[X] Close

‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கென் வாங்கலெ பார்ப்போம்’ கொம்பு சீவும் டிடிவி தினகரன்   

ttv-dinakaran-special-story-in-puthiya-thalaimurai

டிடிவி தினகரன் பற்றி எழுதுவதற்கே மீடியா உலகத்திற்கு கொஞ்சம் தயங்கம் உள்ளது. அவரது நிலைப்பாட்டை பற்றி விளக்கி எழுதினால் ‘ஹவாலா ஃபார்மூலா’வை காட்டி வசைப்பாடுகிறார்கள் வலைதளவாசிகள். டிடிவி என்றாலே ‘பணம் பாதாளம் வரை பாயுகிறது’ என நினைப்பு மக்கள் மனதில் எப்படியோ விதைக்கப்பட்டுவிட்டது. ஜெயலலிதா மறைவு வரை அவர் தமிழ்நாட்டில் ஒரு ஆக்டிவ் அரசியல்வாதி இல்லை. அவருக்கு என்று கண்ணுக்குத் தெரிந்த வரை கூட்டம் இல்லை. ஜெயலலிதா மறைந்து அடுத்தக்கட்ட காய் நகர்த்தல்கள் நடந்த போதுகூட நேரடியாக அவர் முகம் அரசியல் வட்டாரத்தில் அடிபடவில்லை.


Advertisement

ஜெயலலிதா இறப்புக்குப் பின் அதிமுக பதவியை காப்பாற்ற ஒரு முகம் தேவைப்பட்டது. அந்த முகம் அதிகம் அதிருப்தி இல்லாத ஒரு முகமாக இருக்க வேண்டும் என நினைத்தது அதிமுக அதிகார வட்டாரம். அதற்குப் பழகிய முகமாக பன்னீர் தெரிந்தார். ஏற்கெனவே இரண்டு முறை முதல்வர் நாற்காலி முறிந்துவிழும் ஆபத்து வந்த போது முட்டுக் கொடுத்ததும் இந்த முகம்தானே? ஆகவே முதல்வர் இருக்கைக்கு அவரை அமர்த்தினார்கள். இரவோடு இரவாக முடிவானது இந்தப் பதவி மாற்றம். அதன் பின் பன்னீர் முகம் அதிகார வட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆகவே அதற்குப் பதிலாக வேறு ஒரு முகத்தை முன் மொழிய முடிவு எடுத்தனர். யார் எடுத்தார்? என்ன நடந்தது? எல்லாம் உலகம் அறிந்தக் கதை. ‘கூவத்தூர்’ கூத்துக்கள் எல்லாம் அவ்வளவு லேசில் மக்கள் மனதைவிட்டு அகன்றுவிடுமா என்ன?


Advertisement

ஒரு பக்கம் பதவிக்கு வர சொல்லி சசிகலாவை அழைத்தது இதே அமைச்சர்கள்தான். அதுவரை சசிகலாவின் குரல் எப்படி இருக்கும் என்று கூட அறிந்திராத ‘தியாக வாழ்க்கை’ வாழ்ந்தவரை தித்திக்க தித்திக்க அழைத்தவர்கள் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைபோக நேர்ந்த போது தீயை தலையில் வைக்க துணிந்தார்கள். சசிகலா போயஸ்கார்டனில் இருக்கும் வரை அவருக்கு பன்னீர் பிரச்னை இல்லை. எடப்பாடி பிரச்னை இல்லை. நம்பிக்கை தரும் முகங்களாக இந்த முகங்கள் அவருக்குத் தெரிந்தன. ஆனால் அவர் இனி வெளியே வர முடியாத சிறைக்குள் போய் ஆகவேண்டும் என தெரிய வந்தபோது அவருக்கு நம்பிக்கை தரும் முகமாக டிடிவி தினகரன் தெரிந்தார். அதற்கு எந்த அரசியல் சாயத்தையும் பூச முடியாது. அவர் சசிகலாவுக்கு உறவுக்காரர் என்பது மட்டுமே தகுதியாகக் கொள்ளப்பட்டது.

‘சின்னம்மா’ என்ற அடையாளம் பொதுவாக தமிழ் மனநிலைக்கு கொஞ்சம் நெருடலானதுதான். ‘சித்தி’ என்றால் இன்னும் கூடுதல் வெறுப்பை சம்பாதிக்க வேண்டும். முதலில் சின்னம்மா சின்னம்மா என உருகியவர்கள் பிறகு அவரை ‘வில்லி’யாக சித்தரிக்க தொடங்கிவிட்டார்கள். அவர் பேசினால் எப்படி இருக்கும் என முதலில் ஆவலோடு இருந்தவர்கள் பிறகு அவர் பேசுவதற்கு எல்லாம் எதிர்வினையாற்ற ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான் டிடிவி சிரித்த முகத்தோடு உள்ளே வருகிறார். நமக்கு ஞாபகம் உள்ள வரை அவர் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆகியும் கூட அதிகாரப்பூர்வமாக அதிமுக அலுவலகம் பக்கம் அதிகம் தலை வைத்ததாக தெரிவில்லை. சம்பர்தாயமாக சில காயரியங்கள் நடந்தன. அவ்வளவுதான்.


Advertisement

அவர் பொறுப்புக்கு வந்ததுமே ‘தர்மயுத்தம்’ தலைத்தூக்க தொடங்கிவிட்டது. ஒபிஎஸ் உட்பட பலரும் டிடிவியை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ‘சின்னம்மா’வை எதிர்க்கவில்லை. ஆகவேதான் முதல்வர் பதவியேற்று பல மாதங்கள் ஆன பின்புகூட இபிஎஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சசிகலாவை ‘சின்னம்மா’ என்றார். டிடிவி வருகைக்குப் பிறகு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வந்தது. வெற்றிடத்தை அவர் நிரப்புகிறாரா? இல்லை முதல்வர் பதவியை எட்டிப்பறிக்க திட்டமிடுகிறாரா? என பேச்சுக்கள் அடிபட்டன.

அப்போதுகூட டிடிவி தினகரனுக்கு மக்கள் மனதில் பெரிய மதிப்பு வரவில்லை. அவரை எதிர்த்தவர்கள் உடனே தேர்தல் ஆணையம் படி ஏறினார்கள். கட்சியை முடக்க திட்டம் போட்டார்கள். ஒபிஎஸும் மதுசூதனனும் தாக்கல் செய்த மனுவின் விளைவால் அதிகாரப்பூர்வமான அதிமுகவின் வேட்பாளராக நிற்க முடியாமல் தவித்தார் தினகரன். அவருக்கு அதிமுக அம்மா அணி கிடைத்தது. கூடவே தொப்பி சின்னம் கிடைத்தது. அவரது வெற்றி உறுதி என நிலை வந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் தன் அதிகாரத்தைக் காட்டியது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை முடக்கியது. அப்போதும் தினகரன் பெரியதாக வளரவில்லை. அவர் வழக்கம் போல அரசியல்வாதிகளின் பட்டியலில் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தார். இனி அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை எனும் நிலைமையே தொடர்ந்தது.

டிடிவியின் ஹைலைட் எங்கே ஆரம்பித்தது தெரியுமா? அவர் கோ பூஜை செய்தபோதுதான். அவரிடம் கட்சி இல்லை. ஆட்சி பலம் இல்லை. ஆனால் யாரோ சில சக்திகள் அவர் வளர்ச்சியை மிக வேகமாக முடக்க பார்த்தார்கள். அந்த எதிர் அலையில் எடப்பாடி, ஓபிஎஸ் கூட்டாக நின்றனர். தனியாக நின்று கொண்டு ‘துரோகத்தை’ ஒழிக்கப் போராடுவேன் என்றார் தினகரன். 18 எம்எல்ஏக்கள் கூட நின்றனர். இன்னும் கண்ணுக்குத் தெரியாத சிலிப்பர் செல் இருப்பதாக அவர் கூறுகிறார். அதில் உண்மை இல்லை என கூற முடியாது. அதற்கு ஆதாரம் கள்ளக்குறிச்சி எம் எல் ஏவின் கடைசி நேர பல்டி.

ஏதோ ஒரு பெரிய அரசியல் சக்தி டிடிவி தினகரன் இல்லாத ஒரு அதிமுகவை விரும்புகிறது. அது பாஜகவாக இருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள். அந்த அரசியல் குற்றச்சாட்டு குறித்து மோடி வாய்த்திறக்கவில்லை. ஆனால் ஒபிஎஸ் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். இப்போது மாநிலம் தாண்டி சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார். அதிமுகவை பிளந்ததை போல என் கட்சியை பிளக்க சதி செய்கிறார் மோடி என அவர் குற்றம் சுமத்துகிறார். மத்தியில் ஆளும் கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள பார்ப்பது ஒரு அரசியல் நடவடிக்கை. காங்கிரஸ் ஒய்எஸ்ஆர் ரெட்டியிடம் காட்டியது. பாஜக தினகரனிடம் காட்டுகிறது. மாறிமாறி அவர் குடும்பத்தை சிபிஐ ரெய்டுக்குள் கொண்டு வந்தாலும் அவர் சிரித்துக் கொண்டே இருக்கிறார். ‘கோ பூஜை நடக்கட்டும் பிறகு வந்து பேட்டித் தருகிறேன்’என்கிறார்.

அரசியல் சாணக்கியர் என கூறப்படும் கருணாநிதியிடம் கூட இந்த அணுகுமுறை இல்லை. அவரது மகள், ராசா கைதின் போது டெல்லியில் செய்தியாளர்கள் அவரை சந்துத்து கேள்வி எழுப்பியபோது வெளிப்படையாக எரிந்து விழுந்தார் கருணாநிதி. அதற்கு நேர்மாறாக இருக்கிறார் தினகரன். இந்தப் பக்குவம் அவரை ஒரு அரசியல் சக்தியாக வளர்த்தெடுத்து வருகிறது. அவர் தலைவராகிவிட்டார் என சொல்லவில்லை. அவர் தலைமைக்கு யாரோ சிலர் அஞ்சுகிறார்கள். அதிகமாக எதிர்க்க வேண்டிய திமுக திகைத்துப் போய் நிற்கிறது. அதிமுகவிற்கு இவ்வளவு அரசியல் நெருக்கடிகள் வந்தக் காலத்தில் திமுக டெபாசிட் இழக்கிறது. செயல் தலைவர் செயலாற்றுகிறாரா என கேட்கிறார்கள் மக்கள்.

எந்தக் கேள்விக்கும் கூலாக பதில் தருவது. அதிகம் பதட்டப்படாமல் கிரெளண்ட்டில் நின்று விளையாடுவது என சகல வித்தைகளை தெரிந்தவராக இருக்கிறார் தினகரன். ஆகவேதான் அவருக்கு கட்சிக்கு வெளியில் ஒரு கண்ணுக்குத் தெரியாத செல்வாக்கு பெருகிக் கொண்டு வருகிறது. ஆயிரம் தான் ‘ஹவாலா ஃபார்மூலா’ என அவரது வெற்றியை எளிமையாக புறந்தள்ளி அதிமுக அதிகாரப்பூர்வ அணியினர் அவருக்கு குக்கர் கொடுக்க கூடாது என மனு போட்டாலும் அவர் கைக்கு குக்கர் வருகிறது.

ஜெயலலிதாவால் 1999ம் ஆண்டு அதிகாரப்பூர்வமான அரசியல் களத்தை அடைந்த டிடிவி தினகரன் அதன் பின் பல வருடங்கள் திரை மறைவில் வாழ்ந்திருக்கிறார். ஜெயலலிதாவால் கட்சியின் பொருளாளர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மக்களவை எம்.பி பதவி என பல பதவிகளை அவர் அனுபவித்திருக்கிறார். 2011 பிறகு சசிகலா குடும்பத்தோடு ஒதுக்கி வைக்கப்படும் வரை தினகரனின் அரசியல் அதிகாரம் திரைமறைவில் இருந்து கொண்டுதான் இருந்துள்ளது.

இந்த நிலையில்தான் தினகரன் இன்று பலரும் எதிர்பார்த்ததை போலவே அமைப்பை தொடங்கி இருக்கிறார். பலரும் அரசியல் வெள்ளத்தில் ஆயிரம் அமைப்புகளில் இதுவும் ஒரு அமைப்பு அல்லது கட்சி என நினைக்கலாம். ஆனால் அப்படி எளிமையாக தினகரன் நினைக்க முடியும் படி இல்லை அவரது கடந்தகால நடவடிக்கைகள். டிவி விளம்பர பாணியில் சொன்னால் ‘நான் வளருகிறேனே மம்மி’ என்ற வாசகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

திமுகவை அரவணைப்பது அதிமுக அதிகார அணியான ஒபிஎஸ் இபிஎஸ்ஸை எதிர்ப்பது என சரியான யூகம் சமைக்கிறார் தினகரன். கூடவே அவர் பாஜகவை எதிரியாக காட்டிக் கொள்வதால் அவரது செல்வாக்கில் லேசாக எடை எகிறுகிறது. ஆனால் அவர் வளர்ந்து வந்ததும் இதே பாஜகவோடு கூட்டணி அமைக்கமாட்டார் என கூர முடியாது. சமீபத்தில் அவருக்குப் பிடித்த தலைவர் வாஜ்பாய் என்கிறார் தினகரன். அதே சமயம் ராகுல் நல்ல தலைவராக வளர்ந்து வருகிறார் என்கிறார். ஆக, அவர் மோடி இல்லாத பாஜக ஒருவேளை வந்தால் சமரசம் அடையலம். அல்லது மோடி கூடவே சமரசம் அடையலாம். 

கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தொப்பியில் நின்ற தினகரன் இல்லை இப்போது இருப்பது. அவர் அறிந்தோ அறியாமலோ ஒரு வார்த்தையை மிக சாமர்த்தியமாக பயன்படுத்தி வருகிறார். ‘அந்தத் துரோக கும்பலை’ அகற்றுவோம் என்கிறார். அரசியலில் துரோகம் சகஜம்தான். மகாபாரதத்தில் பார்க்காத துரோகமா? அதை அறியாதவர் இல்லை தினகரன். ஆனால் அதற்கு அரசியலில் உள்ள செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் அதையே அதிகம் கவனமாக பார்க்கின்றனர். எம்ஜிஆர் திமுகவில் வெளியேற்றப்பட்ட போது அதை மக்கள் துரோகமாகவே கணக்கில் எடுத்து கொண்டனர்.

ஆகவேதான் அவரை இறுதிவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தனர். அதேபோல் எம்ஜிஆர் இறந்த போது சென்ற இறுதி வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்ட போது அதனை மக்கள் துரோகமாக பார்த்தனர். ஆகவே அவருக்கு அடைக்காலம் கொடுத்து அரசியல் அங்கீகாரம் கொடுத்தனர். இன்று தினகரன் மீண்டும் துரோகம் எனும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். அந்தக் காண்டீபம் கண்டிப்பாக பலன் தரும் என அவர் நம்புகிறார். அந்த நம்பிகையில் உண்மை உண்டு.

அதிகாரத்தைதான் மக்கள் தருவார்கள். அதனை ஆட்சியாளர்களாக உள்ளவர்கள் பயன்படுத்தி தனது திறமையை உறுதிப்படுத்த வேண்டும். அதனை எடப்பாடி செய்வாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மெஜாரிட்டியே இல்லாத அரசாக இருந்தும் கூட அவர் இப்போதும் ஆட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். நம்மிடம் அதிக பலம் இல்லை என உணர்ந்ததால்தான் எடப்பாடியுடன் ஒபிஎஸ் ஒட்டிக் கொண்டு நிற்கவேண்டிய நிலமை உண்டானது. இந்த இரு அதிகார சக்திகளையும் சமாளிக்கும் நபராக தினகரன் தீயாக வேலை செய்ய தொடங்கியிருக்கிறார். அவருக்கு அரசியலில் ஒரு இடம் இருக்குமா என்றால் இந்த ஒபிஎஸும் இபிஎஸும் உள்ளவரை தினகரனும் நிச்சயம் ஒரு எதிர் சக்தியாக இருப்பார். அதைதான் இன்றைய அவரது மேலூர் கூட்டம் உறுதி செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் அதிமுகவை அதிகாரப்பூர்வமாக இபிஎஸ்-ஒபிஎஸ் அணிக்கு கொடுத்துவிட்டது. டிசம்பர் 23க்குப் பிறகு அரசியல் ரீதியாக அடையாளத்தை இழந்தார் தினகரன். அவருக்கு துணைப் பெதுச்செயலாளர் பதவி என்ற ஒன்று இல்லாமலே அவர் மோதலை கடைப்பிடித்து வந்தார். ஒபிஎஸின் ‘தர்மயுத்தம்’ ஏறக்குறைய வெற்றி பெற்றுவிட்டது. தினகரனை கட்சிக்குள் வராமல் அவர் காத்துவிட்டார். தனக்கு தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்காத நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் போய்விட்டார் தினகரன். அதன் அறிவுறுத்தல் அடைப்படையிலேயே ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ உதயமாகியுள்ளது. வேகவேகமாக அவர் கூட்டத்தை கூட்டிக் காட்டி இருக்கிறார். இன்று மதுரை மேலூரில் கூடியக் கூட்டத்தை குறைத்துக் காட்ட அரசு முயற்சிக்கும். ஆனால் அதனை  நேரலையில் மக்கள் பார்த்திருக்கிறார்கள். எண்ணிக்கை குறைவு என்றால் அதை நம்பப் போவதில்லை.

இங்கே இன்னொரு கேள்வியையும் நாம் எழுப்பியே ஆக வேண்டும். அரசியலில் தினகரன் மிக நிதானமாக செயல்படுவதால் மட்டும் அவர் நல்லவர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட முடியுமா என்ன? அவர் மீதும் அவரது குடும்ப வட்டாரத்தின் மீதும் முன் வைக்கப்படும் ஊழல் புகார்கள்? முறைகேடு குற்றச்சாட்டுகள் என பலதையும் கணக்கில் சேர்த்தே கணிக்க வேண்டியது உள்ளது. ஆனால் இறுதியாக ஏசுவின் ‘உங்களில் யார் குற்றமற்றவர்கள்? அவர்கள் இவள் மீது கல் எறியுங்கள்’ என்ற வாசகம்தான் நினைவில் வருகிறது. இதையே மக்கள் கேட்க தொடங்கினால் இந்த அரசியல் களத்தில் அழுக்காறு மட்டுமே மிச்சமாக வந்து நிற்கும்.

மேலும் அரசியலில் டிடிவி தினகரன் தலை எடுத்தால் மீண்டும் ஒரு வாரிசுப் போக்கும் தமிழக அரசியலில் நிலைபெறும். அந்தப் போக்கு அரசியல் ரீதியாக ஒருகுறையே. அதை எதிர்த்துதான் பலகாலமாக திமுக மக்கள் மனதில் இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே நிலை அதிமுகவில் தொடர்ந்தால்? நேரடியாக அது வாரிசு அரசியல் இல்லை என்றாலும் அது மறுக்க முடியாத குடும்ப அரசியல் தலைமைக்கு வழி வகுக்கும். ஆனால் இந்த வாதம் இப்போதைக்கு அதிமுகவிற்குள் எடுபடப்போவதில்லை என்றே தோன்றுகிறது.   


Advertisement

Advertisement
[X] Close