Published : 11,Mar 2018 01:33 PM
காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க விமானப்படைக்கு ஆணை: நிர்மலா சீதாராமன்

தேனி அருகே காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க உதவுமாறு விமானப்படைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா
சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் மலையேறும் பயிற்சி
மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில், அனைத்து மாணவிகளும் தீயில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவி
உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாணவிகளை மீட்கும்பொருட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு
விரைந்துள்ளனர். காட்டுத்தீயில் மாணவிகள் சிக்கிய பகுதிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்துள்ளார். அத்துடன்
தேனி மாவட்ட ஆட்சியரும் விரைந்துள்ளார். அதுமட்டுமின்றி தீயணைப்பு, வனத்துறையினர், போலீஸாருடன் கிராம மக்களும்
விரைந்துள்ளனர். சிக்கிய மாணவிகள் அனைவரும் கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் என்பது
தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கு உதவுமாறு நிர்மலா சீதாராமன் ஆணையிட்டுள்ளார். அத்துடன் தேனி
ஆட்சியருடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின்
கோரிக்கையை ஏற்று விமானப்படை தெற்கு கமாண்ட் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் முதற்கட்டமாக 7 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.