பொருந்தாமல், நேருக்கு நேராக இருக்கும் பெரியாரை குறிவைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் சிலரும், வலதுசாரி சிந்தனையாளர்களும் சமீப காலமாக பெரியார் குறித்த பல்வேறு எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரியார் தமிழ் மொழி குறித்த, கடவுள் சிலை உடைப்பு குறித்த சில நிகழ்வுகளைக் குறித்து நேரடியாக எதிர்ப்புகளை பதிவு செய்கிறார்கள். இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் பலரும் உரிய விளக்கங்களை கூறி வருகிறார்கள். விஞ்ஞானத்திற்குப் புறம்பான வகையில் புராணங்களையும், இதிகாசங்களையும் கொண்டுள்ளதால் தான் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறினார். தமிழ் மொழிக்கு பெரியார் ஆற்றிய தொண்டுகள் பல என்றும் அவர்கள் பட்டியலிடுகின்றனர். இருப்பினும், தற்போதைய தலைமுறையினர் பெரியார் குறித்து அதிக அளவில் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால், மீண்டும் அவரை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். 

பெரியார் மீதான விமர்சனங்கள் இதற்கு முன்பு இப்படி எழவில்லை. யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லைதான். ஆனால், தற்போது எழும் விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கிறதா? பெரியார் ஆற்றிய அளப்பரிய பணிகளுக்கு மதிப்பளித்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பெரியார் தமிழகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை சிதைக்கும் முயற்சியாகதான் விமர்சனங்கள் எழுவதாக தெரிகிறது.

       

ஜாதிய, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒருவர் சாதிவெறியர் என்ற வார்த்தையில் எப்படி அழைக்க முடிகிறது?. பெயருக்குப் பின்னாள் சாதி பட்டதை இணைத்துக் கொள்ளும் வழக்கம் தமிழகத்தை தாண்டினால் மற்ற மாநிலங்களில் இயல்பாகவே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை எப்பொழுதே மாறிவிட்டது. இதற்கெல்லாம் வித்திட்டவர் பெரியார்..பெரியார்..பெரியார். இதனால்தான் பெரியாரை மீது இப்படியான  விமர்சனத்தை யார் வைக்கிறார்கள், என்ன நோக்கத்திற்காக வைக்கிறார்கள் என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. 

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கே சிம்ம சொப்பமாக இருந்தது தமிழ்நாடு. தற்பொழுதும், இந்திய அளவில் தமிழகம் தனித்து நிற்பதும், அப்பொழுது பெரியார் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான பணிகள் தான். காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அதே சிக்கல்தான் தற்போது பாஜகவுக்கும் இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் காலூன்ற முடிந்த பாரதிய ஜனதா கட்சியினால், தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலையே தற்போது வரை இருந்து வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவூன்ற என்று சொல்வதை விட வலதுசாரி சிந்தனை வேரூன்ற சிக்கலாக இருப்பது, இடதுசாரிகளை விட பெரியாரின் கருத்துக்களாக தான் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியினருக்கு நேர் எதிரானவர்கள் இடதுசாரிகள்.  பெரியார் காலத்திலும் சிங்கார வேலர், ஜீவா உள்ளிட்ட பல தலைவர்கள் பெரிய அளவில் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்களையெல்லாம் கடந்து பெரியார் இன்றளவும் தமிழகத்தில் போற்றப்படுகிறார். அதனால்தான், இடதுசாரிகளை காட்டிலும், தமிழகத்தில் பெரியார் பாரதிய ஜனதா கட்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். 

           

பெரியார் பற்றிய பதிவை நான் போடவில்லை, அட்மின் தான் போட்டார் என்று ஹெச்.ராஜா சொல்வது எப்படி நம்புவதற்கு ஏற்றார் இல்லையோ, அதேபோல், யாரோ மர்ம நபர்கள் காவித் துணியை போர்த்திவிட்டு சென்றார்கள் என்று கூறுவதும். இந்த இடத்தில் சம்பவம் நடந்த நாமக்கல் மாவட்டத்தை குறிப்பிட்டு பார்க்க வேண்டும். பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்திற்கு எப்படி திட்டமிட்டு எதிர்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதனால், வலதுசாரி கருத்துக்களை தமிழகத்தில் புகுத்துவதற்கு சமீப காலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதற்காக பெரியாரை கையில் எடுப்பது, கையில் எடுப்பவர்களுக்கே எதிர்வினையாகத் தான் முடியும்...

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்