[X] Close

பாளம் பாளமாக வெடித்து நிற்கும் விவசாயிகளின் பாதங்கள்.. பதில் சொல்லுங்கள் பிரதமர் மோடி அவர்களே?

Maharashtra-farmers-call-off-protests-as-govt-agrees-to-demands--Highlights

முதல் நாள் வரை யாரும் எதிர்பார்க்கவில்லை. செங்கொடியுடன் விவசாயிகள் மேற்கொண்ட பயணம் பலரை பயமுறுத்தியிருக்கிறது. நாசிக்கில் தொடங்கிய பேரணி நாட்டையே நடுநடுங்க வைத்துள்ளது. பாரத் கிசான் சபா உறங்கிய உண்மையை தட்டி எழுப்பியிருக்கிறது. இந்தியா கிசான் கி பாரத் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. பலமான கட்சியாக பாஜக தன் பெயரை தக்க வைத்து வரும் வேளையில் இந்தச் சிகப்பு நிறம் அவர்களை கதிகலங்க வைத்துள்ளது. 

இதனை ‘மராட்டிய விவசாயிகளின் போராட்டம் நகர்புற மாவோஸ்டுகளால் தூண்டிவிடப்பட்டது’என எளிமையாக புறந்தள்ள முயற்சிக்கிறது பாஜக. வழக்கம் போல் நாட்டின் தலைமகனாக விளங்கும் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி மெளனம் காத்து வருகிறார். விவசாயிகளின் வாழ்வில் பற்றி படர்ந்து வரும் வறுமை நோய் குறித்து அவருக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அவர் காசநோயை 2025க்குள் ஒழிக்கும் சபத்தை ஏற்று வழிநடத்த சென்றிருக்கிறார். 


Advertisement

முதல் அறிக்கைபடி 25 ஆயிரம் பேர் திரண்டனர் என்றார்கள். அது மும்பை நகரை எட்டியபோது 50 ஆயிரமாக உயர்ந்ததாகக் கூறினார்கள். மொத்தம் 5 நாள்கள். 180 கிலோ மீட்டர் பேரணி. கால்களில் செருப்புக் கூட போடாமல் பரிதவிக்கும் விவசாயிகள் பாதங்கள் வெடிக்க வெயிலில் நடைப்போட்டு இருக்கிறார்கள். பாளம் பாளமாக வெடித்து சிதறி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றன. நிச்சயம் இந்தப் புகைப்படங்களை பார்க்கும் வருங்கால சந்ததி நம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்தி கேள்வி எழுப்பப் போகிறார்கள். வரலாறு நிச்சயம் நம்மை மன்னிக்கப்போவதில்லை. காது அறுத்த செருப்புக்களை குறியீடாக்கி பலர் முகநூல் பக்கத்தில் புரொஃபைல் படங்களாக வைக்கத் தொடங்கியுள்ளனர். #FarmersMarchToMumbai, #FarmersMarch, #Farmerslongmarch என பல வகைகளில் ஹேஷ்டேக்ஸ் போட்டு இளந்தலைமுறை செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

பேரணியில் 96 வயது முதிர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர் என்கிறது ஒரு தகவல். அவர்களின் பாதங்களில் வெடித்துப் போய் காட்சியளிக்கும் புகைப்படங்கள், நாட்டின் வறட்சியை அப்பட்டமாக படம்பிடித்து காட்டி வருகிறது. முகத்தில் சுறுக்கம், கைகளில் நடுக்கம், பாதங்களில் புரையோடிப்போ உள்ள வறட்சி என பஞ்சப்பராரிகளாக விவசாய மக்கள் வரிசை, வரிசையாக வலம் வருவது உயிரை உறைய வைத்துள்ளது.

மஹாராஷ்டிராவில் மட்டும் இல்லை இந்தப் பஞ்சம். நாட்டின் நாலா திசைகளிலும் வறட்சி தாண்டவமாடுகிறது. ஆகவே இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என நடுத்தர வர்க்கம் ‘நியாயமாக’ பேசத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தப் பஞ்சம் திட்டமிட்ட பஞ்சம். உருவாக்கப்பட்ட பஞ்சம். மூடி மறைக்கப்பட்ட பஞ்சம். அப்படிதான் விவசாய நலனின் அக்கறைக் காட்டி வரும் சாய்நாத் குறிப்பிடுகிறார். 

உண்மை நிலை?

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 2.5 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் கடன் சுமை இப்போது 4.13 கோடியாக உயர்ந்துள்ளது. ஆகவே விவசாய பிரச்னையில் போதிய கவனம் செலுத்தி கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை மாநில அரசால். இது ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதை விட சரியான விலைக் கிடைக்காமல் விலை வீழ்ச்சியால் கீழே விழுந்து கிடக்கிறார்கள் என்கிறது உண்மை நிலை. உண்மையில் 44% விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். நிலைகுலைந்துப் போய் நிற்கிறார்கள். திடீரென்று 50 ரூபாயை எட்டும் தக்காளி சில தினங்களில் 2 கிலோ 2 ரூபாய்க்கு என சரிய தொடங்கிவிடுகிறது. போட்ட முதலயே எடுக்க முடியாமல் கடனில் மூழ்கிப் போகிறார்கள் விவசாயிகள். கடன் சுமையை தள்ளுபடி செய்கிறேன் என்பது ஒப்புக்குதான்.

மஹாராஷ்டிராவில் 10 சதவீத பயிர்க்கடன்கள்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள கடன்கள் அப்படியேதான் தொடர்கிறது. கூடவே விதவிதமான பூச்சிகளின் தொல்லையால் விவசாயம் சீரழிகிறது. முறையான ஒட்டுரகப் பயிர்கள் கண்டறியப்படுவதில்லை. கூடவே பழங்குடி மக்கள் கையில் நிலம் உள்ளது. ஆனால் அதற்கான உரிமையை வன இலாக்கா வைத்துள்ளது. அவர்களுக்குத் தேவை என வரும்போது வைத்துள்ள பயிர்களை அவர்கள் வெட்டி எரிந்துவிடுகிறார்கள். மலைவாழ் மக்கள் ஊர் சந்தியில் வந்து தங்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கித் திரும்புகிறார்கள். நிலத்தை வெறுமனே வேடிக்கைப்பார்க்க மட்டுமே அவர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும் வேளாண்மைக்கு தேவையான கால்நடைகளை பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அவைகளுக்கு முறையான மருத்துவ வசதி இல்லை. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. விளைநிலங்களை தனியார் நிறுவனங்கள் பங்குபோட்டுக் கொள்வதால் இவர்களின் பரப்பளவு குறைந்து கொண்டே போகிறது. உழைக்க வேண்டிய அவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உணவுக்கும் வழியற்று வருகிறார்கள்.

புள்ளி விபரங்கள்?

நாட்டின் விவசாயிகள் தற்கொலை பற்றி வரும் தவல்கள் அனைத்தும் நம்பகத்தனையற்றவை என்கிறார் பத்திரிகையாளர் சாய்நாத். 2015ஆம் ஆண்டில் ராஜஸ்தான்: 76, மத்திய பிரதேசன்: 1.290, குஜராத்: 307, சத்தீஸ்கர்: 954, தெலுங்கானா: 1400, மஹாராஷ்டிரா: 4291, கர்நாடகா: 1569, தமிழ்நாடு: 606, கேரளா: 210 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக என்சிஆர்பி அறிக்கை சொல்கிறது. 2009ல் 17,368 ஆக இருந்த தற்கொலை 2015ல் 12,602 ஆக குறைந்துள்ளது. அறிக்கையின் படி பார்த்தால் மகிழ்ச்சி வரலாம். 

ஆனால் உண்மைநிலை அதுவல்ல; தற்கொலைகளை தடுக்க முடியாத அரசு என்ன செய்கிறது தெரியுமா? முறையாக கிடைக்கும் தகவல்களை பதிவு செய்வதில்லை. அதனை மூடி மறைப்பதன் மூலம் ஆண்டு அறிக்கையில் எண்ணிக்கையை குறைத்து பதிவிட்டு விடுகிறார்கள். இதனை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்புகிறார் சாய்நாத். ஆகவேதான் உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த 12 ஆயிரம் விவசாயிகள் பற்றி கேள்வி எழுப்பியது. ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திராந்த், சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட நீதிபதிகள் நியாயம் கேட்டு அரசை தட்டி எழுப்பினர். பொதுவாக வறுமையினால் விவசாயி இறக்கிறார் என்பதே பொய். அவர்கள் வருமானம் இல்லாமல் இறக்கிறார்கள் என்றனர் நீதிபதிகள். 

வறுமையினால் சாகும் விவசாயிகள் ஒருபுறம். ‘காணாமல்’ போகும் விவசாயிகளின் புள்ளி விவரம் உயர்ந்து கொண்டே போவது மற்றொரு புறம். 1991 முதல் 2011 வரை ஒன்றரை கோடி விவயசாயிகள் காணாமல் போய் உள்ளனர் என்கிறது ஒரு அதிர்ச்சி தகவல். 77 லட்சம் விவசாயிகள் தங்களின் விவசாய பணியைவிட்டே வெளியேறியிருக்கிறார்கள் என்கிறது திட்ட கமிஷன் அறிக்கை. இந்த 22 வருடங்களில் நாள் ஒன்றுக்கு 2,035 விவசாயிகள் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது.

சாய்நாத் தரும் தகவலின் படி நாட்டில் தற்சமயம் 8 சதவீதம் பேர்தான் விவசாயத்தில் உள்ளனர். ஆனால் அதுவே பெருந்தொகை. விவரித்து சொன்னால் 80 லட்சம் பேர். முறையான விலை கிடைக்காதது, நிலத்தை வைத்து விவசாயம் செய்ய முடியாதது, நீர் ஆதாரம் இல்லாமல் போவது என பல பிரச்னைகளால் நாட்டில் கெளரவமாக உணவு உற்பத்தியில் ஈடுபட வேண்டிய விவசாயிகள், கேண்டீன்களில் தட்டுக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். தோசை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூலி ஆட்களாகக் கட்டிட வேலைக்குப் போய் வருகிறார்கள். பெரிய பெரிய பன்னாட்டு கம்பெனிகளில் தரையை சுத்தம் செய்பவர்களாக பஞ்சம் பிழைத்து வருகிறார்கள் என்கிறார் சாய்நாத். 

நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் யாருமே விவசாயிகள் இல்லை என்கிறது 2014 குற்ற ஆவணக் காப்பகம். அதன்படி தற்கொலை விபரம் பூஜ்ஜியம். ஆனால் 2014 தைப் பொங்கல் அன்று 7 விவசாயிகள் தமிழ்நாட்டில் சாவை தழுவினர். அதை கணக்கில் அரசு ஏற்கவில்லை. சத்தீஸ்கரில் மட்டும் 1555 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் 2001 முதல் 11 வரை 13 லட்சம் விவசாயிகள் இறந்துள்ளதாக விவரம் சொல்கிறார் சாய்நாத். மஹாராஷ்டிரா விதர்பாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் யாரும் வறட்சியினால் சாகவில்லை. அப்போது அங்கே விளைச்சல் அதிகமாக இருந்தது. ஆகவே விலை வீழ்ச்சி நடந்தது. அதனால் மடிந்தனர் என்கிறார் சாய்நாத்.

தமிழ்நாட்டில்?

ஜந்தர் மந்தர் பகுதியில் 100 நாள்களுக்கு மேல் அய்யாகண்ணு தலைமையில் அரை நிர்வாணப் போராட்ட வரை நடத்தியதன் விளைவால்தான் இப்போது மும்பையை அந்தப் பிரச்னை பற்றிக் கொண்டு எரிய வைத்துள்ளது. சிவசேனாவின் ஆதித் தாக்ரே “நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். சிவசேனா இந்த நேரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்யும். நம்முடைய நிறம் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள். நமது கோரிக்கை ஒன்றுதான்” என்று குரல் கொடுத்திருக்கிறார்.

ஆனால் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவின் வாக்குறுதிகள் ஏற்பதாக இல்லை. இந்தப் பேரணி பற்றி அய்யாக்கண்னுவிடம் பேசினோம். அவர், “டெல்லியில் நாங்கள் நடத்திய போராட்டத்தின் போது அன்னாமுல்லா கமிட்டி எடுத்த முடிவின்படிதான் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. எம்.எஸ். சாமிநாதன் ரிப்போர்ட் படி நடந்து கொள்வோம் என்கிறது மாநில அரசு. ஆனால் இந்த மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லையே? தமிழ்நாட்டில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் இருந்தது. 5 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார்கள். இன்னும் 2 ஆயிரம் கோடி பாக்கி இருக்கிறது. உற்பத்தி விலையோடு 15 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறது டைரக்ட் பர்சேஸ் செண்டர். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு மூட்டை நெல் 40 ரூபாய் விற்றபோது எம்எல்ஏவின் சம்பளம் 250 ரூபாய். அது ஆறு மூட்டைக்கான ஊதியம். அப்போது 150 ரூபாய் பேங்க் மேனேஜர் சம்பளம். இன்று ஒரு எம்எல்ஏவிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம். பேங்க் மேனேஜருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளம். இது என்ன நியாயம்?” என்கிறார் அவர். ஆக விலை வீழ்ச்சியால்தான் விவசாயி சாக நேர்கிறது என்பது உறுதியாகிறது. 

2011ல் விவசாயிகள் இல்லாதவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கூறியிருந்தது. காவிரி பிரச்னை, முறையான விலை இல்லாமல், மரபணு மாற்ற விதைகள் என பல விஷயங்கள் விவசாயிகளில் குரலை நெறிக்கும் நேரத்தில் மஹாராஷ்டிரம் விவசாயிகள் தற்கொலையில் முதல் இடம் வகிக்கிறது. ஆனால் அதிக பணக்காரர்கள் வாழும் மாநிலமும் அதுதான். கணக்குகளை தப்பாக கூறிவதன் மூலம் தமிழகம் தப்பித்து வருகிறது. விரைவில் மஹாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு தமிழகம் முன்னேறப் போகிறது என அபாய மணி அடிக்கிறார் சாய்நாத். 

எல்லா நதிகளின் உரிமையையும் தமிழகம் இழந்து வரும் காலத்தில், அது நடக்காது என நம்பிக் கொண்டிருக்க முடியாது நம்மால்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close