[X] Close

இந்திய அணியை ஆக்கிரமிக்கும் தமிழர்கள்..!

In-recent-more-tamil-player-came-indian-team

அரசியல் ஆனாலும் சரி விளையாட்டு என்றாலும் சரி தென் இந்தியா புறக்கணிக்கபடுகிறது என்பது பரவலான குற்றச்சாட்டு. ஆனால் அப்படியான குற்றசாட்டுகளை தன்னுடைய திறமையால் உடைத்தெரிந்து வெற்றி பெற்றவர்கள் இங்கு பலர் உண்டு.


Advertisement

ஆம் அண்மைகாலங்களில் தேசிய அளவில் விளையாட தமிழர்கள் இடம் பிடிப்பது அதிகரித்து வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது. அதுவும் இந்தியாவை பொருத்தவரை அதிக ரசிகர்களை ஈர்த்த விளையாட்டு எது என்றால், கண்ணை மூடிகொண்டு சிறுபிள்ளை கூட சொல்லிவிடும்  ‘கிரிக்கெட்’ என்று. இங்கு கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதையெல்லாம் தாண்டி உணர்வு பூர்வமாகவே பார்க்கப்படுகிறது. அப்படியான கிரிக்கெட்டில் சமீப நாட்களாய் இந்திய அணியில் விளையாட தேர்வாகும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு போவது தமிழக ரசிகர்களிடம் மகிழ்வையும், அதே நேரம் விளையாட்டின் மீது ஒருவித விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகிறது.


Advertisement

ஏற்கனவே, இந்திய அணியில் கலக்கி வரும் அஷ்வின், இந்த ஆண்டு ஐபிஎல்-யில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அறிவிக்கபட்டதின் மகிழ்ச்சி அடங்குவதற்குள் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக அணிநிர்வாகம் அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் வட மாநில இருஅணிகளை வழிநடத்த இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்த பெருமைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு 20 ஒவர் கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாட தேர்வான தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகிய மூவரும் கலக்கி வருகின்றனர்.    

விஜய் சங்கர்;


Advertisement

விஜய் சங்கர் அறிமுகமாகும் முதல் சர்வதேசப் போட்டி இதுவே. ரஞ்சி டிராபியில் தமிழகம் சார்பில் சிறப்பாக விளையாடிய போதும் நீண்ட நாட்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். அவரின் முதல் தர போட்டியின் சராசரி 49.17 ஆகும். ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் சிறந்த பீல்டரும் கூட.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில், வங்கதேசத்துடன் நடந்த இரண்டாவது போட்டியில் நான்கு ஓவர்கள் முழுமையாக வீசிய விஜய் சங்கர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். அது நான்கு விக்கெட்டாக இருந்திருக்க வேண்டும். ரெய்னா, சுந்தர் விட்ட கேட்ச்சால் அந்த வாய்ப்பு பறிபோனது. இலங்கை முத்தரப்புத் தொடருக்கு விஜய் சங்கர் பெயர் அறிவிக்கப்பட்டதுமே பாண்ட்யாவுக்கு மாற்றாக இவர் களமிறக்கப்படுகிறார் என்றனர். இதுபற்றி பேசிய அவர் ‘ ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவர்கள். அதனால் யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்’ என்றார். அவர் சொன்னதை போலவே இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டும் வருகிறார். 

வாஷிங்டன் சுந்தர்; 

         

முத்தரப்பு டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகள் விழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், 18 வயதே ஆன வாஷிங்டன் சுந்தர். இவர் தற்போதைய நிலையில் அஷ்வினின் இடத்தை கனகச்சிதமாக நிரப்ப கூடிய வீரராக தெரிகிறார். அதுவும் வங்கதேசத்துடன் இறுதியாக நடந்த போட்டியில் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட் சாய்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். வெற்றிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, வாஷிங்டன் சுந்தரை வெகுவாக பாராட்டினார். புதிய பந்தில் ஸ்பின்னர் ஒருவர் விக்கெட் எடுப்பது எளிதான விஷயமல்ல. ஆனால் அவரின் மேஜிக் பந்து வீச்சால் அது சாத்தியமானது. அவருக்கு என்னுடைய ‘ஹாட்ஸ் ஆஃப்’ என புகழ்ந்து தள்ளினார். இந்த நிலையில் தான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவரின் செயல்பாடுகளை எல்லோரும் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறலாம். 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரை தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், அஷ்வின் ஆகியோர் பெரிய தாக்கத்தை உண்டாக்கி வரும் நிலையில், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அண்மை காலமாக தொடர்ந்து தினேஷ் கார்த்திக் இடம் பெற்று வருகிறார். தற்போது புதுவரவாக வந்துள்ள வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் பச்சத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் விளையாடும் மிக பெரும் கெளவுரவம் கிடைக்கும். 

 


Advertisement

Advertisement
[X] Close