Published : 15,Mar 2018 11:04 AM
ஹிந்திக்கு போனது ‘விக்ரம் வேதா’

‘விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி இயக்கத்தில் பெரிய வெற்றியை சம்பாதித்த திரைப்படம் ‘விக்ரம் வேதா’. தமிழில் கிடைத்த வெற்றியை அடுத்து ஹிந்தியில் ரீமேக் ஆகலாம் என செய்தி அடிப்பட்டு வந்தது. ஆனால் அதனை ‘ஒய்நாட் ஸ்டுடியோ’ தயாரிக்குமா? அல்லது வேறு கம்பெனி தயாரிக்குமா என சந்தேகம் நிலவியது. மேலும் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரியே ஹிந்தியில் ரீமேக் செய்வார்களா? அல்லது வேறு இயக்குநர் ஹிந்திக்கு அமர்த்தப்படுவார்களா என்பதிலும் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் இன்று முறைப்படி படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அனில் அம்பானியின் ரிலயன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘ஒய்நாட் ஸ்டுடியோ’ இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஹிந்தியிலும் புஷ்கர் காயத்ரி இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் ஹிந்தியில் மீண்டும் தான் நடிப்பதை உறுதி செய்திருந்தார். ஆனால் அது எந்தக் கதாபாத்திரம் என்பது இன்னும் முடிவாகவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த ரீமேக் செய்தி வெளியானது முதல் ட்விட்டர் ட்ரெண்டில் ‘விக்ரம் வேதா’ இடம் பிடித்துள்ளது.